செப்தெம்பர் 21 தமிழ்மக்கள் சிங்கள - பவுத்த பேரினவாதி மகிந்த இராசபக்சே அவர்களோடு கணக்குத் தீர்க்கும் நாள்!
வட மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கின்றன. செப்தெம்பர் 21 இல் தேர்தல் நடைபெற இருக்கிறது. வடக்கில் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே மக்களாட்சி முறைமையில் நம்பிக்கையுள்ள மக்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் செய்திகள் ஒரு நியாயமான, நீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும் சாத்தியத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. இது பல விதத்திலும் எதிர்பார்க்கப்பட்டதே. மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கட்சியோடு மட்டும் அல்லாமல் சிங்கள இராணுவத்தோடும் போட்டியிட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இன்னொரு அரசியல் சக்தியாக களம் இறங்கியுள்ளது. பிந்திக் கிடைத்த செய்தியின் படி கிளிநொச்சியில் ததேகூ இன் ஆதரவாளர்களுக்கு இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் கட்சி சார்ந்த அரசியல் செயற்பாடுகளுக்கும் இராணுவத்தினர் தடைகளைப் போட்டு வருகின்றனர் என ததேகூ இன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ததேகூ சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற குருகுலராசா, பசுபதிப்பிள்ளை போன்றோரின் வெற்றிவாய்ப்புக்கள் உறுதியாகியுள்ள நிலையில் அவர்களுக்காகப் பரப்புரை செய்கின்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை இராணுவம் தடுக்கின்றது.