உணர்ச்சித் தமிழ்த்தேசியத்திலிருந்து புரட்சிகரத் தமிழ்த்தேசியத்தை நோக்கி.... - நந்திவர்மப்பல்லவன் -
யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தினர் அனுபவித்துவரும் பிரச்சினைகளைப்பற்றிச் சிங்கள ஊடகவியலாளரான ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவையில் தெரிவித்த கருத்துகள் பி.பி.சி.சியின் தமிழ்ச்சேவை இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பிரசுரமாகியுள்ளது. இதில் 2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவற்றின் அடிப்படையில் ஷெலி உபுல் குமார யாழ்ப்பாணம் சென்று இது பற்றி ஆராய்ந்து இவ்வாவணத்தைத் தயாரித்துள்ளார்.
இதன்போது அவர் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது அவர் 'தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது' என்று பதிலளித்திருக்கின்றார். இது மிகவும் தவறான தகவல் என்பதை நாம் அனைவரும் அறிவோம்., யாழ் மாவட்டக் கிராமங்களில் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம் சாதி அடையாளங்களுடன் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.