14
சமூகம் தொடர்பிலான தமது கராரான ஆய்வு முறையை அவர் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படைகளில் இருந்தே தொடங்குகின்றார். ஆனால் அவர்களோ (மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்) தமது கராரான ஆய்வு முறையை – தமக்கு மிக நெருக்கமான அயர்லாந்து கேள்வியிலிருந்தே ஆரம்பிக்கின்றனர். அயர்லாந்தின் கேள்வியை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் அணுகிய விதம் கவனத்துடன் நுணித்து நோக்கத்தக்கது. “ஓர் இரண்டு லட்சம் இளைஞர்களை தாருங்கள்–இங்கிலாந்தின் ஆதிக்க சக்திகளை தூக்கி எறிய” என ஏங்கெல்ஸ் ஆற்றிய கூற்று பிரபல்யமானது –அது அயர்லாந்தின் சூள் கொண்ட தீயின் வெம்மையை, சமரசமற்ற புரட்சியின் நாக்குகளை விபரிப்பது, என்றாகின்றது.
இத்தகைய ஒரு பின்னணியில், அயர்லாந்தின் வரலாற்றை வடிக்க முற்பட்ட ஏங்கெல்ஸ், அயர்லாந்து பொறுத்து தன் பார்வையை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து – அதாவது, கிட்டத்தட்ட டீஊ 258 க்கு முன்பிருந்து – அகல செலுத்த முற்பட்டிருப்பது, ஆழ்ந்து அவதானிக்கத்தக்கது. இம் மிக நீண்ட நெடுநாளைய வரலாற்று அவதானிப்பு, அல்லது வரலாற்று கற்கை, அவருக்கு தனது பிற்பட்ட நூலான, “குடும்பம், தனிசொத்து, அரசு” என்ற நூலினை எழுதவும் வடிவமைக்கவும் கைக்கொடுத்தது என கருதுவோரும் உண்டு.
பண்டைய சமூகங்கள், பண்டைய சட்டங்கள், 16, 17ம் நூற்றாண்டின் சட்ட- வரலாற்று ஆவணங்கள், பயணிகளின் குறிப்பேடுகள், பவ்வேறு வகைப்பட்ட நூல்கள், முக்கியமாக பண்டை காலம் தொட்டு 1860 வரையிலான பதிவாக்கப்பட்ட வரலாற்று பதிவுகள் - இது பொருத்து அவர் வந்து சேர்ந்த முடிவுகள் - புள்ளி விபரங்கள் இத்தியாதி என மிகப் பரந்;த ஆய்வு அணுகுமுறையை அவர் அயர்லாந்தின் வரலாற்று தொடர்பில் கொண்டிருந்தார். மறுபுறத்தில், 1840லேயே, ஆரம்பமாகும், மார்க்ஸின் அயர்லாந்து தொடர்பிலான கரிசனை, அவருக்கு தன் பின்னைய பிரதானமான நூலான, “மூலதனத்தை” எழுத அடிப்படையாயிற்று எனக் கருதுவோர் உண்டு. வேறு வார்த்தையில் கூறுவதானால், அயர்லாந்து பொருத்து ஆழ்ந்த ஒரு 40 வருட அவதானம் இருவரிடையேயும் மிக ஆரம்பத்திலேயே, குவியத் தொடங்கியது எனலாம்.
இதற்கான காரணம், பல்வகைப்பட்டது என்றாலும், ஐரிஸ் மக்களின் வற்றாத போராடும் குணாம்சமும், அயர்லாந்தை தனது முதல் காலனியாகப்பாவித்து அதில் கற்;பனைக்கப்பாலான மாற்றங்களை உண்டு பண்ணி, தனது நாட்டின் தொழிலுற்பத்தி துறைக்கு கச்சாப் பொருட்களையும், தன் இராணுவத்திற்கு ஆள் வழங்கும் ஒரு காயடித்த பிரதேசமாகவும் அயர்லாந்தை, கொண்டு வந்து நிறுத்திய பெருமை இங்கிலாந்தின் அன்றைய யதார்த்ததினுள் உள்ளடங்குகின்றது.
