சிங்களத் திரையுலகின் ஆளுமை பிரசன்ன விதானகே! - முருகபூபதி -
காடும், காட்டை அண்மித்த பிரதேசமும் கொண்ட அந்தச்சிங்களக் கிராமத்தில் ஒரு முதிய விவசாயியின் சிறிய குடும்பம். மனைவி இல்லை. இரண்டு மகள், ஒரு மகன். வானம்பார்த்த பூமி. குடிதண்ணீருக்கும் குளத்தை தேடிச்செல்லவேண்டும். குடும்பத்தின் ஏழ்மையை போக்குவதற்காக மகன் பண்டார இலங்கை இராணுவத்தில் சேர்ந்து உள்நாட்டுப் போர்க்களம் சென்றுவிடுகிறான். விடுதலைப்புலிகளின் ஈழப்போராட்டத்தில் ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் அவன் உடல் சிதறிச்செத்துவிட்டான் என்ற செய்தியுடன், அவனது உடல் மூடிய சவப்பெட்டியில் சீலிடப்பட்டு வருகிறது. அவனது தந்தையான முதியவர் வின்னிஹாமி க்கு கண்பார்வையும் மங்கல். தட்டுத்தடுமாறி, ஊன்றுகோலுடன் நடமாடும் அவருக்கு செவிப்புலன் கூர்மையானது. பறவைகளின் குரலும், குளத்தில் கும்மாளமிட்டு குளிக்கும் சிறுவர்களின் சிரிப்பொலியும் கேட்டு பரவசமடைபவர். ஒரு வாகனத்தில் சவப்பெட்டியை எடுத்துவந்து அந்த குடிசையில் ஒப்படைத்துவிட்டு விடைபெறும் இராணுவத்தினர், உடல் மிகவும் மோசமாக சிதறியிருக்கிறது. அதனால் திறக்கவேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இலங்கையின் தேசியக்கொடி போர்த்தப்பட்ட அந்த சவப்பெட்டியை பார்த்து சகோதரன் பண்டாரவை நினைத்து கதறி அழுகின்றனர் சகோதரிகள். தேசத்தை காக்கச்சென்றவன், சிதறுண்டு வருகிறானே என்ற சோகம் அக்கிராமத்தை சூழ்ந்துவிடுகிறது. குடும்பத்தலைவர் வின்னிஹாமி கண்ணீரே சிந்தாமல் திக்பிரமை பிடித்திருக்கிறார். அந்த சவப்பெட்டியை தடுமாற்றத்துடன் தடவிப்பார்க்கிறார். தேசியக்கொடிதான் அவரது மங்கிய கண்களுக்குத் தெரிகிறது. கிராமத்தின் பௌத்த பிக்கு மற்றும் கிராமத்துப்பாடசாலை ஆசிரியர், கிராம சேவகர் உட்பட பலரும் வந்து முதியவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.