டைட்டானிக் கப்பலால் மீண்டும் உயிரிழப்பா? - குரு அரவிந்தன் -
அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் சென்ற வாரம் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக சென்ற ஐவர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்து விட்டார்கள்.
சமீபத்தில் நடந்த ஒன்றுகூடல் ஒன்றின்போது, சிலருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், பல விடயங்களையும் பேசும் போது, இருவர் இந்தக் கருத்தை முன்வைத்து வாதித்தார்கள். தங்கள் உரையாடலுக்குச் சாதகமாக இப்பகுதியில் 1985 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களையும் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். அவர்களில் முதியவர் ஒருவர், இது போன்ற மூடநம்பிக்கைகளால் கனடாவில் இருந்து வடஅத்திலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகமாட்டேன் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு நினைவில் நிற்கிறது.
டைட்டானிக் உல்லாசக் கப்பல் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். சினிமாப் படங்கள்கூட இந்தப் பெயரில் வெளிவந்தன. ஜேம்ஸ் கமரூனும் 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருந்தார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அவர் பலதடவை சிறிய நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் மூழ்கிய அந்த இடத்தை நேரடியாகப் பார்த்திருக்கின்றார். டைட்டானிக் கப்பல் புதிதாகக் கட்டப்பட்டு, விபத்தில் சிக்காது என்று உறுதி அளிக்கப்பட்டதால் பல செல்வந்தர்கள் இந்தக் கப்பலின் முதற்பயணத்தில் பங்கு பற்றினார்கள். ஆனால் கனடாவின் நியூபவுண்லாந்தில் இருந்து சுமார் 435 மைல்கள் தெற்கே வட அத்திலான்டிக் கரையில் பனிப்பாறையில் மோதியதால் கப்பல் 13,000 அடி ஆழத்தில் 1912 ஆம் ஆண்டு மூழ்கிப் போனது. இந்த ஆழத்தில் தண்ணீரின் அழுத்தம் 6இ000 pளi ஆக இருந்தது. கப்பல் ஒருபோதும் மூழ்காது என்று கப்பல் கட்டியவர்கள் உறுதியளித்ததால், உயிர் தப்புவதற்கு வேண்டிய போதிய பாதுகாப்பு சாதனங்களும் கப்பலில் இருக்கவில்லை.