இலங்கையில் வெளிவந்த 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகைக்கு முக்கியமானதோர் இடம் இலங்கைத் தமிழ் இலக்கியத்திலுண்டு. தமிழகத்தில் வெளியான 'கண்ணன்' சிறுவர் இதழ் எவ்விதம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதோ அவ்விதமே 'வெற்றிமணி' சஞ்சிகையும் பலரை உருவாக்கியுள்ளது. வெற்றிமணியின் 'பாலர் பக்கத்தில்' இளம் எழுத்தாளர்கள் பலர் தமது ஆரம்பகாலப்படைப்புகளை (கட்டுரை, சிறுகதை, விமர்சனம், நாடகம் , உருவகக் கதை போன்ற படைப்புகளை) எழுதியுள்ளார்கள். கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்தெல்லாம் இளம் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளார்கள். முஸ்லீம் இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் பலவற்றை 'வெற்றிமணி' இதழ் தாங்கி வெளியாகியுள்ளது. 'கவிதை' அரங்கம்' பகுதியிலும் பலர் இவ்விதமே எழுதியுள்ளார்கள். இலங்கையின் பிரபல எழுத்தாளர்களான திக்குவல்லை கமல், காரை செ.சுந்தரம்பிள்ளை, சாரதா, கவிஞர் புதுவை இரத்தினதுரை, கோப்பாய் சிவம் எனப்பலர் 'வெற்றிமணி' சஞ்சிகையில் சிறுவர் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஏழாம் வகுப்பு மாணவனான எனது குட்டிக்கதையொன்றும், பொங்கல் பற்றிய கட்டுரையொன்றும் 'வெற்றிமணி' சிறுவர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. கவிஞர் வி.கந்தவனம், இரசிகமனி கனக செந்திநாதன் , த. அரியரத்தினம், ஏ.ரி.பொன்னுத்துரை, மு.க.சுப்பிரமணியம் போன்றொர் தொடர்ச்சியாக 'வெற்றிமணி'யில் எழுதி வந்துள்ளார்கள். குறமகளின் சிறுவர் சிறுகதையொன்றினையும் ஓரிதழில் காண முடிந்தது.
அவ்வயதில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறைகளில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லுகையிலெல்லாம் யாழ் நகரிலிலிருந்த 'அன்பு புத்தகசாலை'க்குச் சென்று 'வெற்றிமணி'யை வாங்குவதுண்டு. 'அன்பு புத்தகசாலை' எழுத்தாளர் செங்கை ஆழியானின் அண்ணரான எழுத்தாளர் 'புதுமைலோலன்' அவர்களுடையது. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞரொருவர் எப்பொழுதும் சஞ்சிகைகள், நூல்கள் வாங்க அங்கு செல்லும்போதெல்லாம் அன்புடன் வரவேற்றுதவுவார். பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் என் கல்வி தொடர்ந்த என் பதின்ம வயதுக் காலகட்டத்திலும் அங்கு செல்வதுண்டு. அங்குதான் செங்கையாழியானின் முதலாவது நாவலான 'நந்திக்கடல்' சரித்திர நாவலினை வாங்கியதுண்டு. மார்க்சிம்கார்க்கியின் புகழ்பெற்ற நாவலான 'தாய்' (தொ.மு.சி.ரகுநாதன் மொழிபெயர்த்தது) நாவலை அவ்விளைஞரே எனக்கு வழங்கியவர்.
அறிஞர் அண்ணாவின் மறைவின் போது அவரது புகைப்படத்தை அட்டையிலிட்டு 'வெற்றிமணி' சஞ்சிகை அஞ்சலி செய்ததையும் அறிய முடிகின்றது.
'வெற்றிமணி டாணெனவே விண்முட்ட ஒலித்திடுவாய்.
