1. நாவல்: கருங்காணு! - அ ரங்கசாமி
மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள்.
1940களில் தொடங்கி சுமார் 20 ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல் மலேசிய தமிழர்கள் மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .
இந்த நாவலில் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பாம் ஆயில் எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .
சவுமியா மருத்துவர் அறையிலிருந்து வந்து கொடுத்துப் போன மாத்திரை அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணமயமாக இருந்தன. வர்ணப் புள்ளிகளை கோலத்திற்காய் விட்டு விட்டுப் போன மாதிரி இறைந்து கிடைந்தன.
படுக்கை அறையின் சுத்தமும் வாசமும் அவளுக்குப் பிடித்திருப்பது போல் சுற்றிலும் பார்த்தாள்.சுவற்றில் இருந்த படங்களில் குழந்தைகள் வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் பிரசவம் சீக்கிரம் வந்துவிட்டது என்று நினைத்தாள். இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்று பட்டது. நான் எங்கு அவசரப்பட்டேன். கார்த்தியின் குடிவெறி அவளைப்படுக்கையில் கிடத்தி விடுகிறது. இரவு நேரத்தில் போதை இல்லாமல் அவனால் தூங்க இயலாது என்பது போல்தான் கார்த்தி இருந்தான். சீக்கிரம் கர்ப்பமாகி விட்டாள்.
அவளிடம் மருத்துவர் கேட்ட கேள்வியை அவள் நினைத்துக் கோண்டே இருந்தாள். “ இதற்கு மேல் ஏன் படிக்கலே ” என்று கேட்டார்.
“ முடியலெ.. வசதியில்ல டாக்டர்.”
“இங்க மலேசியாவுலே படிக்க நிறைய வசதிக இருக்கு இது ரெண்டாம் பிள்ளைங்கற ..நல்லா படிக்க வையி.நீ படிக்காட்டியும் ”
கோலாம்பூரின் சுத்தமும் அழகும் பிடித்திருப்பது போல் அந்த அரசு மருத்துவமனையும் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஊரில் என்றால் ஒவ்வொன்றுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். இங்கு எல்லாம் சுலபமாக இருப்பதாக சவுமியாவுக்குத் தோன்றியது.
அவள் கன்னத்தில் முகிழ்த்திருந்த சிறு பரு அவளின் சுண்டு விரலில் தட்டுப்பட்டது. இது என்ன இந்த சமயத்தில் வந்து கிடக்கிறது.முகத்தைக் கண்ணாடியில் பார்க்கிறபோது அருவருப்பாய் பட்டிருக்கிறது.
இரண்டாம் குழந்தையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானமாக நினைத்தாள். அத்தை கூட அப்படித்தான் சொல்லி இருந்தாள். தோட்டக்காட்டில் ஆகும் பிரசவங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வாலை ஆட்டிக் கொண்டே
என்னை ஏறெடுத்துப் பார்த்தது அந்தத் தெருநாய்
திரும்பவும் கண்ணை மூடுவது போல் படுத்துக்கொண்டது
மீண்டும் வேடிக்கையாக வீரியத்துடன் விழித்தது
பசிதான் காரணம் என்று நினைத்தேன்
மனிதர்களைப்போலவே
கொரோணாக் காலத்தின்
உணவுப் பிரச்சினை அதுக்கும்
முன்பெல்லாம்
மனிதர்களின் மிச்ச உணவாலேயே
பசியை போக்கிக் கொண்டதாம்
மனிதனால் கைவிடப்பட்ட
அவமானப்பட்ட
வேதனைப்பட்ட குரலாக
அன்றும் இன்றும் அந்தத் தெருநாய்
முகவுரை :
தமிழில் உள்ள உருபனியல், தொடரியல் கோட்பாடுகளில்; ‘புணர்ச்சி’ பற்றிய கருத்தாக்கங்கள் இன்றியமையாதவையாகும். புணர்ச்சி நிலைகளினைத் தொல்காப்பியம் அறிவியல் கலந்த மொழியியல் நுட்பத்துடன் விளக்கி நிற்கின்றது. தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழ்மொழியின் புணர்ச்சிக் கட்டமைப்பையும் அவற்றின் இயல்புகளையும் ஆராயும் களமாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.
