சட்டத்தரணி சுவஸ்திகாவின் விடுதலைப்புலிகள் பற்றிய கூற்றும், யாழ் பல்கலைக்கழகத்தின் மறுப்பும்! - ஊருலாத்தி -
இலங்கையின் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான சுவஸ்திகா அருள்லிங்கம் விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று கூறியதற்காக , நீதித்துறை பற்றி அவர் ஆற்றவிருந்த உரையினை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது தமிழர் அரசியலில் இருக்கும் சகல முன்னாள் ஆயுத அமைப்புகளும் விடுதலைப்புலிகளுடன் முரண்பாடுகள் நிலவிய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளைப் பாசிஸ்டுகள் என்றே கூறி வந்தனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் எதிரான அமைப்புகளைத் துரோகிகள், ஒட்டுக்குழுக்கள் என்றே கூறி வந்தனர்.
விடுதலைப்புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று விமர்சித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கத்தை எதிர்க்கலாம். அதற்குப்பதிலாக மாணவர்கள் மாற்றுக் கருத்தினை முன் வைக்கலாம், அது அவர்களது உரிமை. ஆனால் அதற்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி உரையினைத் தடுத்திருப்பது சரியான செயலா? என்னைப்பொறுத்தவரையில் பல்கலைக்கழகம் பல்வேறு அரசியல் கோட்பாடுகள் பற்றியும் மாணவர்கள் கற்குமொரு கல்விக்கூடம். மார்க்சியம், சோசலிசம், நாசிசம், சியோனிசம், ஃபாசிசம் ,, என்று பல்வேறு வகையான அரசியல் கருத்து நிலைகள் உள்ளதை நாம் அறிவோம். இவற்றைப்பற்றிக் கற்கும்போது காய்தல் உவத்தலற்றுக் கற்கும் இருப்பிடமாக இயங்கவேண்டியது பல்கலைக்கழகமொன்றின் கடமையாகும். பல்வேறு வகையான அரசியல் கோட்பாடுகளையும் கற்று, அறிந்து அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்புகளை, விடுதலை அமைப்புகளை விமர்சனங்களுக்கு உள்ளாக்க வேண்டும். அவ்விமர்சனங்களின் அடிப்படையில் முடிவுகளுக்கு வர வேண்டும்.