முள்ளிவாய்க்கால் கஞ்சி!
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் இதுவரை இந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் ஆறவில்லை. யுத்தத்துக்குப் பிரதான காரனமாக அமைந்த இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிட்டவில்லை. யுத்தக்குற்றங்களுக்குக் காரணமானவர்களின் மீதான சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காணாமல்போனவர்களுக்கான நீதி இன்னும் கிட்டவில்லை. இன்றும் மக்களின் காணிகள் முற்றாக விடுபடாத நிலைதான் காணப்படுகின்றது. இவற்றுக்கான தீர்வு இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கு மிகவும் அடிப்படை.
அண்மையில் தமிழ்த் தேடியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் 'போர் முடிவடைந்து எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் 15 வருடங்கள் ஆகின்றன. ஆனால் போருக்கு வழிசமைத்த பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் பிறக்கவில்லை. தாம் இன்னும் வலியுடனேயே வாழ்கின்றனர் என்ற தகவலையும், தமக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற செய்தியையுமே இந்த கஞ்சி சிரட்டை ஊடாக தமிழ் மக்கள் வழங்குகின்றனர்.' என்று கூறியிருந்தார். உண்மை. இலங்கையில் நிரந்தரமான சமாதானமும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுமானால் நிரந்தர அரசியல் தீர்வும், நல்லிணக்கச் செயற்பாடுகளும் அவசியம்.