புணர்ச்சி :
எழுத்தோ சொல்லோ நிலைமொழி வருமொழி இடையீட்டில் ஒன்றோடொன்று இணைவதைப் புணர்ச்சி என்னும் கலைச்சொல்லால் குறிப்பிடுவர். “ஒரு வாக்கியத்தில் அல்லது வாக்கியங்களுக்கிடையே காணப்படும் தொடர்களும் சொற்களும் சொற்களில் காணப்படும் பல்வேறு உருபன்களும் தம்முள் தாம் சேரும்போதும் ஏற்படும் சேர்க்கை, மொழிப்புணர்ச்சி அல்லது புணர்ச்சி எனப்படும். இதனைச் சந்தி எனவும் அழைப்பர்” (அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், ப.326) என்று புணர்ச்சியைப் பற்றி ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். புணர்ச்சி இலக்கணம் பற்றித் தொல்காப்பியர் ‘புணரியல்’ என்ற இயலை எழுத்ததிகாரத்தின்கண் யாத்துள்ளார். இப்புணர்ச்சி இலக்கணத்தை மொழியியலாளர்கள் ‘உருபொலியனியல்’ ((Morphophonemics) என்று அழைப்பர். ‘சந்தி’ என்றும் ‘புணர்ச்சி’ என்றும் இது வழங்கலாகின்றது. “இலக்கண நூல்கள் சொற்களின் சேர்க்கையால் (புணர்ச்சி) மாற்றம் ஏற்படுகிறது என்று கொள்ள, மொழியியல் தனிச் சொல்லின் எழுத்து மாற்றமே உருபொலியன் அல்லது சந்தி என்று கொள்கிறது” (சண்முகம், செ.வை., எழுத்திலக்கணக் கோட்பாடு, பக்.203-204) என செ.வை.சண்முகம் குறிப்பிடுகிறார். சொற்களின் தொடரமைவுக்கேற்ப மொழிகள் புணரும்போது எழுத்துக்களில் உண்டாகும் மாற்றம் புணர்ச்சி என்றும் ஒலிமாற்றத்தேவையின் அடிப்படையில் எழுத்துக்காக உண்டாகும் புணர்ச்சியினைச் சந்தி எனவும் கொள்ளலாம். எழுத்துக்களின் புணர்நிலையை அடிப்படையாகக் கொண்டு புணர்வது அகநிலைப்புணர்ச்சி (Internal Assimilation) ஆகும். அதாவது சொற்களுள்ளேயே புணர்தல் என்னும் கோட்பாடமைவது. அகநிலைப்புணர்ச்சி பற்றி இங்கு கூறுவதன் நோக்கம் வேற்றுமை, அல்வழி புணர்ச்சிகளின் விரிவான செய்திகள் சொல்லதிகாரத்தில் அமைந்தாலும், எழுத்துக்களின் புணர்ச்சிதான் உருபொலியனியல் கோட்பாட்டை நெறிப்படுத்துகின்றது என்பதற்காகவாம். எழுத்துக்களின் புணர்ச்சியின் அடுத்தநிலை உருபன்களின் புணர்ச்சி அதாவது மொழிப்புணர்ச்சி ஆகும். இதனைப் புறநிலைப் புணர்ச்சி (External Assimilation) என்பர். முதலீறு, ஈற்றுமுதல் எழுத்துக்களின் புணர்ச்சியைப் புணர்நிலைச் சுட்டு எனவும், பெயர், வினைச் சொற்களின் புணர்ச்சியை மொழிபுணர்இயல்பு எனவும் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.
அறிமுகம்
பாரி 1932-இல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை ஆராய்ந்த பாரிக்கு அவற்றில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஐயம். இந்த ஐயத்தைத் தீர்க்கும் முகமாக அமைந்ததே வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடாகும். இந்த ஐயத்தினைத் தெளிவுப்படுத்தும் முகமாக, பாரி யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணிச் செய்து வாய்மொழிக் காப்பிய பாடல்களைச் சேகரிக்கிறார். அவரது மாணக்கர் லார்டு தொடர்ந்து களப்பணிச் செய்து ஆய்வை முடிக்கின்றார். இவ்விருவரும் உருவாக்கிய ‘கோட்பாடு’ என்ற அடிப்படையில் ‘பாரி–லார்டு கோட்பாடு’ என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தக் கோட்பாட்டில் வாய்பாடு என்பது மையமாக அமைகிறது. இது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.
வாய்பாடுகள் (The Formula)
வாய்பாடு என்பதற்குப் பாரி ‘இன்றியமையாத கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்பு அமைப்பினைக்கொண்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் சில சொற்களின் கூட்டம்’ என்கிறார் (Formula is Group or words which is regularly employed ender the same metrical conditions to express a given essential idea Parry 1960: 30). ‘சி.எம். பௌரா வாய்பாடு’ என்பது எவ்வித மாற்றமுமின்றி ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் உறுதுணையாக வந்து அமைகின்றன எனவும், இவை பெயர், பெயரடைகளின் சேர்க்கைகளாக ஓர் ஆள் (அ) பொருளுடன் தொடர்புபடுத்தப் படுவதும், அவை அடுத்தடுத்த தொடர்கள் (fixed Epithet) எனவும் மீண்டும் வரக்கூடிய தொடர்களை வாய்பாட்டுத் தன்மைபெற்று வரியின் முன் அரையடி, பின் அரையடி, முழுவரி (அ) தொகுதி தொடர் வாய்பாடாக வெளிப்படுவதாக விளக்கம் அளிக்கிறார். தமிழகச் சூழலில் கைலாசபதி ஒப்பியல் முறையப்படி முதன்முதலில் சங்க இலக்கியத்தின் மீது வாய்பாடுகளைப் பொருத்தி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். இவற்றிலிருந்து வாய்பாடு என்பது ஒரு காப்பியத்தில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய யாப்பில் கட்டமைப்பு என்பதை அறியலாம். இந்த வாய்பாட்டில் அடைமொழிகளே மிகுதியாகப் பங்காற்றுகின்றன.
