அறிமுகம்: ஓவியர் வீரப்பன் சதானந்தன் - வ.ந.கிரிதரன் -
இலங்கை மலையகத்தின் டிக்கோயாவைச் சேர்ந்த ஓவியர் வீரப்பன் சதானந்தன் இலங்கையின் முக்கியமான நவீன ஓவியர்களிலொருவர். அண்மையில் இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியும் எழுத்தாளர் ஜோதிகுமார் மூலம் அறிந்து கொண்டேன். இவரைப்பற்றியும், இவரது ஓவியங்கள் பற்றியுமான சுருக்கமான குறிப்பிது.
ஓவியர் வீரப்பன் சதானந்தன் ஹட்டனிலுள்ள புனித ஜோன் பொஸ்கோ (St.John Bosco) பாடசாலையில் கல்வி கற்றவர். 1970-1972 காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற நிலத்தோற்ற (Landscape) ஓவியரான திரு.டொனால்ட் ராமநாயக்கவிடமும் (Donald Ramanayake), 1973-1975 காலகட்டத்தில் இன்னுமொரு புகழ்பெற்ற இலங்கையின் ஓவியரான திரு.ரிச்சார்ட் ஆர்.டி.கப்ரியலிடமும் (Richard R De Gabriel) ஓவியம் பயின்றவர். ஓவியர் டொனால்ட் ராமநாயக்க இவரை இலங்கைக் கலைச்சங்கத்தின் உறுப்பினராக்க 1971இல் ஆதரவளித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் இவரது ஓவியங்கள் இலங்கைக் கலைச்சங்கத்தின் கலைக்கூடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இவர் தனது ஓவியக் கண்காட்சியை நுவரெலியாவின் பொதுசன நூலகத்தின் கூடத்தில் 1999 - 2002 வரையிலான காலகட்டத்தில் ஏப்ரில் மாதத்தில் நடத்தியுள்ளார். மே மே 3, 2003 - மே 25, 2003 காலகட்டத்தில் ஜேர்மனியின் ஃபிராங்க்பேர்ட் நகரில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதனை நடத்துவதற்கு ஓவியர்களின் குழுவொன்று ஆதரவளித்தது. சென்னையில் நவமப்ர் 11,2010 - நவம்பர் 17, 2010 வரை நடைபெற்ற லியனார்டோ டாவின்சி தொடக்கம் வான்கோ வரையிலான ஓவியங்கள் பற்றிய கருத்தரங்கில் இவர் கலந்துகொண்டிருக்கின்றார்.
எழுத்தாளர் ஜோதிகுமார் இவரை மலையகத்தின் புகழ்பெற்ற ஓவியரான எஸ்.சிவப்பிரகாசத்துடன் இணையாகக் கருதப்படக்கூடிய இன்னுமோர் ஓவியராகக் கருதுவார். அதே சமயம் வீரப்பன் சதானந்தன் ஓவியர் எஸ்.சிவப்பிரகாசத்திடமிருந்து வேறுபடுவது இவரது நிலத்தோற்ற ஓவியங்கள் மூலம்தானென்றும் அவர் சுட்டிக்காட்டுவார். நிலத்தோற்றங்களை ஓவியங்களாக வரைவதில் ஓவியர் வீரப்பன் சதானந்தன் மிகுந்த திறமை மிக்கவராக விளங்குகின்றார். மேலும் இவரது ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ஜோதிகுமார் ஓவியர் வீரப்பன் சதானந்தனின் வர்ணத்தேர்வு, தூரிகைக் கோடுகள் (Brush Strokes), இயற்கையை வெளிப்படுத்தும் பாணி போன்றவை இயற்கையின் சீற்றத்தை வெளிப்படுத்திய ஓவியர் டேர்னர் (Turner), சமூக நீதிக்கான தேடலை, கோபத்தைத் தன் ஓவியங்களில் வெளிப்படுத்திய ஓவியர் வான்கோ போன்ற ஓவியர்களைக்கொண்ட ஓவியப் பாரம்பரியத்துக்கு அந்நியமானதல்ல என்பார்.