ஒரு புறம் ஐரிஸ் மக்களின் வற்றாமல் போராடும் குணாம்சம். மறுபுறம், உலகப்பரப்பில், இங்கிலாந்து என்ற ஓர் யதார்த்தத்தின் புதிய எழுகை. ஐரிஸ் மக்களின் வற்றாத போர் குணம் என்பது, இப்படியாக மார்க்ஸ்-ஏங்கெல்ஸை ஈர்த்த போதும், முன்னரே குறித்தவாறு, இங்கிலாந்தின் தொழிலாளரே ஐரிஸ் மக்களையும் முழுமையாக விடுவிப்பர், என்ற ஓர் நடைமுறைக்கு, மார்க்ஸ் ஆரம்பத்தில் வந்து சேர்ந்திருந்தார். இதற்கான அடிப்படைக் காரணம், மேலே தொட்டுக் காட்டியவாறு, இங்கிலாந்தின் யதார்த்த நிலமையே ஆகும். இங்கிலாந்து பொறுத்த மார்க்ஸின் பார்வை வருமாறு இருக்கின்றது:
“இங்கிலாந்து மாத்திரமே ஒரு ஆழமான பொருளாதார புரட்சிக்கு வித்திட முடியும்… இந்நாடு ஒன்று மாத்திரமே விவசாயிகளே அற்;ற ஒரு நாடாகவும், அதே வேளை நிலவுரிமை என்பது மிக சிலரது கைகளுக்குள் அடங்கிப்போன ஒரு நாடாகவும் இருக்கின்றது… இந்நாட்டில் மாத்திரமே, கிட்டத்தட்ட, நாட்டின் மொத்த உற்பத்தியின், பெருமளவு, ஒரு முதலாளித்துவ முறைமையின் அடிப்படையில் ஆற்றப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதாய் இருக்கின்றது. இந்நாட்டில் மாத்திரமே, மொத்த ஜனத் தொகையில் பெரும்பகுதியினர் கூலி பெறும் தொழிலாள பட்டாளமாக உருவெடுத்துள்ளனர். இந்நாட்டில் மாத்திரமே வர்க்க முரண்பாடும், தொழிலாளருக்கான தொழிற்சங்க அமைப்புகளும் ஓர் சர்வவியாபக தன்மையினையும் முதிர் நிலையினையும் எட்டி உள்ளது. இந்நாடு மாத்திரமே, உலக சந்தையில் தனது பிரதான வகிப்பாத்திரம் காரணமாக தனது பொருளியல் துறையில் ஆற்றப்படும் ஒவ்வொரு புரட்சிகர மாற்றத்தின் பலனை சடுதியாக, முழு உலகத்தை நோக்கியும் வீசியெறிந்து உலகை உடனடியாக அது பாதிக்க செய்யக் கூடியதாகவும் இருக்கின்றது. நிலவுடைமையும், முதலாளித்துவமும் இந்நாட்டிலேயே செழித்தோங்கி ஓர் உதாராண விடயங்களாக இருந்த போதிலும், இங்கேயே அவற்றின் அழிவு அதற்கான பொருளியல் அடிப்படையில் முதிர்ச்சியுற்று காணப்படுகின்றது”.
சுருக்கமாக கூறினால் 1870 இன் முதல் பகுதியில் மார்க்சின் இங்கிலாந்து பொறுத்த அணுகுமுறை இதுவாகவே ஆகின்றது. வேறுவார்த்தைகளில் கூறினால், ஒடுக்கப்படும் அயர்லாந்தின் விடுதலைக்கான அடிப்படை என்பது, இங்கிலாந்தின், முதிர்ச்சி அடைந்த பொருளாதார அடிப்படைகளில், அதிலும் முக்கியமாக, மாற்றங்களைக் கண்டு வந்த இங்கிலாந்தின் தொழிலாள அணியினரிடையே காணப்படுகின்றது என்பதுதான் அவர்கள் இருவரினதும் அன்றைய தேர்வாக இருந்தது.
