* ஓவியம் - AIமுன்பு வாரத்திற்கு ஒரு தலைப்பு வைரலாகிக் கொண்டிருந்த நிலையில், இப்போதெல்லாம் வாரத்துக்கு குறைந்தது நான்கைந்து தலைப்புகள் Trendingஇல் இடம்பெற்று ஆகிவிடுகின்றன. நீங்கள் செய்யும் எப்பேர்பட்ட தவறும் மிக விரைவில் மறக்கடிகப்படும், அல்லது வேறு ஒரு பிரச்சனையின் காரணமாக ஓரங்கட்டப்படும் என்பது எத்தனை ஆபத்தான ஒன்று. அப்படி நீங்கள் எத்தனை மோசமான ஒரு வழக்கில் சிக்கினாலும், நீங்கள் மிக விரைவில் மக்களால் மறக்கப்படுவிர்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஓவியாவின் வீடியோவும், அதில் கமெண்ட் அடித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதில்களும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக சில நாட்கள் இருந்தது. அதையே மறந்துபோகும் அளவுக்கு A2D என்ற சானல் வைத்திருக்கும் நந்தா அதன் பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தார். அதன் பிறகு தொடர்ந்த அடுத்தடுத்த வைரல் செய்திகளால் அப்படி ஒரு நிகழ்வே நடந்தது போன்ற தடையம் இப்போது இல்லை என்றாகிவிடுகிறது.
அலைபேசிகள், கணினியின் உதிரிபாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருக்கும் பிரச்சனைகள், புதிதாக வெளியாகும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து காணொளிகளை YouTube சானலில் வெளியிடும் நந்தக்குமார் எனும் ’PC Doc நந்தா’ சமூக ஊடகங்களில் மிகப்பிரபலம். கடினமான தொழில்நுட்ப விளக்கங்களையும் கூட வடிவேலு, மதுரை முத்து போன்ற காமெடி நடிகர்களின் காணொளிகளைக்கொண்டு நகைச்சுவையாக எளிய மனிதர்களுக்கும் புரியும் அளவுக்கு பாடமெடுக்க அவரால் முடிகிறது. திரைக்குப்பின் அவருக்காக வேலை செய்ய ஒரு தனி படையே இருக்கிறது.
விருவிருப்பான படத்தொகுப்பு, குழந்தை முகத்துடன் சிரிப்பு, தொழில்நுட்பம் குறித்த updates விரல்நுனியில் வைத்திருக்கும் நந்தாவின் YouTube சானலை, 1.90+ மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் விளைவு, தனது திரைப்படம் வெளியாகும் பட்சத்தில், படத்திற்கான விளம்பரத்திற்கு விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட நிறைய திரைப்பிரபலங்கள் நந்தாவின் சானலுக்கு படையெடுக்க துவங்கினார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபி கேட்கும் ரசிகர்கள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர், பல யூடியூபர்களுக்கும் பிரபலங்களுக்கும் கணினியை தயார்செய்து கொடுக்கும் தொழில்நேர்த்தி என இவரது ஏறுமுகம் எந்த சறுக்கலும் இன்றி உயர்ந்து கொண்டிருந்தது. ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்ற Youtuber காணொளி வெளியிடும் வரை. ஜேசன் சாமுவேல் நந்தாவைப்பற்றி சாட்சிகளுடன் வெளியிட்டிருக்கும் 25 நிமிட காணொளி, கையும் களவுமாக நந்தாவை சமூக ஊடகங்களின் முன்னே நிற்க வைத்தது.
நந்தாவின் ஒவ்வொரு யூடியூப் காணொளிக்கும் இடையில் ”This video is sponsored by Cdkeylabs.com” என்று சொல்லும் போதெல்லாம், பாரதி பாஸ்கர் பேசும் ‘பட்டிமன்றம் ராஜா’ எனும் YouTube சானலின் ஒவ்வொரு காணொளியிலும், ஹட்சன் நிறூவனத்தின் தயிர் விளம்பரம் வருவதைப்போல, ஒரு நிறுவனத்தை நீண்ட கால அடிப்படையில் விளம்பரத்திற்கான குத்தகைக்கு எடுத்துக்கொண்டார் போல என்று நினைத்தேன்.
