'வெற்றிமணி' சஞ்சிகையின் 22.2.1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ((M.M.Faries) என்பவரை ஆசிரியராகக்கொண்டு நாவலப்பிட்டி மிட்லண்ட் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு அவராலேயே வெளியிடப்பட்டுள்ளது. இதில் மலர் 1, இதழ் 1 என்றிருப்பதால் இதுவே அவர் ஆசிரியராகவிருந்து , வெளியிட்ட முதலாவது இதழென்பது தெரிகின்றது. (ஆதாரம் - நூலகம் தளத்திலுள்ள வெற்றிமணி சஞ்சிகைகள்) 20-10-1955 இதழ் எம்.எம்.பாரிஸ் ஆசிரியராகவிருக்கின்றார். அச்சடிக்கப்பட்டது ஆனந்த, யாழ்ப்பாணத்தில்.
வெற்றிமணி சஞ்சிகையின் முதலாம் ஆண்டு மலராக 14.1.1956 இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர் ஏ.கே.சாமி. இவ்விதழில் அட்டைப்படம் அழகாக வந்துள்ளதுடன், சஞ்சிகையின் வடிவமைப்பும் மாறியுள்ளதையும் காண முடிகின்றது. அட்டையில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பொங்கல் கவிதையும் வெளியாகியுள்ளது. முதலாவது ஆண்டு மலர் பொங்கல் மலராக வெளியாகியுள்ளது. 1.12.1956 இதழில் ஆசிரியர் ஏ.கே.சாமி '1957 தை மாதம் தொடக்கம் கெளரவ ஆசிரியராக வித்துவான் மு.கந்தையா அவர்கள் கடமையாற்றுவார் என்று அறிவித்திருக்கின்றார்.
வெற்றிமணி சஞ்சிகையின் 1.9.1956 இதழில் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியொன்று முன் பக்கத்தில் வெளியாகியுள்ளது. "தமிழ் பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்தை நிர்ணயிக்கும் தமிழரசுக் கட்சியின் சரித்திரப்பிரசித்தி பெற்ற மாநாடு திருகோணமலையில் 18,19-8-1956 இல் நடைபெற்றது. தமிழ்பேசும் இனத்தின் உரிமைப்போராட்டத்திற்குச் செல்லும் "திருமலை யாத்திரை" என்னும் அறிவிப்புடன் நெடுங்கவிதையொன்றின் முதற்பகுதி , நவாலியூர் பண்டிதர் சோ.இளமுருகனார் எழுதியது, வெளியாகியுள்ளது. கவிதை "திருமலைக்குச் செல்லுவோம். சிறுமை அடிமை வெல்லுவோம்" என்று ஆரம்பமாகியுள்ளது.
இவ்விதழில் "எங்கள் ஊர் வவுனியா" என்னுமொரு கட்டுரையினை மாணவர் மன்ற உறுப்பினரான செல்வி.சே.சிவநேசமணி என்னும் மாணவி எழுதியிருக்கின்றார். சுருக்கமான , சுவையான கட்டுரை . அதில் அவர் வன்னிக்கு 'அடங்காப்பற்று' என்னும் காரணம் வந்த காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார். இதுவரை நான் கேட்காத விளக்கம். தர்க்கபூர்வமானது. அதனை இங்கு தருகின்றேன்: "வன்னிநகர் "அடங்காப்பற்று" எனும் மங்காப்பெயர் கொண்டது. இப்பெயர் பெறுவதற்குக் காரணம் அவர்கள் பேராசையன்று. முற்காலத்தில் பல்வகைச்செல்வங்களும் நிறைந்து விளங்கிய வன்னியிலே உள்ள மக்கள் ஈதலையே தலை சிறந்த அறமாகக் கொண்டிருந்தனர். இரப்போர்க்கு இல்லையென்னாது ஈந்தனர். ஈகையின்மேல் அவர்கள் கொண்டிருந்த அடங்காப்பற்றினாலேயே அவர்களது நாடாகிய வன்னிக்கு 'அடங்காப்பற்று' எனப்பெயர் உண்டாகியதென்று பலர் கூறுவர்".
இவ்விதழில் இன்னுமொரு சிறப்புமுண்டு. எழுபதுகளில் வெற்றிமணியை வெளியிட்டு வந்த திரு மு.க.சுப்பிரமணியம் அவர்களின் புகைப்படம் ஏனையவர்களுடன் வெளியாகியுள்ளது. அத்துடன் அவரைப்பற்றிய குறிப்பொன்றும் ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "ஒழுக்கத்தோடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும் கதைகள் மூலம் ஆங்கிலக் கதைகளைத் தழுவிய ஆசிரியர் திரு.மு.க.சுப்பிரமணியன் அவர்கள் தொடர்ந்து எழுத முன்வந்துள்ளார். இதற்காக யாம் அவரைப் பாராட்டுகின்றோம். மாணவர்கள் இப்பகுதியை வாசிக்க வேண்டும்." என்றுள்ளது. இதன் மூலம் வெற்றிமணிக்கு ஆசிரியர்மு.க.சுப்பிரமணியத்தின் அறிமுகம் முதன் முதலாக ஏற்பட்ட விடயத்தை அறிய முடிகின்றது. அக்குறிப்பினைத்தொடர்ந்து மு.க.சுப்பிரமணியம் அவர்களின் 'தேவதை கட்டிய கோயில்' என்னும் கதையும் பிரசுரமாகியுள்ளது.
