அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளும் ஆசி. கந்தராஜாவின் எழுத்துகளும்! - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
புனைவிலக்கிய எழுத்தும், ரசனைகளும் இன்றைய இலக்கிய உலகின் முக்கிய பேசுபொருள். புனைவின் கலைத்தளமும் அதன் புரிதலும் வாசகரின் ரசனைக்குரியது மட்டுமன்றி வேறுபடக் கூடியதுமாகும். இதனால் சிறுகதைகள், நாவல் முதலான கலைப் படைப்புகள் பலதரப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது இயல்பானது. இலத்திரனியல் சாதனங்களும், சமூக ஊடகங்களும் மலிந்துவிட்ட இக்காலத்தில் யாதும் ஊரே என்பது போல், எல்லோரும் எழுத்தாளர்களே. அனைவரும் மனங்கவரும் வண்ணமோ புலன்களில் பதியும் வண்ணமோ எழுதுவதில்லை என்பது உண்மைதான். எனினும் இதுதான் இலக்கியத்தின் இலக்கு என்ற முடிவை எடுக்கும் திறன் கொண்டவர்கள் யார்...?, எனும் வினா வாசகர் மனதில் உருவாவது இயல்பானதே. எனது மனதிலும் அவ்வினா உண்டு. இவ்வினாவுக்கு மூலகாரணமாக அமைந்தவர், இன்றைய தமிழ்இலக்கிய உலகின் பெரும் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள். அவரது இணையத்தளத்தில் சமீபகாலத்தில் வெளியான வாசகர் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதியாக கீழ்வரும் கருத்துகள் கூறப்பட்டிருந்தன. கேள்விகள் அவரது இலக்கிய ரசனை பற்றியதும், எழுத்தாளர் முத்துலிங்கத்தின் புனைகதைகளின் ரசனை பற்றியவையும் ஆகும்.
மார்ச் 2, 2021 அன்று, அவரது இணையத்தளப் பதிவொன்றில் 'எழுதுபவர், வாசிப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமிழ்ச் சூழலில் மிக அரியவர். ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவா். அவர் எனக்கு அணுக்கமானவா்தான்' என்ற, ஜெயமோகனது சமீபகால கருத்தானது இலக்கிய மதிப்பீடுகளுக்கும், அவரது இளமைக்கால கருத்துகளுக்கும் முற்றிலும் மாறானது அல்லவா...?என்ற வாசகரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், 'இளமையில் இலக்கிய அழகியல் சார்ந்த அளவுகோல்களை மதவெறி போல் பற்றிக் கொண்டிருந்ததாகவும், இன்று தனது பார்வை விரிந்திருப்பதாகவும்..., தான் சொல்வது தீர்ப்பு அல்ல, ஒரு பார்வை தான்' என்ற பொருள்படப் பதில் கூறியிருந்தார். இந்தக் கூற்று எனக்கு மிகுந்த விருப்பையும், திருப்தியையும் அளித்தது. அதுவரை அவரது இலக்கியக் கருத்துகள் சிலவற்றின் மீது கொண்டிருந்த மனவிலக்கத்தில் இக்கூற்று ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியது. இது வரவேற்க வேண்டிய மனமாற்றமும் கூட. ஒரு வாசகர் என்ற முறையில் அவருக்கு அணுக்கமானவராகவே என்றும் தொடர விரும்புகிறேன். அதே சமயம் வேறு சில தளங்களிலும் இம்மனமாற்றம் ஏற்படுமா என்ற ஆவலையும் கொண்டிருக்கிறேன்.