படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர்! கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி எழுதியிருக்கும் சிந்தனைச்சுவடுகள்! - முருகபூபதி -
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை காலம் காலமாக ஒரு வர்த்தக சமூகமாக கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களில் அறிஞர் அஸீஸ், கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள். அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான் கலாநிதி ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள். மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவரான அமீர் அலியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள் இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் தொடர்ந்தும் வெளிவந்து, அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன. சிலர் அமீர் அலியை , ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர். ஒருகாலத்தில் இலங்கையில் இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.
அவரது வாக்குமூலம் ஒன்றையும் இங்கே பதிவிடுவது பொருத்தமானது.