முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
சுவை அணி
உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் புலனாக விளங்க எட்டு வகையான மெய்ப்பாட்டாலும் நடப்பது சுவை எனும் அலங்காரமாகும்.
“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே”
(தண்டியலங்காரம் 42)
சுவை அணியின் வகை
உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய் வழியாகப் புலப்படுத்தும் தன்மை மெய்ப்பாடு என விளம்புதலாயிற்று. இது எட்டு வகைப்படுதலாகும். இத்தன்மையினை
“அவை தாம்
வீரம் அச்சம், இழைப்போடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே”
(தண்டியலங்காரம் 43)
இதையேத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3)
என்று கூறியுள்ளார்.
கம்பராமாயணத்தில் சுவையணி
கம்பராமாயணத்தில், நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,அச்சம், பெருமிதம்,வெகுளி, உவகை என்று எட்டு வகையாகக் குறிப்பிடுகிறார்.
1.நகைச்சுவை
உள்ளத்துள் தோன்றும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவதாகும். இது எள்ளல், இளமை, பேதமை, மடம் ஆகிய நான்கிடத்தும் தோன்றும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர்.
“எள்ளல் இளமை பேதைமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 4)
நம் எதிரிகள் யானைப்படை இல்லாதவர்கள். தேர்ப்படையும் இல்லாதவர்கள். காலாற்படையும் இல்லாதவர்கள். நிலைத்து நிற்கும் தவ வலிமையும் இல்லாதவர்கள். கூன் வாய்ந்த முதுகினை உடைய சிறு குரங்குக் கூட்டத்தைக் கொண்டு எம்மை வெல்லமுடியும் என்பது நம்முடைய ஆண்மை மிக்க அழகியதேஅல்லவா வெட்கம், வெட்கம்.
“யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்
தானை இலர் நின்றதவம் ஒன்றுமிலர் தாமோ
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை இனிது அன்றோ? “
(இராவணன் மந்திரப் படலம் 74 )
இதிலிருந்து எள்ளலால், நகை ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
2.அழுகைச்சுவை
உள்ளத்தில் உண்டாகும் அவலமாகிய சோகத்தை வெளிப்படுத்துவது. இது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய இடங்களில் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுவர். இதனை ’அழுகை’ எனவும் உரைப்பர்.
“இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவில் கொள்கை அழுகை நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 5)
சீதை களம் காண் படலத்தில் இராவணன் ஏவியபடி சீதையைக் போர்க்களத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இராமன் இறந்து விட்டான் என்று நினைத்தாள் சீதை. கணவனின் அவல நிலையைக் கண்ட சீதை நின்ற நிலையில் இருந்து விழுந்து புரண்டாள். உடல் முழுதும் வியர்வை கொண்டாள். சோர்வுற்றாள். வெதும்பினாள். விழுந்த நிலையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள். தளிர் போன்ற கைகளை நெரித்துச் சிரித்தாள். ஏக்கம் கொண்டாள். மணாளனே என்று அழைத்தாள். அயோத்தி மக்களின் அரசனே என்று அழைத்தாள். எந்த உலகினரும் வந்து வணங்கும் திருவடிவுடைய மன்னனே என்று அழைத்தாள். உடலும் உள்ளமும் தளர்ந்தாள். பின்பு வாய்விட்டு புலம்பத் தொடங்கினாள்.
கணவனின் அவல நிலையைக் கண்ட சீதை தன் முலைகள் மேலே அடித்துக்கொண்டாள். வயிற்றின் மேலே அடித்துக்கொண்டாள். அழுதாள். வணங்கினாள். நெருப்பிலே விழுந்த கொடியைப் போல உடல் சுருண்டாள். மனம் வெதும்பினாள். பதைத்தாள். உருக்குலைந்தாள். மின்னலைப் போலத் துடித்தாள். உயிர் நீங்கிப் போகுமாறு துவண்டாள். மனம் சுழலப் பெற்றாள். துள்ளினாள். துன்பத்தை உயிரோடு ஒன்றாகக் குழைத்தாள். மிகவும் வருந்தினாள்.
