- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர்
ஆகஸ்ட் 2003 , பதிவுகள்
பெங்களூர், இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம்.
வெற்றிச் சிகரத்தை நோக்கி: எண்ணம் மற்றும் எழுத்து (1)
உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு கிராமத்திலோ, குக்கிராமத்திலோ அல்லது நகரத்திலோ பிறந்து வளர்ந்து வரும் எந்த ஒரு இளைஞநிடமோ, இளைஞியிடமோ இருக்கக்கூடிய ஒரு தாக்கம், _ பொதுவான ஒரு தாக்கம் என்னவென்றால் அது வெற்றியின் தாக்கம்தான். இளம்பிராயத்தினர் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் விரும்புவது என்னவென்றால் அது வெற்றியின் சிகரத்தை தொடுவதுதான். ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா என்ன? நிச்சயமாக இல்லை. ஏன்? காரணமென்ன?
ஏனென்றால் சிலர்தான் வெற்றியின் சிகரத்தை தொடும் சூழ்நிலையில் வளர்கிறார்கள் அல்லது வளர்க்கப்படுகிறார்கள் அல்லது தயார் செய்யப் படுகிறார்கள். பலருக்கு இந்த வெற்றி என்பது ஒரு எட்டாக்கனியாக, ஒரு அடிமனக் கனவாகவே முடிந்து விடுகிறது. ஏன்? எல்லோராலும் இந்த உலகில் வெற்றி பெற முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். இந்த உலகில் உள்ள எல்லோருமே வெற்றி பெறுவதற்காக பிறந்தவர்கள்தான். மனிதர்களை இரண்டு வகையாகத்தான் பிரிக்க முடியும். அது ஆண், பெண் என்ற பிரிவல்ல. வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்பது கூட அல்ல. அது முயற்சி உள்ளவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என்பது ஒரு பிரிவு. முயற்சி இல்லாதவர்கள், பயிற்சி பெறாதவர்கள் என்பது இன்னொரு பிரிவு.
நல்ல முயற்சியும், சரியான பயிற்சியும் இருந்தால் எல்லோருமே தத்தம் துறைகளில் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
வெற்றி, வெற்றி என்று சொல்கிறோமே அதன் விளக்கம்தான் என்ன? இதனைப் பற்றி பலர் மனதில் பல விளக்கங்கள் தோன்றினாலும் பொதுவான ஒரு விளக்கத்தைக் கூற நான் முற்படுகிறேன். உருப்படியான குறிக்கோளை தொடர்ந்து அடைவதும், உணர்வதும்தான் வெற்றி. குறிக்கோள் சரி, அதென்ன உருப்படியான குறிக்கோள்? குறிக்கோள் என்றாலே உருப்படியானதுதானே. உருப்படியில்லாத குறிக்கோள் என்று ஒன்று உண்டா என்ன? என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழலாம். இன்று பல நாடுகளில் பயங்கரவாதம், தீவிரவாதம் இவை தலைதூக்கி நிற்கின்றன. இ¢ச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் உலகமெங்கும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். இ¢வர்களும் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கித்தான் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் உருப்படியான குறிக்கோள்களா என்ன? இல்லவே இல்லை. சரியான பாதையை நோக்கிச் செல்லும் குறிக்கோள்தான் உருப்படியான, போற்றத்தக்க குறிக்கோள்களாக கருதப்படுகின்றன. இத்தகைய குறிக்கோள்கள் சில பேருக்காவது நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும்.
அடுத்து, “ தொடர்ந்து” என்பது என்ன? வெற்றி என்பது ஒரு தொடர் பயணம். அது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு முடிவே இல்லை. முதலில் ஒரு குறிக்கோள், பிறகு அடுத்தது, அதற்க்கடுத்தது என்று தொடர்ந்து வாழ்க்கைப் பயணத்தில் பல மைல்கல்க¨ளை கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்த குறிக்கோள் சரியான திசையில் பயணம் செல்ல வேண்டும்.
அடுத்து அது நம்மால் உணரப்பட வேண்டும். உணரப்படாத வெற்றி, வெற்றியே அல்ல. உணரப்பட்ட அந்த வெற்றி மனதை முழுமையாக்கும். மனம் முழுமை அடைந்தால்தான் அது மனநிறைவு என்று சொல்லப்படுகிறது. வெறுமையான மனம் நிச்சயம் நிறைவை அளி¢க்காது. வெற்றி, உணர்வை தூண்டும்; பின் மனதை முழுமையாக்கும். மேலும், மற்றவர்களின் வார்த்தையை விட நம் உணர்வுகள்தான் நமக்கு முழுமையான சந்தோஷத்தை ஏற்படுத்தும். அந்த சந்தோஷ உணர்வு நம்மை சிறப்பாக செயலாற்றத் தூண்டும். க, இவையெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி என்பது. அது மட்டுமில்லாமல் ஊக்கம், விருப்பம், வியர்வை சிந்தும் உழைப்பு, விடாமுயற்சி, அடைய வேண்டும் என்ற வெறி இப்படி எல்லா மூலதனங்களாலும் சேர்ந்து உருவாக்கப்படும் அதிர்ஷ்டம்தான் வெற்றி என்பது. அந்த வெற்றி விதியை வெல்லக்கூடிய மதி உருவாக்குவது..