இப்போது அந்த ‘Cdkeylabs.com’ என்ற நிறுவனமே நந்தாவுடையது என்று வைக்கப்படும் வாதம் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியாகவே இருந்தாலும், அதில் தவறு ஒன்றுமில்லை. எத்தனையோ நிறுவனங்கள் சத்தமே இல்லாமல், வேறு ஒரு பெயரில் நிறுவங்களை நடத்திகொண்டு தான் இருக்கின்றன. தனது பதவியை பயன்படுத்தி எத்தனை மந்திரிகள் தங்கள் பினாமிகளுக்கு கான்ட்ரேக்ட் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். அது போல, தனது சானலின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகியிருப்பதால் அதை தனது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கிறார் நந்தா.
இதில் பிரச்சனை என்னவென்றால், அந்த இணையதளம் ஒரு அதிகாரப்பூர்வமான License Key தரும் நிறுவனம் இல்லை என்பதும், அவர்கள் License Keyகளை விற்றுக்கொண்டிருப்பதிலும் இருக்கும் சட்ட் சிக்கல் தான். முழுமையாக அது பற்றிய விபரங்கள் வெளிவராததில் ஒன்று மட்டும் தெளிவானது. இந்த License Keyகளை இனிமேல் அவர்களால் விற்க முடியாது. இதற்கு மன்னிப்பு தெரிவித்து அவரும் ஒரு காணொளியை வெளியிட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார், ஓரளவு அது வேலையும் செய்தது. இப்போது அந்த சானலை சென்று பார்த்தீர்கள் என்றால், அப்படி ஒரு சம்பவம் நடந்ததிற்கான எந்த அறிகுறியும் தெரியாத அளவிற்கு, சூழல் மாறியிருக்கிறது.
ஆனால், அப்போதைய காலகட்டத்தில் இந்த பிரச்சனை குறித்த பலரின் பதிவில் நான் கண்ட கோபம் என்னவென்றால், ”அடுத்தவங்க பண்ற ஊழலை பத்தி பேசி வீடியோ போடுறியே! நீ மட்டும் என்ன யோக்கியமா?” என்பது மட்டுமே.
இது தமிழர்கள் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான வியாதி. அடுத்தவனின் யோக்கியதையை கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பது. பிரச்சனை வந்தால் அதன் வேரை தேடாமல் கிளையை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குவதால் எந்தப்பயனும் இல்லை. யோக்கியவான்களால் மட்டும் தான் ஒரு தவறை சுட்டிக்காட்ட முடியும் என்றால், நம் சமுதாயத்தில் ஒருவரால் கூட கை உயர்த்த முடியாது. “அதற்காக, அவரைப் பற்றி பேசவே கூடாதா? விமர்சிக்கக்கூடாதா?” என்றால் தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் எதன் அடிப்படையில்?
”வெளியாகும் பல திரைப்படங்களின் விளம்பரத்திற்கு உங்கள் சானலை அணுகும் அளவுக்கு ஒரு தொழில் முனைவோராக நீங்கள் உயர்ந்திருக்கும் பட்சத்தில், உங்களை நம்பும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நீங்கள் இப்படி ஏமாற்றலாமா? நாளை இதுவே உங்கள் பின்னால் வருபவர்களுக்கு முன்னுதாரணம் ஆகிவிடாதா!” என்பது தான் நாம் அவரிடம் வைக்க வேண்டிய கேள்வி.
இது போன்ற பல்வேறு வகையான ஊழல்களில் Peter K, Mabu Crush, Prankster Rahul, Amala Shaji, அவர் தங்கை Amritha Shaji, டைலர் அக்கா (Dayalu Designs), கேப்ரில்லா (பிக்பாஸ்) போன்ற Instagram influencerகளும், நிதி அகர்வால் (ஈஸ்வரன்), ஐஸ்வர்யா மேனன் (நான் சிரித்தால்), தீபா பாலு (‘Heart Beat‘ Web series), மிர்னா மேனன் (ஜெயிலர்), பிரக்யா நாக்ரா (ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’) போன்ற நடிகைகளும் கூட ஈடுபட்டிருகிறார்கள்.