ஆனால், நாளடைவில், இங்கிலாந்தின் இதே தொழிலாள அணி எவ்வாறு நஞ்சூட்டப்படுகின்றது அல்லது எவ்வாறு தலைமையற்றுப் போகின்றது அல்லது எவ்வாறு ஒரு மித வாத தலைமையை சார்ந்துக் கொள்கின்றது என்பதனை மிக நுணுக்கமாக ஆராய்ந்த இருவரும், தமது முடிவை மாற்றி, அயர்லாந்து மக்களின் விடுதலை, அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கூடாகவே சாத்தியப்படும் என்ற முடிவுக்கு வந்து சேர்கின்றனர். யாரை விடவும், மிக நுணுக்கமாக, இவ்வுண்மையை, பல பரிமாணங்களில் கைப்பற்றும் லெனின் - இக்கேள்வி பல பரிமாணங்களைக் கொண்டது என்பதனையும், தற்கால நிலைமையில், ஏகாதிபத்தியம் என்ற யதார்த்தத்தையும் உள்ளடக்குகின்றது என்பதனையும் கண்டுக் கொள்கின்றார். இதனுடன் கூடவே, மறுபுறத்தில், மக்களை தொடர்ந்தும் கையேறு நிலையிலேயே நிறுத்தி வைக்க திண்ணம் பூண்டிருக்கக்கூடிய ஆதிக்க சக்திகளின் நடைமுறை நகர்வுகளையும் (தந்திரங்களையும்) அவர் மிக நுணுக்கமாக கண்டுணர்ந்து கொள்கின்றார்.
ஐரிஸ் புலம் பெயரும் மக்களின் கோபதாபங்களை – பழிவாங்கும் உணர்வினை எப்படி – எப்படி அரசுகள் தமக்கு சாதகமாக பாவித்துக் கொள்கின்றன என்பதனை வேதனையுடன் அவதானிக்கும் மார்க்ஸின் வேதனையிலிருந்து லெனினின் பார்வை வித்தியாசப்படுகின்றது. ஏனெனில், லெனினினது காலம் வித்தியாசப்பட்ட காலமாகவே இருந்தது. ரஸ்ய இனங்களின் விடுதலை முகிழ்ப்புகள் போக, காலனிகள் அல்லது அரைக் காலனிகள் தம் விடுதலை போராட்டங்களை வௌ;வேறு வடிவங்களில் முன்னெடுக்க முற்பட்ட ஏகாதிபத்தியத்தின் காலகட்டம் லெனினது காலகட்டமாகும். (முக்கியமாக காலனிகள் விடுதலை போராட்டங்களை தொடங்கிய காலக்கட்டம்).
இருந்தும் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் ஆகியோருக்கிடையே இருந்த ஒற்றுமை யாதெனில், இன ஒடுக்குமுறைத் தொடர்பில் காணப்பட்டு வந்த இடதுசாரிகளின் சமரசங்களையும் கனவு நிலை நிலைப்பாடுகளையும் ஒன்று சேர அம்பலப்படுத்தியதும், அவற்றை எதிர்த்து போராட முன்னின்றதுமாகும். இது, பக்குனின் தொடர்பிலான மார்க்சின் விரோதங்களாகட்டும் அல்லது ரோசா லக்ஸம்பேர்க் தொடர்பிலான லெனினின் விமர்சனமாகட்டும் - இவை இரண்டுமே, சம்பந்தப்பட்டவையே. இவர்கள், இடதுசாரிகள் அல்லது முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரானவர்கள், என்ற அவர்களது பிறிதொரு அடிப்படையை மார்க்சோ அல்லது லெனினோ அனுசரித்ததாக இருக்கவில்லை. ஒடுக்கும் சமூகங்கள் அல்லது ஒடுக்கப்படும் சமூகங்கள் - இவை இரு சமூகங்களில் இருந்து எழும் இடதுசாரிகளின், இன விடுதலை தொடர்பிலான, பல்வேறு கருத்து நிலைகளை அல்லது சமரசங்களை – தயவு தாட்சண்யம் அற்ற முறையில் தன் விமர்சனங்களுக்கு இருவரும் ஆளாக்கினார்.
