ஊருக்குள் இரண்டு காளி! - எஸ்.வைத்தீஸ்வரன் -
- தற்போது 'காளி' குறும்படத்தையொட்டி எழுந்துள்ள சர்ச்சையை ஒட்டிய சர்ச்சையொன்று இச்சிறுகதையில் வரும் ஓவியனொருவனின் 'காளி' ஓவியத்துக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இக்கதை எழுதப்பட்டது 2015 ஆம் ஆண்டில் என்பது கவனத்தில் வைக்கத்தக்கது. -
வகுப்பில் கலைகளின் வெவ்வேறு மரபுகள் பற்றியும் அதன் சமூக வரலாற்று முக்கியத்துவங்களையும் பற்றியும் ஆசிரியர் சிக்கலான மொழிப்பிரயோகங்களை உபயோகித்து தன் அகராதி அறிவை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இருக்கையில் நெளிந்தவாறு ஜன்னலுக்கு கீழே வெளியே தெரிந்த திறந்த வெளி சிற்பக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே சிற்பக்கலை பயிலும் மாணவர்கள் சிலர் சிற்பத்தை வடிவப்படுத்துவதில் மௌனமாக செயல்பட்டு வந்தார்கள். அவர்கள் கைவண்ணத்தில் அந்தக் கல் மெல்ல மெல்ல வடிவம் பெற்று புதிய உருவங்களின் சாயல் திகைந்துகொண்டிருந்தது. ஒரு சிற்பம் நிதானமாக உருவாகும் அதிசயத்தை அது எனக்குத் தந்துகொண்டிருந்தது.
வகுப்பு கலைந்தவுடன் நான் கீழே இறங்கி அந்த சிற்பக் கூடத்துக்குப் போனேன். அங்கே நான்கு மாணவர்கள் செதுக்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நான்குமாணவர்களில் ஸவீதாவும் ஒருவர். ஸவிதா இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சிற்பக்கலை மாணவி. பார்ப்பதற்கு சற்றுக் கருப்பாக இருப்பாள். மத்யப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவள் அருமையான மாணவி. அவள் சிற்பம் செதுக்கும்போது அவளை கவனிப்பது மிக உற்சாகமாக இருக்கும். அவள் உடல் மனம் கைகள் அத்தனையும் அந்தக் காரியத்திலேயே கரைந்து போய்விட்டது போல் இருக்கும். சூழலை மறந்து சிற்பத்தை சுற்றிச்சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் அதன் ஒத்திசைவை சரி பார்த்தவண்ணம் அவள் முனைப்புடன் செதுக்கிக்கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்த உயரமான மரங்களின் அடர்த்தியைத் தாண்டி தகிக்கும் வெய்யிலால் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது நெற்றியைத் துடைத்துக் கொண்டவாறு அவள் செயலில் ஈடுபட்டிருந்தாள்.