இதுவரை வெற்றியைப் பற்றி பல கோணங்களில் ஆராய்ந்த நாம் அந்த வெற்றிக்கு நம்மை கொண்டு செல்லும் படிகள் என்ன என்பதையும் பார்ப்போம். எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் வெற்றியை அடைவதற்கு பலவகை திறமைகளும், ஆற்றல்களும் தேவைப்படுகின்றன. குறி¢ப்பாக, தான் சார்ந்த வேலையிலோ அல்லது தொழிலிலோ வெற்றிகரமாக உலா வருவதென்பது ஒரு பெரிய சவால். இதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆளுமை(Personality) தேவைப்படுகிறது. அந்த ஆளுமை வளர்ச்சிக்கு பல ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. பேச்சாற்றல், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஆற்றல், எல்லோரையும் நன்கு புரிந்து கொண்டு செயல்படகூடிய ஆற்றல், திட்டமிட்டு செயலாற்றும் ஆற்றல், முடிவெடுக்கும் ஆற்றல், ராயும் திறன் கொண்ட ஆற்றல், வருங்காலத்தை கணிக்ககூடிய ஆற்றல், தலைமை பண்புகள் கொண்ட ஆற்றல், குறிக்கோள்களை நிர்ணயித்து அவற்றை செயல்ப்படுத்தகூடிய ஆற்றல், நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியதாற்றல், இப்படி பல ஆற்றல்களை கொண்ட மனிதர்கள்தான் இன்று வாழ்க்கையில் வெற்றி நடை போடுகிறார்கள்.
உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இன்று வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே இப்படி எல்லா ஆற்றல்களும் உள்ளவர்கள்தானா என்று. ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டால் அதில் வெற்றி பெற்றவர்க¨ளை ஆராய்ந்து பார்த்தால், அந்தத் துறைக்கு வேண்டிய ஆற்றல்கள், திறன்கள் இப்படி அனைத்தையும் பெற்றவர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். ஆற்றல் என்பதன் அளவுகோல் கூட காலத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. உதாரணமாக. குறிப்பிட்ட சில ஆற்றல்களைக் கொண்ட ஒருவர் ஒரு துறையில் முப்பதாண்டுகளுக்கு முன்பு பெரும் வெற்றி பெற்றவர்களாக இருந்தால், அதே ஆற்றல் திறண் கொண்ட ஒருவர் இன்றைய சூழ்நிலையில் வெற்றி பெற முடியுமா என்றால் அது சந்தேகம்தான். ஏனென்றால் வெற்றிக்குத் தேவையான மூலதனங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. இந்த மாற்றங்க¨ளை புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் ஒரு மனிதனுக்கு மிக அவசியமாகிறது. இதை ஆங்கிலத்தில் “ Adaptability” என்று சொல்லுகிறார்கள். “ Changing with times” - அதாவது காலத்திற்கேற்ப செயல்படுவது என்பது எல்லா துறைகளுக்கும் அவசியமானதாகி விட்டது. இதைத்தான் வள்ளுவர்,
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
என்று அன்றே கூறினார். இதன் பொருள் என்னவென்றால் “ தகுந்த காலமறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், ஒருவன் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்” என்பது.
இயல், இசை, நாடகம், திரைப்படம், தொழில் நுட்பம், கல்விமுறை, தகவல் தொடர்பு, இப்படி, எல்லாவற்றிலும் மாற்றங்கள் வந்து விட்டன. இவையும் நிரந்தரமல்ல. இன்னும் 25 வருடங்களுக்கு பின் பார்த்தால் இன்னும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்ப்பட்டிருக்கும். இவையெல்லாம் காலத்தின் கட்டாயம். இப்போது நான் மேற்சொன்ன ஆற்றல்கள் அனைத்துமே மனிதர்களுக்குள் இயற்கையாக ஒளிந்து கிடப்பவைதான். அதை வெளிக் கொண்டு வருவதுதான் “ஆளுமை ஆற்றல் வளர்ச்சி பயிற்சி முறை” ( Personality Development Programme -– Training ) என்பது. கல்லூரிக்கோ, பல்கலைகழகத்திற்கோ சென்று பயின்றால் பட்டதாரியாகலாம். இயற்பியல், வேதியியல், கணிதவியல், வணிகவியல், பொறியியல், மருத்துவம் இப்படி எத்தனையோ பாடங்களில் பட்டதாரியாகவோ அல்லது முதுநி¢லைப்பட்டதாரியாகவோ ஆகலாம். ஆனால் இப்படிப்பட்ட கல்விக்கூடங்களில் ஏதாவது ஒரு சிறப்புப்பாடத்தையோ அல்லது அது போன்ற பாடங்களையோதான் கற்பிக்கின்றனர். எப்படி பேசுவது, எப்படி நடந்து கொள்வது, மனோபாவத்தை எப்படி சரியான வழியில் திருப்புவது, நேரத்தை எப்படி நிர்வகிப்பது போன்ற விஷயங்களை முறையாக யாரும் கல்விக் கூடங்களில் கற்ப்பிப்பதில்லை. முன்னதை முறைக் கல்வி ( Regular Education) என்று அழைத்தால், இதை இணைக்கல்வி (Parallel Education) என்று அழைக்கலாம். முன்னது நம் மூளையைப் பண்படுத்தும் கல்வி ( Education for the Head) என்றால் பின்னது நம் மனதைப் பண்படுத்தும் கல்வி.( Education for the Heart). மூளையும், மனதும் ஒன்றாக பண்படும்போதுதான் ஒரு முழுமையான மனிதன் உருவாகிறான். எந்த ஒரு கல்வி பண்பையும், மனித நேயத்தையும் , உள்ளாற்றலையும் வெளிக்கொணர்கிறதோ அதுவே சிறந்த கல்வியாகும்.
