சிறுகதை: என்னைப் பேசச் சொன்னால்.. - முல்லை அமுதன் -
சும்மா இருந்திருக்கலாம். இன்றெனப்ப்பார்த்து மனைவி புத்தகங்களைக் கலைத்து மீள அடுக்கத்தொடங்கினாள். எதிர்பார்க்கவில்லை. காலையிலேயே தேநீருடன் வருபவள் இன்று காணவில்லையேயென இறங்கிவந்தேன் .கடைசிப்படியில் ஒரியோ படுத்திருந்தது. ஒரியோ எங்களது செல்லப்பூனை.வந்து இரண்டுவருடமாகிறது. பிள்ளைகளுக்கு பரீட்சையில் சித்தியடைந்தால் வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தேன். இப்போது பிள்ளைகளுள் ஒன்றாகிவிட்டது. நாய்க்குட்டி ஒன்றிருந்தால் நன்றாக இருக்குமே என்கிறாள் கடைசிப்பெண்.முன்பென்றால் துணிந்து வாங்கிவிடுவேன்.இப்போது வேலைக்குப்போகாத நிலையில் வீட்டிற்குப்பாரமாகிவிட்டேனோ என்கிற நினைப்பு வர ஓய்ந்து போன ஒரு மனநிலையும் வந்துவிட்டது.கம்பீரமாக வேலை,வீடு,நண்பர்கள், புத்தகம்,பிள்ளைகள் என வலம்வந்தவனை முடக்கிப்போட்டுவிட்டது இந்த கொறோனா... வேலைக்கு போகாமல் வீட்டினுள் முடங்க எல்லாம் இழந்ததுபோல... படுக்கை,கணினி என இந்த ஒருவருடம் ஓடிவிட்டது.
'என்னப்பா...இண்டைக்குத் தேத்தண்ணி இல்லையோ?'
பதில் அவளிடமிருந்து கிடைக்கவில்லை.
-'நீங்க ரீமாஸ்டர் தானே..போடுங்கோவன்' என்று சொன்னது மாதிரி
இருந்தது.அவள் சொல்லவில்லை.எண்டைக்கெண்டாலும் சொல்லலாம்.படியில் படுத்திருந்த பூனையும் எழுந்து என்னுடன் வந்தது.அதற்கு சாப்பாட்டைப்போட்டுவிட்டு தேநீர் தயாரிக்கத்தொடங்கினேன்.முந்தி அம்மா குசினிக்குள் வரவிடமாட்டாள்...தானே சமைக்கவேண்டும்..தானே தரவேண்டும்..என்று நினைப்பாள்.அப்பாவும் கண்டிப்பென்றாலும் வேலை ஒண்டும் செய்யவிடமாட்டார்..
'போய் படிக்கிற வேலையைப்பார்' என்பார்.