அண்மையில் மறைந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி என்றதும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆரம்பத்தில் நகைச்சுவை வேடங்களில் அவரைப்பாவித்த பாலச்சந்தர் பின்னர் 'இரு கோடுகள்', 'வெள்ளி விழா' போன்ற படங்களில் கதாநாயகியாக அவரைப் பயன்படுத்தினார். 'இரு கோடுக'ளில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று 'இரு கோடுகள்' திரைப்படத்தில் இடம் பெறும் 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' , 'வெள்ளி விழா'வில் வரும் 'காதோடு தான் நான் பேசுவேன்'. இரண்டிலும் அவர் ஜெமினி கணேசனுடன் நடித்திருப்பார்.
உலகின் பல்வேறு பாகங்களிலும் எழுதப்பட்ட இலக்கியத்தின் நாவல், நாடகம், கவிதை, சிறுகதை பல்வேறு வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்துவதுதான் இந்த 'யு டியூப் சான'லின் முக்கிய நோக்கம். இவ்வகையான அறிமுகம் குறிப்புகள் ஒரு விதத்தில் முக்கியமானவை. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் படைப்புகளை அறிந்து கொள்ள, அவற்றைத் தேடி வாசிக்க இக்குறிப்புகள் தூண்டுகின்றன; உதவுகின்றன. இன்னுமொரு விடயம். இவ்வறிமுகக் குறிப்புகளைச் சுவையாக எடுத்துரைக்கின்றார்கள். அதுவும் முக்கியமானது. இத்தளத்துக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/c/WittyGarden/videos
- எழுத்தாளர் முருகபூபதியின் முதலாவது சிறுகதை. 1972 ஜூலை மாதம் '[மல்லிகை'யில் வெளியானது.
நீர்கொழும்பு கடற்கரையோரம்.
பேரிரைச்சலுடன், அலைகள் எகிறி விசிறிக்கொண்டு ஆவேசமுடன் – தாயை நோக்கி ஓடிவரும் சிறு குழந்தையைப்போல, அம் மோட்டார் எஞ்சின் பொருத்திய தெப்பங்கள் கரையை நோக்கி நெருங்குகையில்…. அப்பெருத்த ஒலி ஊளைச்சத்தம் போல் எழுந்து ஓய்கிறது.
கரையில் மோதும் அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் தெப்பங்களும் போட்டுகளும் – அந்த தினமும் சுறாமீனும் பொடி மீனும் சாப்பிட்டதாலும் அச்சாப்பாட்டுக்காகவே உழைத்ததாலுமே மெருகேறியிருந்த கருங்காலி நிறத்து மீனவர்களது கரங்களால் கட்டுப்படுத்தி நிறுத்தப்படுகிறது.
“ செவஸ்தியான் புறகால புடிடா… ம்… ஏலோ….ம்…. ஏலோ…ம்ம்… மத்த அலை வரட்டும், ஆ… வந்திட்டுது… பிடி… ஏலோ…. “ தெப்பத்தின் ஒரு முனையை பிடித்தபடி மணலுக்கு இழுத்து நிறுத்த முயற்சிக்கும் பணியில் பெரும் பலத்தோடு இப்படி கத்துகிறான் அந்தோனி.
கடல்தாயின் அச்செல்வக்குழந்தைகள் மடியைவிட்டு கரையில் இறங்கின. அந்த மீனவர்களது கரங்களும் தோள்களும் என்னமாய் இயங்குகின்றன.! தினவெடுத்த தோள்களின் பலத்தை பார்க்கையில் , கணத்தில் பத்துவயதுச்சிறுவன் இருபது வயதுக்காளையாகி வேலை செய்யும் பக்குவம் அது.
நடு இரவில் தொழிலுக்குப்போகும் மீனவர்கள் மறுநாள் முற்பகலில் கரைக்குத் திரும்புவார்கள். தெப்பங்களையும் எஞ்சின் பொருத்தியுள்ள போட்டுக்களையும் கரைக்கு இழுத்து மணல் மேட்டுக்கு கொண்டு வருவதில் அம்மீனவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பர்.
ஏனெனில் அவர்கள் ஒரே வர்க்கத்தினர் அல்லவா…!
வலையில் சிக்கியிருக்கும் பொடி மீன்களை சற்றுப்பெரிய மீன்களை தரம்பிரித்துப்போடும் வேகமான செயல்பாட்டு அழகு அப்பரம்பரைக்கே உரித்தான பாணிபோலும்.