இந்த ஊழல்களுக்கெல்லாம் சீனியரான ரம்மி விளையாட்டிற்கு விளம்பரம் செய்த மேற்குறிப்பிட்ட பல ஆன்லைன் பிரபலங்களால் 2017-2021 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் ஏழு பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் (இந்தியன் எக்ஸ்பிரஸ்). 2023 இல் இது 38 ஆக உயர்ந்திருக்கிறது (bplive). (ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாத சரத்குமார் ஆன்லைன் ரம்மியின் விளம்பர முகமாக மாறியிருக்கிறார்). இதில், அமலா ஷாஜி விவகாரம் மட்டும் பெரிதாக வெடித்ததில் நந்தாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு விதத்தில் அது நல்லதும் கூட. ஏனென்றால்,
போலிக்கணக்கில் யாரென்றே தெரியாத ஒரு ஒருவர் பெரிய தொகை கொடுத்ததால், காசுக்காக தன்னிடமிருக்கும் மில்லியன் வாசகர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ‘எவன் செத்தால் எனக்கென்ன?’ என்ற சிந்தனையில் அவர்களை பலியாடாக்கிவிட்டு, “நான் Ananya Forex என்பவரிடம் 1000 ரூபாய் கொடுத்தேன் பல மடங்காக மாற்றிக்கொடுத்தார். நீங்களும் அவரை தொடர்புகொண்டு பணம் சம்பாதியுங்கள்” என்று பணம் கொடுத்தவருக்காக அமலா ஷாஜி விளம்பரம் செய்திருக்கிறார். இதை நம்பி பணம் போட்ட பலரும் ஏமாந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை முயற்சி வரைக்கும் கூட சென்றிருக்கிறார்கள்.
இப்பிரச்சனை, தொலைக்காட்சியில் செய்தியாக வரும் அளவுக்கு தீவிரமானது. தன்னை பின் தொடர்பவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மால் ஒரு பிரச்சனை எனும் போது, யாராக இருந்தாலும் அப்பிரச்சனையை சரி செய்ய முடியாவிட்டாலும் காது கொடுத்தாவது கேட்பார்கள். அல்லது அது குறித்த தனது வருத்தத்தை பகிர்வார்கள். ஆனால் துளியும் பதட்டமின்றி, “நான் சொன்னா உங்களுக்கு எங்க போச்சு அறிவு” என்ற பாணியில் பொறுப்பே இல்லாமல் பதில் அளித்திருக்கிறார் அமலா ஷாஜி. இவரைப்பற்றி நந்தா வெளியிட்ட காணொளி மட்டும் 1 மில்லியன் பேருக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது என்பதில் இருந்தே இவ்வழக்கின் தீவிரம் உங்களுக்குப்புரியும் என்று நினைக்கிறேன்.
அமலா ஷாஜியின் ஊழல் தெரிந்த பின்னாலும், அவர் கொடுத்திருக்கும் திமிரான பதில்களாலும், அவரை தொடரும் வாசகர்கள் குறையும் என்று பார்த்தால், இப்போது இன்னமும் கூடிவிட்டது. இதுவரை தெரியாதவர்கள் கூட இந்த செய்திகளை பார்த்துவிட்டு புதிதாக பின்தொடர ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் பார்த்தால் தலையில் அடித்துக்கொள்வதை தவிர, வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இது போன்ற ஏமாறுவதற்கென்றே சேருகின்ற கூட்டத்தை வைத்திருக்கும் அமலா ஷாஜி போன்றவர்களுக்கு ஏமாற்றுவதற்கு பெரிதும் மெனக்கெடத் தேவையில்லை.
ஒரு சமூகம் இத்தனை பலவீனமான மனிதர்களால் சூழ்ந்திருப்பதால் தான் அமலா ஷாஜிக்கோ, நந்தாவுக்கோ தவறு செய்வதில் பெரிய பயம் இல்லை என நினைக்கிறேன். மேலும், இணைய குற்றங்களுக்கான தண்டனைகள் இன்னும் இந்தியாவில் தீவிரமாக செயல்பாட்டில் வராத பட்சத்திலும், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான குற்றங்களாலும் இது போன்ற குற்றங்களும் பத்தோடு பதினொன்றாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இன்ஸ்டாகிராம் Statusஇல் வீடியோவாக பேசினால் தானே அதை பதிவு செய்து வழக்கு போடுகிறார்கள்! இதனால், இப்போது நூதனமாக எல்லோரையும் தனது வாட்சாப் சானலை பின் தொடர வைத்திருக்கிறார் அமலா ஷாஜி. அதிலும் 9.3 மில்லியன் பேர் பைத்தியம் போல பின்தொடர்கிறார்கள். அங்கே தனது ஊழல்களை ஆடியோ வடிவில் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார். ஆனால், படுகிரிமினல் தனமாக ஒரு வாரம் கழித்து, பேசிய அந்த ஆடியோக்களையும், அந்த இணைப்புகளையும் அழித்து விடுகிறார் அமலா ஷாஜி. ஒருவேளை வருங்காலத்தில், வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் வீடியோ ஆதாரம் வேண்டுமல்லவா. அதனால் தான் இந்த திருட்டு வேலை. முதல் தவறு கூட, ஏதோ சிறுபிள்ளை தெரியாமல் செய்திருக்கலாம் என்று சொன்னால் நம்பலாம். ஆனால் அடுத்தடுத்து செய்வதுமா?