15
இவ்விரு சமூகங்களிடையேயும், (அதாவது ஒடுக்கும்-ஒடுக்கப்படும் இரு சமூகங்களிடையேயும்) இருக்கக் கூடிய இடதுசாரிகளின் வேலைத்திட்;;டங்கள், இன விடுதலைக்கான – அல்லது இன விடுதலை நோக்கிய நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை நிச்சயம் கொண்டிருத்தல் வேண்டும் என உறுதியாக லெனின் கணித்துக் கொண்டார் எனலாம். இதனை உள்ளடக்காத எந்த ஓர் அரசியல் திட்டம் என்பதும் தன் தோல்வியை தழுவிக் கொள்ளும் என்பது அவரது நிலைப்பாடானது.
அதாவது, இவ் அரசியல் திட்டமானது, இரு முகங்களை கொண்டதாக இருக்கின்றது. ஒன்று, தன் சொந்த புல்லுருவிகளை, அம்பலப்படுத்திக் கொள்ளும் வேலைத்திட்டத்தை இது உள்ளடக்குவது. மற்றது, அதே வீச்சில் இன விடுதலைக்கான அடிப்படைகளையும் அது கொண்டதாய் அமைவது. இதற்கான ஆரம்ப படிநிலை, ஒடுக்கும் சமூகம் எது – ஒடுக்கப்படும் சமூகம் எது என்பதற்கான தெளிவினை பெற்றுக் கொள்ளலே ஆகும் என்பது அவரது முடிவாகின்றது. இதுவே, இதுதொடர்பில் ஏற்படக்கூடிய மயக்க நிலையையும் நீக்கிக் கொள்ள ஏதுவாக அமையும் என்பதே அவரது கருத்துநிலை.
இருந்தும் தீர்வுகள் தொடர்பில், அவை அக-புற சுய நிர்ணய உரிமைகளுக்கான கோரிக்கைகள் உட்பட, இன விடுதலை தொடர்பிலான அனைத்து நகர்வுகளும், அவையவை ஜீவித்திருக்கும் வரலாற்றுக் கட்டத்துடன் நேரடி சம்பந்தம் கொண்டவையாகின்றன. இவற்றை சரியாக உள்வாங்காது விடின், கனவு நிலையை நோக்கிப் பயணிப்பதும், அதற்கான ஒட்டுமொத்த விலைகளை மக்கள் ஈற்றில் செலுத்த நிர்பந்திக்கப்பட்டு போவதும் தவிர்க்க முடியாதது என்பதுவே அவரது வாதங்களின் சாரமாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், இப்புள்ளியை, அதாவாது வரலாற்றின் இப்புள்ளியை அதனது சகல பரிமாணங்களுடன் உள்வாங்குவது என்பது இவற்றின் முன் நிபந்தனையாகின்றது. இப்புள்ளியிலேயே இராஜலிங்கம்-வேலுப்பிள்ளை முதல் இரா. சிவலிங்கம் - சாந்திகுமார்- ~ண் போன்றோர் மலையகத்தில் முன்னெடுக்க முயன்ற நகர்வுகளின் வௌ;வேறு பரிமாணங்களின் உள்வாங்கல்கள் முக்கியத்துவப்பட்டுப் போகின்றன.