கப்பிட்டல் மகாராஜா குறூப் நிறுவுனர் திரு. ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் மரணச் செய்தி ஒரு கணம் அதிர்ச்சியாக இருந்தாலும், 1980 களில் என் நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தது. அற்புதமான சிந்தனையாளர், எத்தனையோ போட்டிகள், பொறாமைகளுக்கு மத்தியில் மகாராஜா நிறுவனத்தைத் திறம்படக் கொண்டு நடத்தியவர். தமிழரை மட்டுமல்ல, எல்லா இனத்தவரின் திறமைக்கும் முதலிடம் கொடுத்து, ஒரு குடும்பமாகத் தன்னிடம் பணிபுரிந்த எல்லோரோடும் அன்பாகப் பழகியவர். சுருங்கச் சொன்னால் தமிழரைத் துணிச்சலோடு ‘எதற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல’ என்று இலங்கையின் தலைநகராம் கொழும்பில் தலைநிமிர்ந்து நிற்கவைத்தவர். அவரது திடீர் இழப்பு எமக்கு, எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்களின் சொத்துக்கள் மட்டுமல்ல, பேரினவாதத்தால் உயிர்களும் பறிக்கப்பட்ட மாதம். சொந்த மண்ணிலே நாங்கள் அகதிகளாக்கப்பட்டதும் அப்பொழுதுதான். இந்த இனக்கலவரத்தின் போது, இலங்கையிலே மிகவும் பிரபலமான தமிழர் நிறுவனமான மகாராஜா நிறுவனத்தை அடியோடு வீழ்த்துவதும் பேரினவாதத்தின் முக்கியமான ஒரு நோக்கமாக இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடு பேரினவாதம் அதைச் சாதித்திருந்தது. கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதே அதன் நோக்கமாக இருந்தது. இனக்கலவரத்தின் போது தமிழர்களின் வீட்டு முகவரிகள் காடையர்களுக்கு கொடுக்கப்பட்டு எரியூட்டப்பட்டது போலவே, தமிழர்களின் நிறுவனங்களும், தேடித்தேடி அழிக்கப்பட்டன. ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ என்ற முன்நாள் ஜனாதிபதியின் அறைகூவலுக்குச் செவிசாய்த்த பேரினவாதம் இதை திறம்படச் செய்து முடித்தது. கொழும்பிலும், இரத்மலானையிலும் இருந்த மகாராஜா நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்லோன் பைப், ஜோன் பேர்ணிச்சர் போன்ற ஆறு தொழிற்சாலைகளுக்கு மேல் எரியூட்டி அழிக்கப்பட்டன.
என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.
அவர், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பல தரப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாது. இதிகாச காலப் பாத்திரங்களான கர்ணன், பரதன், அத்துடன் நாரதர். முருகன் என்பதோடு மட்டுமல்லாது சாக்கரட்டிஸ்,ஓதெல்லோ போன்றவர்களையும் எங்கள் கண்முன் நிறுத்தியவர்.. நான் திரைப் படப் பட்டதரியாகப் படிப்பதற்குச் சென்ற காலத்தில்,பல பிரசித்தி பெற்ற படங்களும் அதையொட்டிய நாவல்களும். திரைப் படப் படிப்பு சார்ந்த செமினார்களுக்கு எடுக்கப் படுவது வழக்கம்.சத்தியத்ரேயின் 'பதர் பாஞ்சாலி' என்ற இந்திய கலைப் படம் தொடக்கம்,'சிட்டிசன் கேன்' என்ற மிகவும் பிரசித்தமான அமெரிக்கப் படம்வரை நாங்கள் பார்க்கவேண்டும். கலந்துரையாடவேண்டும். கட்டுரைகள் எழுதவேண்டும், செமினார் செய்யவேண்டும். அப்படியானவற்றில், 1899ல் ஜோசப் கொன்றாட் என்பரால் எழுதப்பட்ட 'ஹார்ட் ஒவ் டார்க்னெஸ்' என்ற நாவலை ஒட்டிய செமினாரும் ஒன்று. அது, 'அப்போகலிப்ஸ் நவ்' என்றொரு படமாக 1979ல் பிரான்ஸிஸ் போர்ட் கொப்பலா என்பரால் எடுக்கப் பட்டிருந்தது.இது ஒரு போர் சார்ந்த உளவியல சிக்கல்களைக் காட்டும் படம்.
அத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்!
'டொராண்டோ' மாநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே! ' ('டுவிங்கிள்! டுவிங்கிள்! லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.
"கண் சிமிட்டும்! கண் சிமிட்டும்! சிறிய நட்சத்திரமே!
நீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.
அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,
வானின் வைரம் போன்று விளங்குகின்றாய்."
அவனுக்கு 'அங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள்! எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள்! எத்தனை எத்தனை கருந்துளைகள்! எத்தனை பிரபஞ்சங்கள்! நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம்! அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது? முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.
‘பிம்பங்கள் வழியே’ எனும் அமைப்பின் ஏற்பாட்டிலான, ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ என்ற தொடரில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர் அமரர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள் பற்றிய இன்றைய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
ஒரு தலைவன் தாம் சார்ந்த மக்களுக்கு நல்லதைச் சொல்பவனாக இருக்க வேண்டும்; சொன்ன நல்லதைச் செய்பவனாக இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லாதவன், ஒரு சிறந்த தலைவனாக இருக்கத் தகுதியற்றவன். நல்லனவற்றைச் சொன்னது மட்டுமன்றி, தாம் சொன்ன நல்லனவற்றை நடைமுறைப்படுத்தி, வாழ்ந்து காட்டிய ஒரு தலைமகனை நினைவு கூருவதற்கென்று நாங்கள் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம்.
சராசரி மனிதர்கள் போலன்றி, மாறுபட்ட விதத்தில் சிந்திக்கவும் செயற்படவும் துணிச்சல் பெற்றவர்களால்தான், மனித முன்னேற்றம் சாத்தியமாகின்றது. அத்தகைய சிந்தனைத் தெளிவும், செயற் திறனும் கொண்டவராக வாழ்ந்துவந்த பிரேம்ஜி அவர்கள், சமூகம், இலக்கியம், அரசியல் ஆகிய முக்கிய தளங்களில் ஆற்றிய பணிகள் குறித்துக் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால், இங்கு தரப்பட்ட நேரத்தை மனதிற்கொண்டு எனது கருத்துகளை “பிரேம்ஜியும் நானும்” என மிகச் சிக்கனமாகவும், “பிரேம்ஜியும் அவரது அரசியல் நிலைப்பாடும்” எனச் சற்றே விரிவாகவும் வகைப்படுத்தி உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கின்றேன்.