அதிக Followers வர என்ன செய்ய வேண்டும், என்ன செய்தால் பணம் வரும், எப்படி பணம் சம்பாதிக்கலாம், பிரச்சனை வருமா, வந்தால் எப்படி தப்பிக்கலாம், வழக்கை எப்படி திசை திருப்பலாம் என்கின்ற எல்லா சூழ்ச்சியும் இந்த 2k தலைமுறை விஷ பாட்டில்களுக்கு நன்றாகத் தெரிகிறது.
இவன் எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்குவான். திருப்பி அடிக்க மாட்டான் என தெரிந்துகொள்ளும் எவரும் அதன் மூலம் ஆதாயம் தேடவே நினைப்பார்கள். அதை விட, இன்னோர் பிரச்சனை வந்தால் பழைய பிரச்சனை காணாமல் போய் விடுவதால் யாரைப்பற்றி யார் பேசினாலும் அது சில நாள் தீனி மட்டுமே.
சில நாள் முன்பு மெரீனா ‘ஏர் ஷோ’ குளறுபடி, நேற்று ஓவியா, இன்று நந்தா, நாளை இன்னொருவர். இதனால் விரைவில் நாம் மறக்கடிக்கப்படுவோம் எனும் போது, ”எவ்வளவு தான் தவறு செய்தால் என்ன! கொஞ்ச நாள் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள்” என்ற அலட்சியம் மக்கள் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்துவிடுகின்றது. இந்த அலட்சியம் மக்களிடம் ஏற்கனவே நேர்மை மீதிருக்கும் அதிருப்தியை இன்னும் அதிகப்படுத்துவதுடன், இதுக்கு மேல நல்லவனா இருந்து என்ன பயன் என்ற விரக்தியுடன் அவர்களையும் சுயநலத்துடன் இயங்க வைத்துவிடும். அமலா ஷாஜியோடு ஊழலில் பேசப்பட்ட பல மாடல்களும், நடிகைகளுக்குமே அது தான் நடந்தது. அந்த வழக்கில் தொடர்பில் இருந்த யாரைப்பற்றியும் இப்போது நமக்கு நினைவில் இருப்பதில்லை.
நாளை நந்தா போல, அமலா ஷாஜி போல இன்னோர் நபர் வருவார். அவரையும் இப்படித்தான் விமர்சனம் செய்வோம். மீம் போடுவோம். அதற்குள் நம்மை வைத்து நிறைய சம்பாதித்துவிட்டு கிளம்பிவிடுவார். அவருக்குப்பின் இன்னோர் நபர். இப்படியே முடிவிலியாய் சுழல்வதால் தனிமனிதர்கள் மட்டுமே லாபமடைவார்களே தவிர, சமூகத்திற்கு எந்தவித பயனும் இல்லை. யார் வந்தால் என்ன? நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் கை விட்டுவிட்டால், இது போன்ற ஊழல்கள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
தவறுகளை தொடர்ந்து ஏற்கும் ஒரு சமூகம், தங்கள் சுயலாபத்துக்காக இன்னோருவரின் தவறை சட்டை செய்யாத ஒரு சமூகம், இறுதியாக தவறு செய்வதை Normalize செய்கின்ற, மனமெங்கும் நஞ்சு நிறைந்த சுயநலத்தின் உச்சமாக இருக்கும் ஒரு தவறான தலைமுறையைத்தான் உருவாக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.