16
லெனின் இரண்டு அடிப்படையான விடயங்களை, இன போராட்டங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்வார். ஒன்று, முன்னரே குறித்தவாறு, இன-சாதிய-மத முரண்பாடுகள், எவ்வௌ; வடிவங்களில், ஆதிக்க சக்திகளால், மிக நுட்பமாக அவற்றின் தலையாய தந்ரோபாயங்களில் ஒன்றாக, மக்களை பிளவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும் பிரயோகிக்கப்படுகின்றன என்பதனையும், அவை மக்களிடையே எந்தளவில் செல்வாக்கு செலுத்தி வலிமை பொருந்தியவையாக ஆழ வேரூன்றி இயங்குகின்றன என்பதனையும் அவர் தெளிவுற புரிந்து கொள்கின்றார். ஒன்று, சாணக்கியம். (தந்திரேபாயம் சம்பந்தமானது) மற்றது, வலிமையும் பரிமாணங்கள் சம்பந்தமானது. (அதாவது உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பது முதல் இலங்கையின் இனப் போராட்டங்களின் போது உயிரை மாய்த்தக் கொண்ட பல்நூறு இளைஞர்கள் உட்பட, அண்மைக்கால செச்னிய தலைவர் முயனலசழஎ குறித்த புட்டினின் புரிதல் வரை வலிமைகளின் சக்தியை பறைசாற்றுவதாகவே உள்ளன). இவை ஏற்படுத்தும், ஆழமான முரண்பாடுகளை கடக்காமல் நடைமுறையில், ஆதிக்க சக்திகளை வெற்றிக் கொள்வது, என்பது கைகூடாது என்பதும் அவரது தெரிவாகின்றது.
‘வர்க்கங்களின் ஒன்றிணைவால்’ இவை ஏற்படுத்தும் தடைகள் மேலும் வலிமையுறுவதும், அவ்விதமான ‘வர்க்கங்களின் சேர்க்கைக்கு’ வசதி செய்து தரும் வகையில் நடைமுறை யதார்த்தங்கள் ஆதிக்க சக்திகளால் கட்டி எழுப்பப்படும் நடைமுறையையும் அவர் தெளிவுற இனங்காண்கின்றார். (புதிய பல்கலைகழக அனுமதிமுறை அவ்வவ் இனங்களின் வர்க்க இணைவுக்கு தேவைப்படும் உந்துதலை ஏற்படுத்தி கொடுத்தது போல எனலாம்). இப்பார்வைக்கான ஓர் பிரக்ஞையை, அவர் வந்தடைந்தது என்பது கடந்த கால வரலாறுகளின் நுட்பமான கற்கையுடனும் அவை பொறுத்த ஆழமான விமர்சன பார்வைகளுக்கூடாகவுமே என்பதாகும்.
ஐரிஸ் போராட்டங்களில் அடங்கியிருந்த நியாயப்பாடுகளின் தன்மையை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இனம் காண்பதும், அப்போராட்டங்களின் சாத்தியப்பாடுகள் குறித்து அவர்கள் வாதிப்பதும் அதனடிப்படையில் அவர்கள் முன் மொழிந்திருக்க கூடிய நடைமுறைகள் குறித்தும் லெனின் அவதானம் செலுத்துகின்றார். இதனையே வேறு வார்த்தையில் கூறினால் ஆதிக்க சக்திகளின் தந்ரோபாயங்களை அவர் கறாராக உள்வாங்கும் அதே தருணம், அவை தொடர்பான உலக அனுபவங்களின் கடந்த கால சாரங்களையும் விமர்சனங்களையும் மார்க்சிய அடிப்படையில் உள்வாங்கி நிர்ணயித்து கொள்ள தவறுகின்றார் இல்லை.
இவ் அணுகுமுறைகளே அவரை, இடது சாரிகளின் மத்தியிலேயே, உள்ளிருக்கக் கூடிய, இன முரண்பாடுகள் தொடர்பிலான, வெவ்வேறு நிலைப்பாடுகளை நோக்கி, கவனம் கொள்ள வைக்கின்றது. இந்நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ரீதியாக தம்மை தாம் ஸ்தாபித்து கொள்வதனையும், அதற்கேற்ப ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போர் தொடுக்கும், அவ்வவ் இடதுசாரிகளின் வெற்றி தோல்விகள் வரலாற்று போக்கில் நிச்சயிக்கப்பட்டு போவதையும் அவர் காண நேர்கின்றது.
