‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும் இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
‘புலம்யெயர் தமிழர்களின் அடையாளம் எது என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வளவுதூரம் எமது தாய்மொழித் தமிழை பயில்வார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அமெரிக்காவில் யூதமக்கள் அவர்களின் தாயக மொழியான கீபுறு மொழியைத் தெரியாத சமூகமாக வளர்ந்திருப்பதைப்போன்றே புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினர் தமிழ்த் தெரியாத தமிழ்ச் சமூகமாக உருப்பெறும் நிலை உருவாகலாம்’ என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.
‘புலம்பெயர் நாடுகளில் அமைந்துள்ள ஊர்ச்சங்கங்கள் சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. 1960 களில் இருந்த நிலையைவிட இன்று தாயகத்தில் சாதிய வேறுபாடுகள் கூர்மையுற்று வருவதை அறிய முடிகிறது’ என்று ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா கருத்துத் தெரிவித்தார்.
‘புலம் பெயர்நாடுகளிலும் தமிழ் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு சாதியம் என்ற நச்சு நிலையை ஊட்டி வளர்க்கும் போக்கு காணப்படுகின்றது’ என்று ஆனந்தராணி பாலேந்திரா கருத்துத் தெரிவித்தார்.‘தமிழ் சமுதாயத்தில் ஆழ வேரோடியுள்ள சாதி அமைப்பானது எளிதில் மாறப்போவதில்லை. இந்தச் சாதியம் தமிழர்களின் சமூக அமைப்பிலும்ää கருத்தியலிலும் ஆழமாக வேரோடி உள்ளது’ என்று திரு.ரகுபதி கருத்துத் தெரிவித்தார். ‘லண்டனில் தமிழை வளர்ப்பதற்கான முயற்சியில் தமிழர் மேம்பாட்டுப் பேரவையினால் மேற்கொள்ளப்படும் முயற்சி தமிழ் மாணவர்களின் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றது. புலம்பெயர் தமிழ் மக்களிடையே கலாசார ரீதிலும் மனிதாபிமான ரீதியிலும் பலமாற்றங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது’ என்று மாதவி சிவலீலன் தெரிவித்தார்.
‘புலம்பெயா நாடுகளில் தமிழ்மொழிää கலை கலாச்சாரத்தை வளர்ப்பதில் பெற்றோர்கள்; தமது குழந்தைகளுக்கு ஆர்வம் காட்டி வருவது பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் உயர்கல்வி பயிலும்; மாணவர்களிடமும்; இத்தகைய முன்னெடுப்பில் பெற்றோர்கள் அக்கறை காட்டினால் அது சிறப்பாக அமையும்’ என்று நாழிகை ஆசிரியர் மகாலிங்கசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். ஹரோ தமிழ் சந்தியின் சார்பில் வேலணை மத்திய மகாவித்யாலத்தின் பழைய மாணவர் சங்கத் தலைவர் என். சிவராஜா அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.