நினைவுகளின் தடத்தில் – (18, 19, 20 , 21 & 22) - வெங்கட் சாமிநாதன் -
- அமரர் கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் தடத்தில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -
நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத் தெரியாது. அனேகமாக உண்மை இல்லை என்றே நினைக்கிறேன். காமாட்சிபுர அக்ரஹாரத்தினுள் நுழைந்தவுடனேயே அதன் இடது புறத்தில் காணும் முதல் வீடு முழுத்திண்ணையையும் அடைத்து கம்பி போட்டிருக்கும். கதவைத் திறந்து படியேறினால் திண்ணை. திண்ணையில் அகல் விளக்குப் பிறைக்கு மேல் ஏ. வைத்தியநாதய்யர் என்று கறுப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் எழுதியிருக்கும். அப்போது அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. பின்னர் தான் மதுரை ஏ.வைத்தியநாதைய்யர் பற்றித் தெரிந்து கொண்டேன். அவர் பற்றியோ, அவர் காலத்தில் அவர் ஆற்றிய புரட்சிகர செயல்கள் பற்றியோ இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. ஏ. வைத்திய நாதய்யர் என்ற பெயர் முடிவு பெறும் விதம் காரணமாக அது பற்றி பேசுவது இக்காலத்தில் விரும்பப் படுவதில்லை. ஒதுக்க வேண்டும் என்று யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் சொல்லப்படாமலேயே, தாக்கீது ஏதும் பிறப்பிக்காமலேயே புரிந்து கொண்டு செயல்படுத்தப்படும் ஒதுக்கல் இது. இன்னும் எத்தனையோ இம்மாதிரி ஒதுக்கல்கள், நடந்த சரித்திரத்தை இல்லையென பாவனையில் நடந்து கொள்ளுதல், அது பற்றிப் பேசுவதே, நடந்ததைச் சொல்வதே, அங்கீகரிக்க மறுப்பதைச் சுட்டுவதே, ஜாதி வெறியாக குற்றம் சாட்டப்படும். இதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முக்கால் நூற்றாண்டு கால அரசியல். ஆனாலும் சில வருடங்களுக்கு முன் சோ.தருமன் தன் எழுத்துக்களின் உந்துதல் பற்றி சாஹித்திய அகாடமியில் பேசும்போது, ஏ.வைத்தியநாதய்யர் அந்நாட்களிலேயே தலித்துக்களுக்காகப் போராடியதை யார் மறக்கமுடியும்? என்று ஒரு முக்கிய கேள்வியை முன் வைக்கிறார். மறக்க என்ன, மறுக்கவும் முடியும் தமிழ் நாட்டு அரசியல் அதற்கு இடம் கொடுத்துள்ளது. வெகு அபூர்வமாக, அவரிடமிருந்து ஏ.வைத்தியநாதய்யர் பற்றியும் அவரது அரசியல் சமூக பங்களிப்பு பற்றி ஒரு இளைய தலைமுறை பேசியது எனக்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருந்தது.