ரோசா லக்சம்பர்க் முதல் காட்ஸ்கி வரையிலான அவர் கண்ட இவ்வகை முரண்பாடுகள், இலங்கைக்கு முற்றுமுழுதாய் அந்னியப்பட்டனவாக கூறமுடியாது. முதலில் பாட்டாளிவர்க்க புரட்சியும், அதற்கான போராட்டங்களும்தாம் அல்லது முதலில் வர்க்க முரண்பாடு-அது முடிய, அதன் பின்னரே இனங்களுக்கிடையிலான உரிமை போராட்டம் என்று ஒரு புறமும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கான போராட்டம் என்பது தன்வழியே இனங்களுக்கிடையேயான சௌஜன்யத்ததையும் சமத்துவத்தையும் தன்னிச்சையாக ஏற்படுத்திவிடும் என்ற ரோசா லக்சம் பேர்க்கின் நிலைப்பாடும், “எம் தந்தையர் நாடு” என்ற இனவாத இடதுசாரிகளின் நாட்டுப்பற்று கோசம் ஈறாக, இடது சாரி அணிகள் என கூறப்பட்டோரிடை இருந்து, ஆழ, மீள மீள எழுவதை அவர் காண்கின்றார். இலங்கையில் இதன் வௌ;வேறு வடிவங்களையும் நாம் இன்னமும் காண்பது போலவே இந்திய சூழலிலும் இவை சாதீய-மத முரண்பாடுகளாக தோற்றம் கொள்வதனையும் நாம் காணக்கூடியதாகவே உள்ளது.
ஆனால், விடயப்பொருள் என்னவோ, ஆதிக்க சக்திகள், குறித்த கணத்தில், மேற்கொள்ளக்கூடிய தந்ரோபாய நகர்வுகளுக்கு, எதிரான எதிர் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா, அவை எவ்வௌ; படிநிலைகளில் அல்லது பரிமாணங்களில் வெளிப்படுகின்றன என்பதே கேள்வியாகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலேயே, ஆதிக்க சக்திகளின் நடைமுறை நகர்வுகளை நுணுக்கமாக அவதானிப்பதும் துல்லியமாக எடைப் போட்டுக் கொள்வதும் இன - சாதீய முரண்களின் வலிமையையும் அவற்றின் வரலாற்று பின்புலத்தை சரியாக கண்டுக்கொள்ளலும் அவற்றுக்கெதிரான எதிர் நகர்வுகளை கட்டமைப்பதில் அதிமுக்கிய பங்காற்றுகின்றன.
எதிர் நகர்வுகள் என்பவை இறுதிகணிப்பில் அடிப்படையான தேவையாகும் அதேவேளை, முக்கியமானது யாதெனில், அவ் எதிர் நகர்வுகள் யதார்த்த பூர்வமான – நடைமுறை தீர்வுகளையும் வேலைத்திட்டங்களையும் உள்ளடக்குகின்றதா என்பதேயாகும். இதற்கான முன் நிபந்தனைகளில் தலையானது, வரலாற்றை, தேடலுடன், சரிவர பயின்று கொள்வது என்றாகின்றது. இவ்வகையிலேயே இ “மக்களை, வர்க்க அடிப்படையில் அணித்திரட்டும் புரட்சிகர வேலைத்திட்டங்களுடன், இன விடுதலைக்கான (அல்லது சாதீய விடுதலைக்கான), அர்ப்பணிப்பு மிக்க புரட்சிகர வேலைத்திட்டங்களும் ஒரு கோட்டில் இணைந்தாக வேண்டியுள்ளது” என அபிப்பிராயப்படுவார் லெனின்.
