இன்று செங்கை ஆழியான் பற்றிய கருத்தரங்கு 'டொராண்டோ' தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த இலக்கியச் சந்திப்பில் நடைபெற்றது. எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர், கவிஞர் வி.கந்தவனம் ஆகியோரை இவ்விதம் நிகழ்வினை நடத்துவதற்காகப் பாராட்ட வேண்டும்.இன்றைய நிகழ்வில் கவிஞர் கந்தவனம் அவர்கள் 'செங்கை ஆழியானின்' கல்விப்பங்களிப்பு பற்றியும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் 'செங்கை ஆழியானின் இலக்கியப் பங்களிப்பு' பற்றியும், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் 'எனது பார்வையில் செங்கை ஆழியான்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கவிஞர் கந்தவனம் தனதுரையில் செங்கை ஆழியான் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டங்களுக்காக எழுதிய நூல்கள் பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். அத்துடன் செங்கை ஆழியான் தொடர்ச்சியாக வாசித்து, கற்று, தனது அறிவை விருத்தி செய்து கொண்டேயிருக்குமொருவர். அதனால்தான் இவ்வளவு எண்ணிக்கையில் அவரால் எழுத முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் வ.ந.கிரிதரன் தனக்குப்பிடித்த செங்கை ஆழியானின் நகைச்சுவை நாவல்கள் , வரலாற்று நாவல்கள் , சமூக நாவல்கள் பற்றிக்குறிப்பிட்டார். அத்துடன் செங்கை ஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நாவலுக்கு எவ்விதம் ஓவியர் செளவின் படைப்பாற்றல் மேலதிகமாக உதவியது என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அத்துடன் நல்லதொரு நகைச்சுவை விவரணச்சித்திரமாக வந்திருக்க வேண்டிய நடந்தாய் வாழி வழுக்கியாறு படைப்பில் , தேவையற்ற உபகதையொன்றைச் சேர்த்ததன் மூலம் செங்கை ஆழியான் ஊறு விளைவித்திருக்கின்றார் என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது. மேலும் செங்கை ஆழியான் தன் படைப்புகள் சீதனம், வறுமை, சாதி போன்ற பிரச்சினைகளை ஒழிப்பதற்கு உதவும் என்று கூறுகிறார். ஆனால் அவரது படைப்புகள் சிலவற்றில் அவற்றுக்கான சந்தர்ப்பம் வந்தபோது , நாவலில் வரும் பாத்திரங்கள் அவ்விதம் நடக்கவில்லையே என்று சுட்டிக்காட்டிய கிரிதரன், இடப்பெயர்வு அவலங்களை விபரிக்கும் முக்கியமானதோர் ஆவணப்படைப்பாக வந்திருக்க வேண்டிய போரே நீ போய் விடு நாவலிலும் தேவையற்ற முறையில் உபகதையொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும் கதாசிரியர் கூற்று, கதை சொல்லியின் கூற்று ஆகியன தன்னிலையில் வரும்; சில நேரங்களில் படர்க்கையில் வரும். பிரதி எழுதப்பட்ட பின் பிழை, திருத்தம் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தனது கருத்தினைத்தெரிவித்தார். அத்துடன் செங்கை ஆழியான் வர்க்கப்போராட்டத்தைப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் காணவில்லையென்றும் , கல்வி, தொழில், செல்வத்தின் மூலம் சாதிப்பிரச்சினையை ஒழிக்க முடியுமென்பது அவரது கருத்து என்பதையும் அவரது படைப்புகளூடு சுட்டிக்காட்டிய கிரிதரன், அது உண்மையாயின் இந்தியாவில் எப்பொழுதோ சாதிப்பிரச்சினை தீர்ந்திருக்க வேண்டுமே என்றார். செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்களில் நந்திக்கடலைச் சங்கிலியனுக்குக் குறியீடாகப் பாவித்திருந்த நந்திக்கடல் உணர்ச்சியின் அடிப்படையில் தனக்குப் பிடித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
நிகழ்வுக்குத் தலைமை வகித்ததோடு , சிறப்புரையும் ஆற்றீய முனைவர் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியானின் இலக்கியப்பங்களிப்பு பற்றி நீண்டதொரு உரையினை ஆற்றினார். தனது உரையினை நிதானமாக, ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கட்டம் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பித்து, ஈழத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளைப்பற்றிய கருத்துகளை எடுத்துரைத்து, அதன் பின் அவர் செங்கை ஆழியானின் இலக்கியப்பங்களிப்பினை ஆராய்ந்த விதம் என்னைக் கவர்ந்தது. அவரது உரையில் என்னைக் கவர்ந்த விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
'ஈழத்தமிழ் இலக்கியத்தின் மூன்று முக்கிய ஜாம்பவான்களான அ.ந.கந்தசாமி (முற்போக்கு இலக்கியம்), எஸ்.பொ. (நற்போக்கு இலக்கியம்) மற்றும் மு,தளையசிங்கம் (பிரபஞ்ச யதார்த்தவாதம்) ஆகியோர் உருவாக்கிய பாதைகளில் பயணித்து அடுத்த கட்டத்துக்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை எடுத்துச்செல்வதற்கிருந்த வாய்ப்பினை செங்கை ஆழியான் தவற விட்டதோடு, எழுத்தை ஜனரசஞ்சக எழுத்து என்ற நிலையை நோக்கி நகர்த்தி விட்டார்'. 'செங்கை ஆழியான் தன்னை வாசிக்கும் வாசகர் வட்டத்துக்காக, அவர்களது திருப்திக்காக எழுதுபவர்'. 'படைப்பாளியுடனான நட்பு விமர்சகரொருவருக்கு பெரும் இக்கட்டினைத்தருவது. ஆனால் விமர்சகர் நட்பையும், திறனாய்வையும் கலந்து விமர்சனத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடாது.' இவை போன்ற கருத்துகளை உள்ளடக்கியதாக அவரது உரை அமைந்திருந்தது. அவரது உரை நவீனத்துவத் தமிழ் இலக்கியம், வெகுசனத் தமிழ் இலக்கியம் போன்றவற்றுக்கான வேறுபாடுகள் போன்றவற்றையும் விளக்குவதாக அமைந்திருந்தது. அத்துடன் ஜீவநதி சஞ்சிகையில் வெளியான சட்டநாதனின் செங்கை ஆழியான் பற்றிய விமர்சனத்தையும் எடுத்துரைத்த முனைவர் தன் வாதத்துக்கு வலு சேர்த்தார்.
ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி பத்திரிகை, மறுமலர்ச்சி சஞ்சிகை மற்றும் சுதந்திரன், வீரகேசரி போன்ற ஊடகங்கள் ஆற்றிய பங்களிப்பினையும் சுட்டிக்காட்ட முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் தவறவில்லை. அத்துடன் செ.கணேசலிங்கனின் செவ்வானம் அவரது மிகச்சிறந்த படைப்பு என்றுரைத்த முனைவர் மண்ணும் மக்களும் அனுபவப்பின்புலம் அற்றதனால் சிறக்கவில்லை என்னும் கருத்துப்படத் தன் வாதத்தை முன் வைத்தார்.
இவ்விதமாகச் செங்கை ஆழியான் மீது விமர்சனங்களை வைத்த முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் செங்கை ஆழியானின் போற்றுதற்குரிய பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். காட்டாறு, வாடைக்காற்று ஆகியன அவரது முக்கியமான படைப்புகள். ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே செங்கை ஆழியானின் படைப்புகளை சுதந்திரனில் வாசித்ததாக நினைவு என்று நினைவு கூர்ந்த முனைவர் அவர் வெளியிட்ட இலக்கியத்தொகுப்புகள் மூலம் அவர் ஆக்கபூர்வமான பங்களிப்பை தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியிருக்கின்றார் என்னும் கருத்துப்படவும் எடுத்துரைத்தார்.
நிகழ்வில் கலாநிதி மைதிலி தயாநிதி, பொறியியலாளர் தயாநிதி, எழுத்தாளர் அகணி, எழுத்தாளர் அகில், மருத்துவர் இலம்போதரன், ஈழத்தமிழ் அரசியலில் நன்கு அறியப்பட்ட கனக மனோகரன், ஈழவேந்தன் ஆகியோர் தம் கருத்துகளை சபையில் முன் வைத்தனர்.
இறுதியில் நிகழ்ந்த எழுத்தாளர் அகில தெரிவித்த கருத்தொன்று சிறு விவாதத்தைத்தோற்றுவித்தது. படைப்பாளிகள் திறனாய்வு செய்வது பற்றிய அவரது கருத்துகள் குறிப்பாக படைப்புத்திறனற்றவர்கள் திறனாய்வுத்துறைக்கு வருகின்றார்கள் என்ற அவரது கூற்று சபையில் சிறு சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப்பதிலளித்த மருத்துவர் இலம்போதரன் படைப்பாளி, திறனாய்வு ஆகியவை பற்றிய தனது கருத்துகளை முன் வைத்தார். ஒரு படைப்பாளிக்குத் திறனாய்வு சம்பந்தமான விடயங்கள் தேவையில்லை என்பது அவர் கருத்தாக் அமைந்திருந்தது.
முனைவர் மைதிலி தயாநிதி ஒரு படைப்பானது கற்பனையான சமூக , அரசியல் போராட்டமொன்றினை மையமாக வைத்து எழுதப்படக்கூடாதா?, படைப்பாளி ஒருவரின் வாழ்க்கை வரலாற்று விபரங்கள் அவரது படைப்புகளை மதிப்பிடுவதற்கு அவசியமா? போன்ற வினாக்களை உள்ளடக்கிய கருத்துகளைக் கூறி இன்னுமொரு சிறு விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இது பற்றிப் பலர் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். கலை, இலக்கியவாதிகள் பலர் கலந்து கொண்ட நிகழ்வு நல்லதொரு பயன் மிக்க இலக்கியப்பொழுதாகக் கழிந்தது மகிழ்ச்சியைத்தருகின்றது.