- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
அத்தியாயம் ஒன்று: பயிற்சி முகாமில்..
இரண்டரை, மூன்று ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பனைமரங்களுடன் ,வடலியும் புதர்களையும் கொண்ட காடு பத்தியக் காணி.நெருக்கமான பனை மரங்களையே தூண்களாக்கி தென்னோலைக்கிடுகினால் கூரையும்,கதவுகளும் ,தட்டிகைகளுமாக வாடி போல அமைக்கப்பட்ட நீளக்கொட்டில். இது தான் பயிற்சி எடுப்பவர்களின் தங்குமடம்.கூரையில் பச்சைப் பனை ஓலைகளும் பரப்பி இருக்கிறார்கள்.மேலே இருந்து பார்ப்பவர்கள் கண்டறிய முடியாமல் இருப்பதற்கான மறைப்பு. இந்த முறை பயிற்சி எடுக்க வந்தவர்களில் பதினான்கு,பதினைந்து பேர்கள் , அராலி அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மிகுதியானவர்கள் ,பொன்னாலை, றாத்தலடி, சுளிபுரம், நிற்சாமம்,ஆனைக்கோட்டை ,சங்கானை...என பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள். மொத்தம் நாற்பது பேர்களாவது இருப்பார்கள். பயிற்சி அளிக்கிற சிவா ஆசிரியர் அவர்களோடு தங்கப் போகிறவர். பயிற்சிகளிற்கு உதவியாக சங்கானை அமைப்புப் தோழர்கள் வர இருக்கிறார்கள். ஆனால், அங்கே அவர்களோடு தங்கப் போகிறவர்கள் இல்லை.
" தோழர் சின்ன நேசன், உங்களுக்கு சிலதைச் சொல்லுவார்" என்று அவரைக் காட்டி விட்டு ஆசிரியர் சிரித்தார். "ஹா! ஹா!" என்று சிரித்து விட்டு கொட்டிலின் கிழக்குக் கோடிக்கு பெடியளை அழைத்துச் சென்றார். அடுப்பங்கரை எனத் தெரிந்தது. "இதை முதலில் நீங்கள் சுத்தப்படுத்த வேண்டும்" என்றார். முதலில் பயிற்சி முடித்தவர்கள் கரிகளுடன் அப்படியே விட்டுச் சென்றிருந்தனர். ஓர் ஈர்க்கில் விளக்குமாறையும், சிறிய சாக்குத் துண்டை ஒன்றையும் கொடுத்தார். குப்பையை கூட்டி அள்ளுவதற்கு ஏதுவாக சவல் போன்ற சிறிய கைபிடியுடனான பிளாஸ்டிக் துண்டு. தோழர்கள் ஐந்து நிமிசத்தில் சுத்தப்படுத்தி விட அதை வெளியில் கொண்டு போய்க் கொட்ட கிட்டத்தில் இருந்த ஓலைத் தட்டியையும் தூக்கித் திறந்தார். "அடுப்பை சிலசமயம் இப்படி சுத்தப்படுத்தி விட்டு சமைக்க வேண்டும் " என்றார். தொடர்ந்து" இண்டைக்கு இரவு உங்களுக்கு ஓசிச் சாப்பாடு வரும். நாளையிலிருந்து தான் நீங்கள் தான் சமைத்து சாப்பிடப் போறீர்கள். காலையிலே பாணும் சம்பலும் அடிக்கடி கொண்டு வருவோம். சிலவேளை பட்டினி கிடக்கவும் நேரிடலாம்" என்று சிரித்தார்.