மக்கள் தொகையில் நாம் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். அது மட்டுமில்லாமல் முதலிடத்தை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால் மனித ஆற்றலில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம்? நம்மை விட பல மடங்கு சிறிய நாடுகளாகிய ஜப்பான், தைவான், தென் கொரியா போன்ற நாடுகளில் மனித ஆற்றல் பன்மடங்கு இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள ஆற்றல்களை முழுமையாக வெளிக்கொணர்ந்து, அந்த ஆற்றல்களையெல்லாம் திரட்டி, ஒரு முகமாக செயல்பட்டால்தான் நாடு வளம் பெறும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் அது நாட்டை வளமாக்கும் நோக்கமுள்ள குறி¢க்கோளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தேசத்தைப் பற்றியும் சிறிதளவேனும் சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையைக் கொடுக்கும் கல்விதான் உண்மையான கல்வி.
ஆற்றல்களை முழுமையாக வெளிக்கொணரும் இக்கல்வியை, சிந்தனையை வளப்படுத்தும் இக்கல்வியை வெறும் பயிற்சிக் கூடத்திற்கு சென்று மட்டுமே பெற்று விட முடியாது. விருப்பம், ஆர்வம், உந்துதல், உழைப்பு, விடாமுயற்சி, தான் ஒரு ஆளுமைமிக்க மனிதனாக வேண்டும் என்ற ஒரு வெறி ( Urge/Desperation என்று இதை ஆங்கிலத்தில் கூறுவார்கள்). இ¢வையெல்லாம் சேர்ந்தால்தான் இந்த நோக்கத்தில் முழு வெற்றிக் காண முடியும்.
இக்கல்வி மனிதனுக்கு தான் யார், தன்னுடைய பலம், பலவீனம் என்ன என்பதையும், ஒரு உலக நோக்குப் பார்வையையும் கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. இது தவிர, வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலமும், சிந்தனையை தூண்டும், வளர்க்கும் பல அரிய நூல்களை படிப்பதன் மூலமும், அனுபவம் மூலமும், நேரில் பார்த்து, கேட்டு, தெரிந்து கொள்வதன் மூலமும் ஒரு மனிதன் இந்த ஆற்றல்களை பெற முடியும்.
“ முடியும் என்று நினைத்தால் முடியும்
முடியாது என்று நினைத்தால் முடியாது.”
எல்லாமே நினைப்பில்தான் உள்ளது. நினைப்பு சரியாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாமே சரியாக முடியும். இதைத்தான் ஒரு ஆங்கில அறிஞர் அழகாகச் சொன்னார்.
“ உன் சிந்தனையை மாற்றிக் கொண்டால்
உன் நம்பிக்கைகள் மாறும் ;
உன் நம்பிக்கைகள் மாறினால்
உன் எதிர்ப்பார்ப்புகள் மாறும். ;
உன் எதிர்ப்பார்ப்புகள் மாறினால்
உன் மனோபாவம் மாறும் ;
உன் மனோபாவம் மாறினால்
உன் நடத்தை மாறும் ;
உன் நடத்தை மாறினால்
உன் செயல்பாடுகள் மாறும் ;
உன் செயல்பாடுகள் மாறினால்
உன் வாழ்க்கையே மாறி விடும்."
வாழ்க்கையில் எல்லாமே சிந்தனையில்தான் தொடங்குகிறது. ஆகவே இளைஞர்களெ, அப்படிப்பட்ட சிந்தனையை பண்படுத்துங்கள். வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.
அடுத்து நாம் வெற்றிக்கு உதவிடக்கூடிய பல ஆற்றல்களை பற்றியும், அவற்றை எப்படி பெறுவது என்பது பற்றியும், வரும் வாரங்களில் பார்ப்போம்.
[ தொடரும் ]
கே.ஷங்கர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மூலம்: ஆகஸ்ட் 2003 , பதிவுகள், https://www.geotamil.com/pathivukal/kshankar_sikaraththaiwookki1.html