கம்பராமாயணத்தில் வாழ்வியல் சிந்தனைகள் - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, - (சுழல் - II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரைஅறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதே கம்பராமாயணப் பாவிகம் என்றாலும், அதையும் கடந்து வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கம்பராமாயணத்தால் அறிந்து கொள்ளமுடிகிறது. கம்பராமாயணம் முழுமையும் பார்க்கும்பொழுது நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வியல் நெறிகளையும் எடுத்தியம்புகிறது. கம்பர் தம் இராமாயணத்தில் நேரடியாகவோ,, கதை மாந்தர்கள் மூலமாகவோ வாழ்வியல் நெறிகளைக் கூறிச் சென்றுள்ளார். உலகில் இன்பமும், துன்பமும் இயற்கை என்பதைச் சான்றோர்கள் நன்கு அறிவர். கம்பராமாயணத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஆராய்வோம்.
துன்பத்தையும் அனுபவித்து தான் ஆக வேண்டும்
மனித வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி ஏற்படுவது இயல்பு. சான்றோர்கள் இரண்டையும் ஒரே மாதிரியாகவேக் காண்பார்கள். இராமனைக் காட்டிற்கு அனுப்பியதால் துயருற்ற சுமந்திரன் என்னும் மந்திரியைத் தேற்றினான். பெரிய தர்மமானது முற்பட நின்று கீர்த்தியை நிறுவி இறந்த பின்பும் அழியாமல் நின்று உறுதியைத் தருவது தர்மமே. உலகில் இன்பம் வந்தபொழுது மகிழ்பவர்கள் துன்பம் வந்த பொழுது அதையும் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதனால் நீ துன்பப்படாதே என்று இராமன் தேற்றினான்.