கங்கை அமரனின் இசையில், கவிஞர் முத்துலிங்கத்தின் எழுத்தில், மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா குரலில் ஒலிக்கும் பாடலுக்கு தம் நடிப்பால் உயிரூட்டியிருப்பவர்கள் சுதாகரும், , ராதிகாவும்.
எண்பதுகளில் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் இரயில்' மூலம் அறிமுகமாகி, பிரபலமான திரையுலகக் காதல் சோடிகளிலொன்றாகப் பிரகாசித்தவர்கள் சுதாகரும், ராதிகாவும். தொடர்ந்து 'நிறம் மாறாத பூக்கள்' போன்ற வெற்றிப்படங்களைத் தந்தவர்கள்.
சுதாகருக்காக மலேசியா வாதேவன் பாடிய புகழ் பெற்ற பாடலான 'கிழக்கே போகும் ரயில்' பாடல்கள் மறக்க முடியாதவை. மலேசியா வாசுதேவனை எண்ணியதும் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'கோவில் மணி ஓசை கேட்டதாரு?' பாடல்தான். இதுவும் மலேசியா வாசுதேவன் நடிகர் சுதாகருக்காகப் பாடிய புகழ்பெற்ற பாடல். காதல் தோல்வியால் துவண்டிருக்கும் காதலர் இருவரின் உணர்வுகளை, பிரிவின் துயரினை வெளிப்படுத்தும் கவிஞர் முத்துலிங்கத்தின் இதயத்தை நொருக்கும் வரிகளை உள்ளடக்கியுள்ளது பாடல்.
இப்பாடலின் இறுதி வரிகள் காதலர்களின் துயரை மிகவும் தத்ரூபமாகவே வெளிப்படுத்துகின்றன.
அவன் கேட்கின்றான் 'அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது. ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல. ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும் காலம் இனிமே வாராதோ?' .
அதற்கு திருமணமாகிவிட்ட அவள் கூறுகின்றாள் 'இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம். ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம். அது கூடாம போச்சுதுன்னா என் ராசாவே... நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன். என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்.'
இனிமேல் இப்பிறப்பில் அவளுடன் அவனும், அவனுடன் அவளும் இணைந்து வாழ முடியாது என்பதை உணர்ந்துகொண்ட இயலாமையில் இருவரும் வெந்து துடிப்பதை மிகவும் தத்ரூபமாக வரிகளில் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் அவ்வரிகளுக்குச் சுதாகர், ராதிகா காட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவங்களில் அவர்கள்தம் நடிப்பின் சிறப்பு வெளிப்படுகின்றது. அதுவே பார்ப்பவர், கேட்பவர் இதயங்களை நொருங்கச் செய்கின்றன.
எப்படியோ திரையுலகில் ஒளிர்ந்திருக்க வேண்டிய நடிகர் சுதாகர் தன் நடத்தையால் தன் தலையிலேயே மண் வாரிக்கொண்டது துரதிருஷ்டமானது.
https://www.youtube.com/watch?v=pLJvITuL3cU
கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் வரிகள் முழுமையாக:
ஆண் : பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
பெண் : மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
துடிக்கும் மனச அறிவாயோ
ஆண் : பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)
பெண் : ஆரிராராரோ... ஆரி ராராரோ...
ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ
ஆண் : எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
காலம் இனிமே வாராதோ
பெண் : இன்னோரு ஜென்மம் இருந்தா
அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒன்னா கலந்து
அன்போட இருப்போம்
அது கூடாம போச்சுதுன்னா
என் ராசாவே...
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்
என்னை அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
ஆண் : பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை