ஆய்வு: சிலம்பு சுட்டும் குறிஞ்சி மக்களின் வாழ்க்கை - முனைவர் மூ.சிந்து -
ஆய்வுச்சுருக்கம்
மக்களால் ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய மனிதனுடைய ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், குறிஞ்சி நிலமான மலையும், மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும், அவர்களுக்குள் உள்ள பல வகையானப் பிரிவுகளையும், நிலத்தின் தன்மையையும், நிலத்தில் வழிபடும் தெய்வமாக விளங்கும் முருகனின் சிறப்பும், வழிபாட்டு முறைகளையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை
மக்கள் ஒருங்கிணைந்து உருவாக்கும் சமூகத்தில் மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. மனிதன் நன்மை, தீமையைப் பகுத்து அவற்றின் வழி செயல்படும் திறனாலேயே உயர்திணையாகச் சுட்டப்பட்டான். “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்னும் தொல்காப்பிய வரிகள் மூலம் மனிதன் ஆறறிவுடைய சிறப்பிற்குரிய திறமானது புலப்படுகிறது.
நோக்கம்
மக்களின் சிறப்பு நாட்டின் சிறப்பாகக் கருத அம்மக்கள் வாழும் நிலங்களுக்கு ஏற்ப பகுக்கப்பட்டனர். மலையும் மலை சார்ந்த பகுதியில் வேட்டையாடுதலைத் தொழிலாக் கொண்டு வாழும் குறவர்களின் வாழ்க்கையையும், அந்நிலத்திற்குரிய சிறப்புகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.