இனங்களுக்கிடையிலான சமத்துவத்துக்கான போராட்டம் என்பது அடிப்படையில், ஒரு வகையில், சமூகத்தில், ஜனநாயகத்துக்காக போராடுவதாகவே இருக்கும். ஜனநாயக உரிமைகளுக்கான ஏற்பாடுகள் இன்றி பாட்டாளி வர்க்கமானது தன் விடுதலை குறித்து யோசிக்கவே முடியாது எனும் லெனினது தலையாய அடிப்படை குறித்து முன்னரே கண்டோம். தொழிற்சங்க உரிமை முதல் பத்திரிகை உரிமை வரையிலான ஜனநாயக உரிமைகளுக்கான தேவைப்பாடுகள் என்பது பாட்டாளிவர்க்கம் ஒன்றிணைவதற்கு தேவையான முன் நிபந்தனையாகின்றது. “முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டமானது ஜனநாயகத்திற்கான அனைத்து புரட்சிகர தந்திரோபாய வேலைத் திட்டங்களுடனும் நகர்வுகளுடனும் இணைந்தாக வேண்டியுள்ளது. அவ்வகையில், ஒரு குடியரசுக்கான ஏற்பாடுகளாகட்டும்… அல்லது முறைப்படியான உத்தியோகத்தர்களுக்கான தேர்தல்களாகட்டும்… அல்லது பெண்களுக்;கான சம உரிமைகளாகட்டும்… அல்லது இனங்களின் (சாதியங்களின்) சுய நிர்ணய உரிமை கோரும் போராட்டங்களாகட்டும் - அனைத்துமே இணைந்தாக வேண்டியுள்ளது… புரட்சி என்பது அனேக புரட்சிகளையும் அனேக கோரிக்கைகளையும் உள்ளடக்க கூடியதுதான்” என்பார் லெனின்.
இத்தகைய ஓர் பின்னணியில், மலையக வரலாறு தொடர்பில் சாந்திகுமார் காட்டிய ஆழ்ந்த சிரத்தையும் உலக இன முரண்பாடுகள் தொடர்பிலான அவரது உள்வாங்கல்களும், அது பொறுத்த, இடதுசாரி நிலைப்பாடுகள் - கட்டுமானங்கள் தொடர்பிலான அவரது அக்கறையும் அவரது அடிப்படைகளாகின்றன. இக்காரணத்தாலேயே அவர் மரபு ரீதியான இடதுசாரி பார்வைகளை கேள்விக்குட்படுத்த கூடியதாகவும் இருந்தது.
17
இனவிடுதலை தொடர்பிலான லெனினின் பரந்து பட்ட பார்வை, பல பரிமாணங்களை உள்ளடக்கியது. அகநிலை அல்லது ஒருதலைபட்சமான அணுகுமுறையை முற்றாக புறக்கணித்து, குறித்த கேள்வி, வரலாற்றின் வளர்ச்சி படிநிலையில், தற்போது எந்நிலையில் அல்லது எக்கட்டத்தில் இருக்கின்றது என்ற அவரது அணுகுமுறை மேலே குறித்தவாறு பிரதானமானது. இப்புள்ளியில், அவரது சிந்தனை எவ்வாறு செயற்பட்டதோ, அதே பரிமாணத்தில் அவர் சித்தமும் செயற்பட உலக இலக்கியமும், அல்லது மக்கள் சார்ந்த பற்றுதலும் மேலும் வற்றாத சமூக நீதிக்கான உந்துதலும் அவருக்கு கைக்கொடுத்திருக்கலாம்.