நற்றமிழாம் எங்கள்மொழி நலமுற ஒலித்திடுவாய்'
என்னும் தாரகமந்திரத்துடன், குரும்பசிட்டி மு.க சுப்பிரமணியத்தைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'வெற்றிமணி' சஞ்சிகையின் பழைய இதழ்கள் என்னை அக்காலத்துக்கே இழுத்துச் சென்றுவிட்டன.
'நூலகம்' தளத்திலுள்ள வெற்றிமணி இதழ்கள் பல ஐம்பதுகள், அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் வெளியானவை. ஆரம்ப இதழ்கள் ஐம்பதுகளில் வெளியானவை வித்துவான் மு.கந்தையா, எம்.எம்.பாரிஸ், ஏ.கே.சாமி ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டியிலிருந்து வெளியாகியுள்ளதை அறிய முடிகின்றது. பின்னர் முல்லைத்தீவிலிருந்து வெற்றிமணி வெளியாகியுள்ளது. அதன் பின்னரே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகியுள்ளது.
விக்கிபீடியா வெற்றிமணியைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது: "வெற்றிமணி என்பது இலங்கையில் 1950 முதல் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக வெளிவந்த ஒரு சிறுவர் இதழ் ஆகும். இவ்விதழ் மு. க. சுப்பிரமணியம் என்பவரால் 1950 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டியில் இருந்து வெளியானது. வெற்றிமணி சிறுவர் இதழ் 1950 முதல் மலையக நகரான நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணியாற்றிய மு. க. சுப்பிரமணியம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. 1958 முதல் க. வே. மகேந்திரன் என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பூண்டுலோயாவில் இருந்து வெளிவந்தது. பின்னர் பொ. இராசரத்தினம் என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு முல்லைத்தீவு, தண்ணீரூற்று என்ற கிராமத்தில் இருந்து சக்தி அச்சகம் என்ற சொந்த அச்சகத்தில் இருந்து வெளிவந்தது. 1968 ஆம் ஆண்டில் மு. க. சுப்பிரமணியம் குரும்பசிட்டி பொன். பரமானந்தர் வித்தியாலய அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற பின்னர், சக்தி அச்சகம் யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரான்லி வீதிக்கு இடம் மாறியது. வெற்றிமணி பத்திரிகையும் யாழ்நகரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இறுதியாக, சக்தி அச்சகம் 1972 இல் சுன்னாகத்திற்கு இடம் மாறியதை அடுத்து 1979 வரை அங்கிருந்து வெளிவந்தது. மு. க. சுப்பிரமணியம் 1980 இல் காலமானதை அடுத்து வெற்றிமணியும் நின்று போனது."
"இவ்விதழ் மு. க. சுப்பிரமணியம் என்பவரால் 1950 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டியில் இருந்து வெளியானது" என விக்கிபீடியா கூறுகின்றது. ஆனால் நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணியின் ஆரம்பகால இதழ்களின் ஆசிரியர்களாக வித்துவான் மு.கந்தையா, எம்.எம்.பாரிஸ், ஏ.கே.சாமி ஆகியோரின் பெயர்களையே அறிய முடிகின்றது. 'வெற்றிமணி' சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வின் தேவையை இத்தகவல்கள் வேண்டி நிற்கின்றன.
இவையெல்லாம் அண்மையில் 'நூலகம்' தளத்தில் 'வெற்றிமணி' சஞ்சிகையின் பல இதழ்களைக் கண்டபோது நினைவுக்கு வந்தன. அவற்றில் சிலவற்றை மேய்ந்து பார்த்தபோதுதான் 'வெற்றிமணி' சஞ்சிகையின் சிறப்பான பங்களிப்பு புரிந்தது. 'வெற்றிமணி' பற்றி விரிவானதொரு கட்டுரை பின்னர் எழுதவேண்டுமென்றி எண்ணிக்கொண்டேன். 'வெற்றிமணி' இதழ்கள் பலவற்றை 'நூலகம்' தளத்தில் வாசிக்கலாம்:
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.