பிரேம்ஜி என்றே பெரிதும் அறியப்பட்டு வந்தவரான ஞானசுந்தரம் அவர்களை நான் ஏற்கனவே அறிந்திருந்த போதிலும், 1975ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்போது தான் முதன் முதலாக நேரில் கண்டேன். நன்கு திட்டமிடப்பட்டு அன்றைய தினம் விளைவிக்கப்பட்ட தடையூறுகளைத் தாண்டிக்கடந்த மாநாட்டு ஏற்பாடுகள், துணிச்சலான செயற்பாடுகள், திடமும் தீட்ஷண்யமும் மிகுந்த உரையாடல்கள், இனத்துவ ஒருமைப்பாட்டை இலக்காகக்கொண்டு முன்யோசனையுடன் சமர்ப்பிக்கப்பட்ட 12 அம்சத் திட்டங்கள் போன்றன ஊடாக பிரேம்ஜி என்ற ஆளுமையின் பிரமாண்டத்தையும், அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைசிறந்த மனிதர் என்ற உண்மையையும் அன்று நான் நேரில் கண்டுகொண்டேன்.
இன்று , ஜூலை 27, மருத்துவர் இராஜசுந்தரம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றில், இன்னும் குறிப்பாகக் கூறுவதானால் இலங்கைத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் மருத்துவர் இராஜசுந்தரத்துக்கு முக்கியமான, நிலையானதோரிடமுண்டு. அவரது பங்களிப்பின் முக்கியத்துவம் பன்முகப்பட்டது. 'கட்டடக்கலைஞர்' எஸ்.ஏ.டேவிட்டின் கனவான 'காந்தியச் சமூகம்' என்னும் மானுட விடுதலைக்கான தீர்வுத் திட்டத்தினை வட,கிழக்கில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் முக்கியமான பங்களிப்பு அவருடையது. அப்பங்களிப்பு மூலம் அக்காலகட்டத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையகத்தமிழர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து வதில் முழுமூச்சுடன் உழைத்தவர் அவர். இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத் தமிழர் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அச்சூழலில் தவிர்க்கமுடியாதவாறு காந்தியம் அமைப்பும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. எல்லைப்புறங்களில் நடைபெற்ற குடியேற்றங்கள் மேலும் விரிவு படாமலிருக்கவும், எதிர்காலக் குடியேற்றங்களைத் தடை செய்யும் நோக்கிலும் காந்திய அமைப்பு வடகிழக்கின் எல்லைப்பிரதேசங்களில் அதிகமான குடியேற்றத்திட்டங்களை உருவாக்கியது. இச்சமயத்தில் காந்திய அமைப்பினுள் சந்ததியாரின் வருகை அவ்வமைப்பினைத் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்துவிட்டது. பின்னர் காந்திய ஸ்தாபகர் 'டேவிட் ஐயா' , மருத்துவர் இராஜசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். காந்தியச் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டனர். கனடாவில் வாழ்ந்து மறைந்த சண்முகலிங்கம் அவர்களும் அவர்களிலொருவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவரது அனுபவங்களைப் பதிவு செய்யும்படி கூறுவேன். அவரும் பதிலுக்குப் பதிவு செய்யப்போவதாகக் கூறுவார். இறுதியில் பதிவு செய்யாமலேயே மறைந்து விட்டார்.
சிரித்திரன் சஞ்சிகை மீண்டும் வெளிவருவது தெரிந்ததே. தற்போது உலகமெங்கும் விற்பனையாகும் சிரித்திரன் இதழ்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு இலங்கையில் புது வழியொன்றினைக் கையாள்கின்றார்கள். இளைஞர்கள் எவ்விதம் சிரித்திரன் சஞ்சிகையை மக்களிடத்தில் கொண்டு செல்கின்றார்கள் என்பதை விளக்கும் புகைப்படங்கள் இவை. இவற்றை அனுப்பிய சிரித்திரன் ஆசிரியரின் மகன் ஜீவகனுக்கு நன்றி.
- படுகொலைகள் நடந்த வெலிக்கடைச் சிறைச்சாலை -
மூன்று வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ் பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன். இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப்போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன். நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச்சொன்னார். எனக்கு கதைகேட்பதில் அலாதிப்பிரியம். அவரிடம் அவரது கதைகளைக்கேட்டேன். அனைத்தும் திகிலையும் அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தன. அவர் சொல்லச்சொல்ல கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். உயிருக்காக போராடிய தருணங்களையும் அனுபவித்த சித்திரவதைகளையும் வேதனைக்குரிய விடயங்களையும் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் நடந்த படுகொலைச்சம்பவங்களின்போது உயிர்தப்பியவர்! அவரது வாழ்வில் அந்த இரண்டு நாட்கள் மட்டுமல்ல, அதன்பின்னர் மட்டக்களப்பு சிறையில் நடந்த சம்பவங்களும் மறக்கப்படமுடியாதவை. தமிழகத்தில் தஞ்சமடைந்த மட்டக்களப்பைச்சேர்ந்த இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவுக்கு மட்டக்களப்பு சிறையுடைப்பு (23 செப்டெம்பர் 1983) சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு ஒரு திரைப்படம் எடுக்கும் எண்ணம் இருந்ததாக ஒரு செய்தி முன்னர் கசிந்திருக்கிறது. அதனை படமாக்கவேண்டுமானால், வெலிக்கடை சிறையில் இரண்டு நாட்கள் அடுத்தடுத்து நடந்த படுகொலைகளையும் சித்திரிக்கவேண்டும். சாத்தியமற்ற அந்த முயற்சி கைவிடப்பட்டது. பல நாடுகளில் சிறையுடைப்புகள் நடந்துள்ளன. அந்த உண்மைச்சம்பவங்களின் பின்னணியில் பல ஆங்கிலத் திரைப்படங்களை பார்த்திருப்போம். அத்தகைய ஒரு படத்தில், அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் திரைப்பட நடிகராகவிருந்த டொனால்ட் ரேகன் நடித்திருக்கிறார்.
எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' என்னும் கதை பற்றிய அறிமுகத்தினை 'Witty Garden' என்னும் 'யு டியூப் சன'லில் கேட்டு மகிழுங்கள். இச்சிறுகதை முதலில் தாயகம் (கனடா) பத்திரிகையில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணனால் செய்யப்பட்டது. அதனை இலண்டலிருந்து வெளியான 'தமிழ் டைம்ஸ்' ஆங்கிலச் சஞ்சிகை மீள் பிரசுரம் செய்தது.
இச்சிறுகதை எஸ்.பொ , இந்திரா பார்த்தசாரதி தொகுத்து மித்ர பதிப்பக வெளியீடாக வெளியான 'பனியும் பனையும்' தொகுப்பிலும் வெளியானது.
ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம். கவிதையென எழுதிக் குவிப்போர் ஏராளம். நாவல் எழுதுவோர் மிகக் குறைவு எனலாம். அன்றும் இன்றும் இதே நிலை தான். அன்று கிராமத்தை அடிப்படையாக வைத்து நாவல் எழுதுவோர் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், ஒருவர் கிராமத்தைக் களமாகக்கொண்டு நாவல் எழுதினார். குரும்பசிட்டி என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர், கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்தம் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக நாவலை எழுதினார். 'நடமாடும் நூல்நிலையம்' எனப் போற்றப்பட்ட 'இரசிகமணி' கனக செந்திநாதன் எழுதிய 'விதியின் கை' என்ற இந்நாவல் 05 - 07 - 1953 திகதியிலிருந்து 'ஈழகேசரி'ப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அக்காலத்தில் ஈழத்தில் பிரபல சிறுகதை எழுத்தாளர்களாக விளங்கிய இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன், சோ. சிவபாதசுந்தரம், அ. செ. மு., வரதர், சு. வே., அ. ந. கந்தசாமி ஆகியோரும் நாவல் எழுதவில்லை. (* "அ.செ.மு பிஷ்மன் என்னும் பெயரில் எழுதிய யாத்திரை என்னும் நாவல் ஈழகேசரியில் தொடராக வெளியாகியுள்ளது. அ.ந.கந்தசாமி எழுதிய நாவலான மனக்கண் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியாகியுள்ளது." - பதிவுகள் - ) இந்த நிலையில் கனக செந்திநாதன் அசட்டுத் துணிச்சலுடன் 'விதியின் கை' என்ற நாவலைச் செம்மண் கிராமத்து மணத்துடன் எழுதியுள்ளார். கிராமத்துப் பாடசாலை, கிராமச் சங்கத் தேர்தல், காவடி ஆட்டம், என்பவற்றைப் பின்னணியாகக் கொண்டு, நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்சங்களை, உண்மை நிலையில் சித்தரித்துள்ளார். இந்நாவல் பின்னர் வீரகேசரிப் பதிப்பக வெளியீடாக 1977 மார்ச் மாதம் வெளியாகியது.
ஈழகேசரிக் காலத்துக்குப்பின், வீரகேசரியில் கனக செந்திநாதன் மற்றும் சில எழுத்தாளர்களுடன் சேர்ந்து எழுதிய ''மத்தாப்பு, மணிமகுடம்'' ஆகிய நாவல்கள் வெளியாகியன. இலக்கிய சர்ச்சை, பழைய நூல் அறிமுகம், கொய்த மலர்கள் போன்ற இவரது கட்டுரைகளும் வீரகேசரியில் வெளியாகின. ஈழத்து எழுத்தாளர்கள் - ஈழத்துப் படைப்புகள் என்பதில் மிகக் கரிசனையோடு செயற்பட்டவர் கனக செந்திநாதன்.