இதனாலேயே, இதனடிப்டையில் பிறப்பெடுத்த தீர்வும் அதற்கான நடைமுறையும் யதார்த்தத்துடன் முரணாகாத வகையில் ஒன்றிணைந்து இயங்கி குறித்த சூழலில் மக்களால் ஏற்கப்பட்ட ஓர் வேலைத்திட்டமாகின்றது. ஆனால், இந்நடைமுறையை கைக்கொள்வததற்கான முதல் நிபந்தனைகளில் ஒன்று, ஏற்கனவே கூறியபடி, வரலாற்றை தெளிவுற கற்றல் தான் என்றாகின்றது. இவற்றை சரியான கண்ணோட்டத்தில் உள்வாங்கி, சரியான தருணத்தில், பிரயோகிப்பது என்பது இலகுவில் “கைவசப்படாத” ஓர் கடினமான காரியம் தான் என்பதனை, அதே வரலாறு, துரதிஸ்டவசமாக எமக்கு காலம் காலமாக காட்டி நிற்கின்றது. இதனையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வரலாற்று மனிதர்களின் தோன்றுகை என்பது அபூர்வமான சங்கதியாகின்றது. - பாரதி போன்றே. இப்பின்னணியிலேயே, சாந்திகுமார் என்ற ஒரு மனிதனின் காலமும் வந்தும் கடந்தும் உள்ளது.
அவர், தனது எழுத்துக்கள் மூலம், மலையக வரலாறு, என்ற விடயத்தையும் அதன் வழிவரும் மலையக சமூக உருவாக்கம், மேலும், மரபுசார் இடதுசாரி கட்சிகள் அவ்வரலாற்றை ஏந்திப் பிடிப்பதில் விட்ட தவறுகள், அத்தவறுகளின் தத்துவார்த்த அடிப்படைகள், லெனின்-ஸ்டாலின் வித்தியாசங்கள், அவற்றை அவர்கள் உள்வாங்குவதில் கைவிட்ட அம்சங்கள், அவ்வித்தியாசங்களில் குடிகொண்டிருந்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை பின்னணிகள் - என அவரது பார்வை ஓடியதாயிற்று.
கூடவே, மலையகத்தின் உள்ளேயே காணப்பட்ட சமரசங்கள், அவற்றின் பின்னடைந்த பத்தாம்பசளி ஆதிக்க அரசியல் - இவற்றையும் அவர் தன் வாழ்நாளில் கண்கொண்டு பகைக்க முனைந்திருந்ததும் குறிக்கத்தக்கதே. மூலங்களைத் தேடி உழைக்கும் அவரது ஆர்வமும், மக்கள் வகிக்கக்கூடிய வரலாற்று பாத்திரம் குறித்த அவரது கணிப்பும் அவரது பங்களிப்புகளின் அடிப்படையானது என கருதவும் இடமுண்டு. இவை அனைத்தையுமே ஒன்று சேர்த்தால், அது எமது காலத்திற்கு தேவையான அம்சங்களை மாத்திரம் உள்ளடக்காமல், ஆழ்ந்து கற்கக் கூடிய நாளைய இளைய தலைமுறையினருக்கும் பயன் சேர்க்க கூடும் என்றே கணிக்கலாம்.
ஆனால், இவை எளிதானவை அல்ல.
இனங்களுக்கிடையிலான முரண்களை கட்டுவிக்கும் நடைமுறையில் இருந்து, ரசிய மக்களை மீட்டெடுக்க ஓர் 14 வருடகால நீண்ட சமரசமற்ற உழைப்பு, உலகின் மிகப்பெரிய நாடானதும் பல்வேறு பிரிவுகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட வௌ;வேறு சிறுபான்மை இனங்களையும் உள்ளடக்கி இருந்த அன்றைய ரசியாவை மீட்டெடுக்கவும், உழைப்பு சக்திக்கூடு மக்களை ஒருங்கிணைக்கவும் ஒரு 14 வருட கால உழைப்பு ரசியாவில், லெனினின் கட்சிக்கு தேவைப்பட்டதாயின் - இதே விதமான மானுடம் சார்ந்த உழைப்பும் அர்ப்பணிப்பும் இங்கேயும் தேவையானதாகின்றது. இதற்கான ஊக்குவிப்புகளில் ஒன்றாக மேற்படி வாதங்களை நாம் இனங்காணலாம். இப்பின்னணியிலேயே சாந்திக்குமார் என்ற மனிதனின் வாழ்வும் எழுத்துக்களும் எமது கவனத்தை இன்றும் நாளையும் கோரக்கூடும்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.