“அடித்தாள் முலை மேல் வயிறு அலைத்தாள்
அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த
கொடித்தாள் என்ன மெய் சுருண்டாள்
கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள்
துடித்தாள் மின் போல் உயிர் கரப்பச்
சோர்ந்தாள் சுழன்றாள் துள்ளினாள்
குடித்தாள் துயரை உயிரோடும்
குழைத்தாள் உழைத்தால் குயில் அன்னாள்”
(சீதை களம்காண் படலம் 26 20)
இதிலிருந்து இழப்பால், அவலம் ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
3. இளிவரல் சுவை
ஒன்றன் தன்மையை அருவருப்பு தோன்றும்படி விளக்குவது. இதனையே தொல்காப்பியர் இளிவரல் என்பர். இது மூப்பு, பிணி, வருத்தம், மென்மையாகிய நான்கின் இடமாக பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவார்.
“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 6)
அதிகாயன் வதைப் படலத்தில் சேனைகள் நெருங்கி போரிட்டபோது ஏற்பட்ட சேதத்தைக் குறிப்பிடுகிறார்.
இங்கும் அங்குமாக ஓடிக் கால்கள் வழுக்கிக் கீழே விழுந்தனர்.அரக்கர் அவர்தம் மழுக்கருவிகள்-வேல்கள்-வாள்கள் ஆகியவற்றையும், அவற்றைச் சுமந்த தோள்களும், மூழ்குமாறு, வானர வீரர்கள் அந்த அரக்கர்களின் வலிய உடல்களைக் கலக்கி இரத்த வெள்ளத்தோடு செல்லுமாறு செய்தனர்.
“இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே”
(அதிகாயன் வதைப் படலம் 1765)
இதிலிருந்து வருத்தத்தால் இழிவு ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
4.மருட்கை சுவை
இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் ஆகிய நான்கின் இடமாக தோன்றும் மெய்ப்பாட்டினை உண்டாக்கும் என்று தொல்காப்பியர் கூறுவார் இதனை ’மருட்கை’ என்றும் கூறுவர்.
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 7)
உண்டாட்டுப்படலத்தில் கொலைத் தொழில் ஓர் உருவம் கொண்டது போன்ற கொடிய கண்களையும், ஆடையையும் ஊடுருவித் தோன்றும் அல்குலையும் உடைய ஒருத்தி, தன் கணவனை இறுகத் தழுவினாள்.மலையின் அழகும் தோற்கும்படி திண்மைபெற்ற அக்கணவன் மார்பில், தன் முலைகள் அழுந்தி ஊடுருவிச் சென்றனவோ என்று நினைத்தவள், அவனது முதுகைப் பார்த்தாள்.
“கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள் கணவற் புல்குவாள்
சிலை உரு அழித்தரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள்”
(உண்டாட்டுப்படலம் 972)
இதிலிருந்து புதுமையால் வியப்பு ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது
5.அச்சம் சுவை
அச்சப்படும் தன்மையை எடுத்து விளக்குவதாகும். இதையே தொல்காப்பியர் அணங்கு, விலங்கு, கள்வர், இறை ஆகிய நான்கானும் அச்சம் பிறக்கும் என்று கூறுவார்.
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 8)
அனுமனது வாலிலே இருந்த கொடிய தீ, வாசலில் வைத்த தீயானது அந்த மாளிகைகள் முழுமையும் மொய்த்துச் சூழ்ந்து எரிந்து அழித்தது. அதனால் அஞ்சி நிலை கெட்ட அந்நகரத்தினர் ஊஞ்சல் ஆடுதல் போல முன்னும் பின்னுமாக ஓடி எவ்வழியே செல்வது என்று அறியாமல் வருந்திப் போரொலி செய்தனர்.
“வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கலால்
ஊசலிட்டென ஓடி உலைந்து உளை
பூசலிட்ட இரியல் புரம் எலாம்”
(இலங்கை எரியூட்டு படலம் 1184)
இதிலிருந்து இறை அச்சத்தால் ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
6. பெருமிதம் சுவை
இது பெருமிதத்தைக் குறிக்கும் கல்வி, தறுகண், புகழ், கொடை ஆகிய நான்கும் கொண்டு வீரம் பிறக்கும் என்பார் தொல்காப்பியர்.
“கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 9)
வீடணன் அடைக்கலப்படலத்தில் வீடணன், இராமனிடம் தன்னை அடைக்கலமாகக் கேட்டான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கலாம் என்று இராமன் பேசும்போது,தன்னை அடைக்கலமாக அடைந்த புறாவின் பொருட்டாகத் துலாக்கோல் தட்டில் ஏறித் தன்னையே கொடுக்கத் துணிந்த சிபி என்ற குலமுன்னோனின் பெருமையைப் பிறந்தநாள் முதல் மறந்ததுண்டோ என்று கேட்கிறான். இதில் சிபியின் கொடை குறித்துப் கூறப்பட்டுள்ளது.
“பிறந்த நாள் தொட்டு தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ என்னைச் சரண் என வாழ்கின்றானைத்”
(வீடணன் அடைக்கலப்படலம் 412)
இதிலிருந்து கொடையால் புகழ் பெற்ற சிபியை அறிந்து கொள்ளமுடிகிறது.
7.வெகுளிச் சுவை
சினம் எனும் உருத்திரத்தை வெளிப்படுத்துவதாகும். இது உறுப்புகளை அறுத்தல், குடிக்கோள், (பிறரைத் துன்புறுத்துதல்) அலை (வைதல்) கொலை எனும் நான்கின் வழி பிறக்கும் என்று தொல்காப்பியர் கூறுவார். இதனை ’வெகுளி’ என்று கூறுவர்.
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 10)
சுக்ரீவன் வாலியைப் போருக்கு அழைத்தபோது வாலியும் கிளம்பினான். அப்போது தாரை என்று அழைக்கப்படுகின்ற அமிர்தம் போன்ற மூங்கிலின் இயல்பைத் தன்னிடத்தில் கொண்டவள், வாலியின் வாயிலிருந்து புகை உண்டாக கண்களில் நின்று தோன்றுகின்ற தீயில் தன் கூந்தல் தீயப் பெருவாளாய் போர் செய்வதற்குச் செல்லும் வாலியின் இடையில் தடுத்து விலக்கினாள். கோபத்தில் வாயிலிருந்து புகையும் கண்ணிலிருந்து தீயும் தோன்றி அவள் கூந்தலை எரித்தது.
“ஆயிடைத் தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்
வாயிடைப் புகை வர வாலி கண் வரும்
தீயிடை தன் நெடுங்கூந்தல் தீகின்றாள்”
(வாலி வதை படலம் 248)
இதிலிருந்து வைதலால், உருத்திரம் ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
8. உவகைச்சுவை
காமச்சுவையின் மெய்ப்பாடு தோன்றும்படி அமைக்க பெறுவது ஆகும். இது செல்வம், அறிவு, புணர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கிடத்தும் தோன்றும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். இது உவகை என்னும் மெய்ப்பாடாகக் குறிக்கப்படும்.
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்11)
உண்டாட்டுப் படலத்தில் பந்துக்கு அவள் கை விரல் படுவதாலேயே அழகு பதியும் அத்தகைய விரலை உடைய ஒருத்தி பிரிவால் துயருற்று, அழகனான தன் கணவனிடம் தோழியைத் தூது அனுப்பினாள். அத்தூதுக்கு இணங்கிக் கணவன் திரும்பி வந்தான். அப்போது இவன் தானே விரும்பி வரவில்லை. நான் அழைக்கவே வந்தான் என்னும் கோவத்தில் வாயிற்கதவை மூடி, அவன் உள்ளே புகாதபடி தடுத்தாள்.அவளது எண்ணம் என்ன என்பதை அறியமாட்டோம் ஆனால் அவள்கண்கள் சிவந்ததை அறிவோம்.
“பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள்
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்
வந்தனன் எனக் கடை அடைந்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே”
(உண்டாட்டுப்படலம் 944)
இதிலிருந்து புணர்ச்சியால் காமம் ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகிறது.
முடிவுரை
உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் புலனாக விளங்க எட்டு வகையான மெய்ப்பாட்டாலும் நடப்பது சுவை எனும் அலங்காரமாகும். உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய் வழியாகப் புலப்படுத்தும் தன்மை மெய்ப்பாடு என விளம்புதலாயிற்று. இது எட்டு வகைப்படுதலாகும். இத்தன்மையினை அவை தான் நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எட்டு வகையாகக் குறிப்பிடுகிறார்.
கம்பராமாயணத்தில் எட்டு வகையான சுவைகளும் கூறப்பட்டுள்ளதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை, 2019.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.
5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
https://orcid.org/0000-0002-0895-0460