ஒரு கலவரம் நாட்டின் தலைவிதியையே மாற்றி அமைத்தது. அடுத்த இருபத்தாறு ஆண்டுகள் நாட்டைக் கொடிய போர்ச்சூழலுக்குள் தள்ளிவிட்டது. நாட்டின் அனைத்து மக்களும் அப்போரின் வெம்மைக்குள் வாடினார்கள். கூடிய அழிவினைத் தமிழர்கள் அடைந்தனர். அந்த இனக்கலவரம் மட்டும் நடைபெறாமலிருந்தால் என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால் அந்த இனக்கலவரம் உருவாகக் காரணமாக இருந்த அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனேயின் அரசு. 77இல் பதவிக்கு வந்தது தொடக்கம் 1983 வரையில் தமிழ் மக்கள் மேல் கொடிய அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. 77இல் பதவிக்கு வந்ததுமே நாட்டில் இனக்கலவரமொன்றை அவரது அரசு உருவாக்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் தமிழர்கள் தமிழீழத்துக்கு வாக்களித்ததும், எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் வந்ததுமே. அக்காலகட்டத்தில் 'போர் என்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்னும் அவரது உரை தொடங்கிய கலவரத்தை மேலும் பற்றியெரிய வைத்தது. அவரது ஆட்சிக்காலத்தில் பயங்கரவாத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்தது. படையினரின் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் இடம் பெற்றன.
யாழ் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. புகழ்பெற்ற நூலகமும் கூடவே எரிந்தது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் கொடிய இனக்கலவரத்தை ஜூலை 83இல் தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டது ஜே.ஆரின் அரசு. ஜே.ஆரின் அமைச்சர்களான சிறில் மத்தியூ உட்படப் பலர் அக்கலவரம் அகோரமாகப் பற்றியெரியக் காரணாமாக விளங்கினர்.
அதன் பின் அடுத்த 26 ஆண்டுகள் நாட்டைப் பேரழிவுக்குள், யுத்தத்தினுள் மூழ்கடிக்க வைத்ததற்கு முக்கிய காரணம் ஜே.ஆர் அரசின் அணுகுமுறையே.
தமிழ் மக்களின் மேல் வன்முறையினை , மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விட்ட ஜே.ஆர் அரசு சிங்கள இடதுசாரிகளை ஒடுக்குவதற்கும் அந்நிலையினைப் பயன்படுத்தத் தவறவில்லை. மக்கள் விடுதலை முன்னணியைத்தடை செய்தது. நாட்டின் 83 இனக்கலவரத்துக்கு இடதுசாரிகளே காரணமென்று பொய்யாகக் குற்றஞ்சாட்டி ஜேவிபி போன்ற கட்சிகள் தலை மறைவாக இயங்கும் நிலையை உருவாக்கியது.
- 2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார். இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம். Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. தமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். -
முனைவர் இரா பிரேமா: வணக்கம், ஜெயந்தி சங்கர். ‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்க நூலின் எனது வாசிப்பு அனுபவம் குறித்து உங்களுடன் உரையாட விருப்பம். -
ஜெயந்தி சங்கர்: உரையாடுவோம், டாக்டர். பிரேமா.
முனைவர் இரா பிரேமா: பெரும்பாலும் இந்தக் கதைகளுடைய பின்னணி இந்தியாவாகவும் இந்திய கிராமங்களாகவும் சிங்கப்பூரைப் பற்றிய வரலாற்றுக் கட்டுமானமாகவோ அல்லது நடப்பியல் ரீதியிலான சில பிரச்சினைகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இவற்றை எழுத எதற்காக ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
ஜெயந்தி சங்கர்: இந்த சிறுகதைகளுக்காக நான் கண்டிப்பாக ஆங்கிலத்தை கையில் எடுக்கவில்லை. மாறாக, ஆங்கிலத்தில் எழுதுவது என்று முடிவெடுத்தபோது எனக்குள் நெடுங்காலமாகவே ஊறிக்கிடந்த சம்பவங்கள், கதைகள், கதாமாந்தர்கள் அம்மொழிக்கேற்ப உருக்கொண்டன. ஆங்கிலத்தில் எழுதாமலிருந்திருந்தால், இவை கண்டிப்பாக தாமதமாகவேனும் தமிழில் உருவாகியிருக்கும். அவ்வளவுதான்.
- குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி முதலாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை. -
அறிமுகம்
தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி, மற்றும் பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.
சிறுகதைகள், நாவல்கள், ஒலிப்புத்தகங்கள், மேடை நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் போன்ற பல்வேறு படைப்புக்களை தனக்கேயுரிய பாணியில் வாசகர் மனமறிந்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறலாம். இவர் பல்வேறு வகையான படைப்புக்களை வழங்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்தாலும் இக்கட்டுரை இவரது சிறுகதைளின் நான்கை மட்டுமே ஆய்வு செய்வதாக அமைகிறது. ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது என்பதற்கான ஒழுங்குமுறைகள் பல இலக்கிய கர்த்தாக்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் வாசித்து அவற்றை பின்பற்றி எழுதுகின்ற ஆற்றலை சிறப்பாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்பது இவரது ஒவ்வொரு சிறுகதையிலும் இளையோடிப் போயிருக்கும் கதையெழுதும் முறைமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
பிம்பங்கள் வழியே’ ஏற்பாட்டில் 18.07.2021 ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற ‘ஆளுமை பற்றிய ஓர் உரையாடல்’ நிகழ்ச்சியில், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்கள்குறித்து, க. நவம் அவர்கள் (எழுத்தாளர், இதழியலாளர்- கனடா) ஆற்றிய உரை.
https://www.youtube.com/watch?v=WpDcmvhSobE
- 18.7.21 'மெய்நிகர்' - திருப்பூர் கனவு இலக்கியப் பேரவை நிகழ்வுக்கான பதிவு -
எழுத்தாராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால் எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது எனது படைப்பு அனுபவத்தில் தெரிந்து கொண்ட விடயங்களில் சிலவாகும்.