தை, மாசி (1957) வெற்றிமணி சிறப்பான வடிவமைப்புடன் , வித்துவான் மு.கந்தையாவை கெளரவ ஆசிரியராகக் கொண்டு வெளியாகியுள்ளது. ஆனால் பங்குனி இதழ் மீண்டும் சீறுத்துப் பழைய நிலைக்குச் சென்று விட்டது. "பல காரணங்களினால் உரிய பக்கங்களுடன் வெற்றிமணிய்யை வெளியிட முடியாமைக்கு வருந்துகின்றோம். நேயர்களிடம் மன்னிப்பும் கேட்கின்றோம். 43.4.1957 தொடக்கம் வெற்றிமணி 20 பக்கங்களுடன் வெளிவரும்.' என்னும் முதற்பக்க அறிவிப்புடன் வெளியாகியுள்ளது. அச்சுப்பதிவு சரவண அச்சகம், நாவலப்பிட்டி என்றும், பதிப்பாசிரியர் கே.வி.மகேந்திரன் என்றுமுள்ளது.
வெற்றிமணி சஞ்சிகையின் மார்கழி 1957 இதழ் வரை , வெற்றிமணியின் முதல் மூன்று ஆண்டுகளுக்கான அனைத்து இதழ்களும் 'நூலகம்' இணையத்தளத்திலுள்ளன. அதன் பின்னர் மே 1968 இதழிலிலிருந்து மாசி 1974 இதழ் வரையுமே அத்தளத்திலுள்ளன. இக்காலகட்டத்தில் 'வெற்றிமணி' சஞ்சிகையின் கெளரவ ஆசிரியராக இருந்தவர் குரும்பசிட்டி மு.க.சிவசுப்பிரமணியம் அவர்கள். இக்காலகட்டத்தில் பொன்.இராசரத்தினம் அவர்களால் சக்தி அச்சகத்தில் வெளியிடப்பட்டதைச் சஞ்சிகையின் இறுதிப்பக்கத்தகவல் தெரிவிக்கின்றது. மே 1968 இதழ் பொன்.இராசரத்தினம் அவர்களால் முள்ளியவளை தண்ணீரூற்றிலுள்ள சக்தி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. மாசி 1974 இதழ் பொன்.இராசரத்தினம் அவர்களால் யாழ் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த சக்தி அச்சகத்தில் , சக்தி அச்சகத்தினருக்காக வெளியிடப்பட்டுள்ளது என்னும் இறுதிப்பக்கத்தகவல் தெரிவிக்கின்றது.
ஜனவரி 1958 - ஏபரில் 1968 வருட காலத்து வெற்றிமணியின் இதழ்களை நூலகம் தளத்தில் காணவில்லை. அக்காலகட்டத்தில்தான் குரும்பசிட்டி மு.க.சிவசுப்பிரமணியம் அவர்கள் 'வெற்றிமணி'யின் கெளரவ ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அவரது காலத்து 'வெற்றிமணி'தான் என் மாணவப்பருவத்தில் எனக்கு அறிமுகமான என்னை மிகவும் கவர்ந்த 'வெற்றிமணி' . இவரது காலத்தில் வெளியான 'பாலர் பக்கம்' மற்றும் 'கவிதை அரங்கம்' பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
'வெற்றிமணி' சஞ்சிகையின் இதழ்களை மீண்டும் புரட்டிப்பார்த்தபொழுது அச்சஞ்சிகையின் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு, குறிப்பாகச் சிறுவர் இலக்கியத்துக்கு அது ஆற்றிய மகத்தான் பங்களிப்பு புலப்படுகின்றது. மாணவர் மன்றம், பேனா நண்பர்கள் சங்கம் என்று மாணவர்களை ஊக்குவித்து, அவர்களில் பலரை வெற்றிமணியில் எழுத வைத்துள்ளது. அக்காலகட்டத்தில் பல சிறுவர்களும் , சிறுமியர்களும் எழுதியுள்ளார்கள். தமிழகத்திலிருந்து கே.காமராஜன் (என்னும் மாணவர்) தமிழ்த்தம்பி என்னும் பெயரில் தொடர் நாடகம், தொடர்கதை எனப்பல ஆக்கங்களை எழுதியுள்ளார். பின்னர் வளர்ந்தபின்னர் தமிழகத்தில் 'வெற்றிமணி' 'ஏஜண்ட்'டாகவுமிருந்திருக்கின்றார்.
இவரைப்போன்று அன்று 'வெற்றிமணி'யில் ஐம்பதுகளில் எழுதியவர்களில் தொடர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்னும் விபரத்தை அறிய ஆவலாயுள்ளது. 'வெற்றிமணி'ப் படைப்புகள் பற்றி ஆய்வுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்னுமெண்ணமும் தோன்றுகின்றது. குறிப்பாக 'வெற்றிமணி' சஞ்சிகையில் வெளியான சிறுவர் பாடல்கள் மிகவும் சுவையானவை; சிறுவர்களைக் களிகொள்ள வைப்பவை. அவையும் தொகுத்து வெளியிடப்பட்டால் சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ளத்தாகவிருக்கும்.
உசாத்துணை விபரங்கள்:
வெற்றிமணி சஞ்சிகையின் பிரதிகள் ( நூலகம் தளத்திலுள்ளவை) - http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.