வழக்கிழந்த நீதிகள் முதுமொழிக்காஞ்சியை முன் வைத்து…. - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -
முன்னுரை
அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி; நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு, சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
முதுமொழிக்காஞ்சி வரலாறு
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சித்திணை குறி்த்து தொல்காப்பியா்,
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே ”
(தொல்காப்பியம் - புறத்திணையியல்,18)
என்று வரையறுக்கிறார். இதில், ‘வீடு, பேறு அடைவதற்குத் தடைகளாகத் திகழும் பல்வேறு நிலையாமைக் கருத்துக்களைச் சான்றோர் எடுத்துரைப்பதே காஞ்சி’ என்ற இலக்கணம் புலப்படுகிறது. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியா் மதுரைக் கூடலூர் கிழார். இவரை புலத்துறை முற்றிய கூடலூா் கிழார் என்றும் அழைப்பா். ‘மூத்தோர் சொற்கள் பலவற்றை தொகுத்துரைக்கும் நூலே முதுமொழிக்காஞ்சி’ என்றும், அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி என்றும் வழங்குவா். இந்நூல் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டு இந்நூலில் 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன அறிவியல் உலகில் மாந்தா் துன்பமின்றி வாழ, மனித வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.. ஆனால் காலத்தின் காரணமாக வழக்கு இழந்த நீதிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலினை முன் வைத்து பின் வரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.