எனது இளவயதில் எங்கள் வீட்டில் எனது தகப்பனார் திரு குழந்தைவேல் நூற்றுக்கணக்கில் பல தரப்பட்ட புத்தகங்களை வைத்திருந்தார். சிறுவயதில்,எங்களுக்குத் தெரிந்த தேவார திருவாசக புத்தகங்களில் எனது 'புத்தகப்படிப்பு' ஆரம்பித்தது.கால கட்டத்தில அப்பா வாங்கி வரும் கல்கி கலைமகளுடனும் வாசிப்பு தொடர்ந்தது. அந்த அனுபவங்கள்,பல விதமான எழுத்துக்களைப்; படிக்கும் உணர்வையும் எழுத்தை ரசிக்கும், பூசிக்கும் உணர்வையும் எனது இளவயதில் எனக்குத் தந்தது என்ற நினைக்கிறேன்..அந்த அனுபவங்களால்,எனது அடிமனதில் எழுத்தாளராக வரவேண்டும் ஒரு உந்துதல் பிறந்திருக்கும் என்றால் அது மிகையாகாது.
அப்பாவின் புத்தகங்களில் அவ்வப்போது மனதைத் தட்டிய விடயங்களுக்கான விளக்கத்தைப் பிற்காலத்தில் பல துறைகளில் நுழைந்த எனது வாசிப்பு புரிந்து கொள்ள உதவின. அவை பொதுவான அறிவு தேடல் சார்ந்தவை மட்டுமல்ல. சமூகத்தில் ஆண் பெண்களின் நிலைப்பாடுகள்,மதம்,சாதி,இனம்,பற்றிய சிக்கலான கருத்துக்கள் என்பனவும் அடங்கும்.
இதுவரை பதினெட்டுத் தமிழ்ப் புத்தகங்களையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் முக்கியமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுத, இன்னும் எழுதிக் கொண்டிருப்பதற்கு எனது இலக்கியப் படைப்பு வரலாறு நீட்சி செய்கிறது. எனது படைப்பு வரலாறு பல திருப்பங்களைக் கண்டதாகும. எனது படைப்பனுபவம், எனது சிறுவயதில் ஒரு கட்டுரைப் போட்டியில் கிடைத்த பரிசுடன் ஆரம்பித்திருக்கலாம் என்ற நினைக்கிறேன். அந்தக் கட்டுரைப் போட்டிக்கு முன் ஏதோ ஒரு தமிழ்ப் பத்திரிகையில் சிறுவர் பகுதியில் ஒரு சிறுகவிதை எழுதியது ஞாபகமிருக்கிறது.
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" - கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் -
எம்ஜிஆருக்கு மாறு வேசங்கள் பொருந்துவதைப்போல் வேறெந்த நடிகருக்கும் பொருந்துவதில்லை. பல படங்களில் மாறு வேடங்களில் வந்து அவர் பாடும் பாடல்கள் பல கருத்தாழம் மிக்கவை. ஆனால் 'குலேபகாவலி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் ஒரு காதற் பாடல். இதில் எம்ஜிஆருடன் நடித்திருப்பவர் நாற்பதுகளில், ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி. (இயக்குநர் டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரி. சென்னையில் நீண்ட காலம் இயங்கிய ராஜகுமாரி திரையரங்கின் உரிமையாளர்.)
இந்தப்படத்தில் முதுமையான வேடமிட்டு எம்ஜிஆர் நடிக்கும்போது அவருக்கு வயது 38. எம்ஜிஆர் டி.ஆர்.ராஜகுமாரியின் தோழிகளுடன் ஆடிப்பாடிக்கொண்டிருப்பார். அச்சமயம் அங்கு டி.ஆர்.ராஜகுமாரி வருவார். எம்ஜிஆர் மயங்கி விழுந்தது போன்று நடிப்பார். அவரைத் தன் மடியில் போட்டு 'தாத்தா' என்றழைத்து அவர் சுகம் விசாரிப்பார் ராஜகுமாரி. அதற்குப் பதிலளிக்கும் எம்ஜிஆர் தன் உடலின் பல்வேறு பாகங்களிலும் வலி இருப்பதாகக் கூறுவார். ராஜகுமாரியும் அவர் குறிப்பிடும் இடங்களில் தொட்டு 'இங்கேயா?' என்று கேட்பார். அவ்விதம் எம்ஜிஆர் தன் மார்பில் வலி இருப்பதாகக் கூறவே அங்கு தன் கையை வைத்து 'இங்கேயா' என்று ராஜகுமாரி கேட்கவே எம்ஜிஆர் அவர் கையைப்பிடித்து
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" என்று பாடுவார்.
இப்பாடலில் இவ்வரிகள் வரும் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் வரிகளும் அதைப் பாடும் டி.எம்.எஸ்ஸின் குரலும், அச்சமயம் ஒலிக்கும் பின்னணி இசையும், எம்ஜிஆரின் நடிப்பும், எம்ஜிஆர் இவ்விதம் கூறவே அதற்குத் தன் முகபாவங்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ராஜகுமாரியின் நடிப்பும் இப்பாடற் காட்சியில் எனக்கு மிகவும் பிடித்த கட்டங்கள்.