ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்த காலமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர் நாவேந்தன்..! - பத்மபாரதி -
யூலை 10 நாவேந்தன் நினைவுதினம்
'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.
தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் இளைஞர் அணி முக்கியஸ்தராகக் கட்சிக் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் உணர்வும் தமிழ்த் தேசியவாதமும் வட கிழக்குப் பகுதிகளில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவும் வகை செய்தார். சுதந்திரன் பத்திரிகையில் ஆஸ்தான எழுத்தாளராகப் பல புனைபெயர்களில் பொருள் மிகுந்த கருத்துக்களை அள்ளித் தெளித்தவர். இவர் நடத்திய 'சங்கப்பலகை" என்ற பத்திரிகையில் 'நக்கீரன்" என்ற பெயரில் நாவேந்தன் எழுதிக் குவித்தவை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைத்த வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் தர்க்க முறையான வாதத்திறன் கொண்டவையாக அமைந்திருந்தன. அரசியல் எதிராளிகள் நாவேந்தன் மீது கொண்டிருந்த அச்சமும் நியாயமானதே.
"தமிழ்த் தேசிய வாதம் இன்று உண்மையாக வளர்ச்சியுற்று அகில உலகக் கவனத்தை ஈர்த்ததுடன் தென்னாசியாவில் ஒரு உறுதியான கருத்திற் கொள்ள வேண்டிய சக்தியாக வளர்ந்துள்ளதென்றால் அதில் நாவேந்தனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு." இவ்வாறு தனது கல்லூரிக் காலம் முதல் நாவேந்தனை நன்கறிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.