அண்மையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்த இரு நூல்களை ('திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்', மற்றும் 'On Films Seen ) 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன'த்தின் புகழ்பெற்ற முன்னாள் ஒலிபரப்பாளரும் , ஊடகவியலாளருமான திரு.வின்.என்.மதியழகன் மூலம் பெற்றுக்கொண்டேன். இத்தருணத்தில் பல வருடங்களுக்கு முன்னர் நண்பரொருவரிடம் கே.எஸ்.எஸ் அவர்கள் கொடுத்திருந்த நூல்கள் இன்னும் என் கைகளை வந்தடையவில்லையென்பதையும் நினைவு கூர்ந்திடத்தான் வேண்டும். நூல்களை அனுப்பிய கே.எஸ்.எஸ் அவர்களுக்கும் அவற்றை விரைவாகவே கொண்டுவந்து என்னிடம் சேர்ப்பித்த வி.என்.எம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கோடி.
இவ்விரு நூல்களில் 'கொடகே பிறதர்ஸ்' பதிப்பக வெளியீடாக வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலைப்பற்றிய எனது குறிப்புகளே இச்சிறுகட்டுரை. இந்நூலைப்பார்த்தபோது எனக்கு மிகுந்த பிரமிப்பே ஏற்பட்டது. இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அவர் அவ்வப்போது பார்த்து, களித்துச் சிந்தித்தவற்றை வைத்து எழுதப்பட்ட 58 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 1990 ஆம் ஆண்டுக்கு முன் எழுதிய கட்டுரைகள் கிடைக்காததால் , அதற்குப்பின்னர் எழுதிய கட்டுரைகளையே இந்நூல் அடக்கியுள்ளதென்பதை அவரது நூலுக்கான முன்னுரை புலப்படுத்தும். கூடவே அம்முன்னுரை இன்னுமொன்றையும் கூறும். அது இந்நூலுக்கான காரணம் பற்றியது. தன்னைப்போல் இவ்விதம் சர்வதேசத் திரைப்பட விழாக்களைக் கண்டு களிக்க முடியாத சினிமாப்பிரியர்களுக்கு இவ்விதமான சர்வதேசத் திரைப்படங்கள் பற்றிய தகவல்களைத் தருவதே இந்நூலின் நோக்கம் என்று அவர் மேற்படி முன்னுரையில் குறிப்பிடுவார். உண்மையில் கடந்த பல தசாப்தங்களாகக் கலை, இலக்கியத்துறையில் அவர் தளராது இயங்கி வருவதற்குரிய காரணங்களிலொன்றல்லவா அது.
இந்நூலின் மிகவும் பிரதானமானதும் , முக்கியமானதுமான அத்தியாயம் முதலாவது அத்தியாயமாகவிருப்பது நூலின் சிறப்பான ஒழுங்கமைப்புக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள எவரும் கலைத்துவம் மிக்க திரைப்படங்களைப் பார்த்து இரசிப்பதற்கு முக்கியமாகத் திரைப்படக்கலை பற்றிச் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை நன்கு அறிந்துகொள்ள இவ்விதமான ஆரம்ப அறிவு பயனுள்ளதாகவிருக்கும். இதனையுணர்ந்துதான் இந்நூலின் முதலாவது அத்தியாயத்துக்குத் 'திரைப்படங்களை அறிந்துகொள்ளல்' (Understanding the Films) என்று தலைப்பிட்டுள்ளார். இவ்வத்தியாயமெட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஆறு கட்டுரைகளும், டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான இரண்டு கட்டுரைகளுமே அவை. 'சினிமாவின் மொழியும், அமைப்பும்', 'திரைப்பட மொழி', 'பார்வையாளரொருவரின் பங்கு' போன்ற பல விடயங்களில் சினிமா என்னும் ஊடகத்தைப்பற்றிய தனது கருத்துகளை முதல் ஆறு கட்டுரைகளில் வெளிப்படுத்துவார் கே.எஸ்.எஸ் அவர்கள். அடுத்த இரு கட்டுரைகளில் தமிழ்ப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான அமரர் பாலு மகேந்திராவின் சினிமா பற்றிய பார்வையினை நேர்காணல் மற்றும் கூற்றுகள் வாயிலாக வெளிப்படுத்துவார்.
முதலாவது கட்டுரையான 'சினிமாவின் மொழியும் அமைப்பும்' என்னும் கட்டுரையில் அவர் கூறும் முக்கியமான கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவார்:
1. "சினிமா ஊடகத்தினை அறிந்துகொள்ளல் முக்கியமானதொரு முன்நிபந்தனையாக இன்றுள்ளது. பொதுவாக நம்மில் பலர் திரைப்படமொன்றினைப் பொழுதுபோக்குவதற்காகவே பார்ப்பார்கள். பொழுதுபோக்கு அம்சமென்பது எல்லாவகைக் கலைகளிலுமுள்ளது, ஆனால் அதனுடைய முக்கியத்துவம் அதன் நோக்கத்துக்கமைய அக்கலைகளில் வேறுபடும். நாம் திரைப்பட ஊடகத்தை ஒரு கலை வடிவமாக எடுப்போமானால் , நாம் அடிப்படையில் மூன்று வகை திரைப்படங்களிருப்பதை அறியலாம். பொழுதுபோக்கு அம்சத்தை அதிகமாகக் கொண்டுள்ள வர்த்தகத்திரைப்படங்கள், படத்தை உருவாக்குபவரின் படைப்புத்திறனையும், சொந்தக் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் மற்றும் இவ்விரு போக்குகளுக்குமிடைப்பட்ட திரைப்படங்கள் என்பவையே அவை. ஆக, ஒரு திரைப்படத்தைப் பல்வேறு வகைகளில் பார்க்கலாம். ஆனால் திரைப்படமொன்றினைப்பார்ப்பதாலேற்படும் உண்மையான இன்பமென்பது திரைப்பட ஊடகம் பற்றி நன்கு அறிந்துகொண்டாலே சாத்தியமாகும். சினிமாவும் கூட செயற்பயன்மிக்க , அல்லது பயன் நோக்கமும், பயன்பாட்டுத் தன்மையும் மிக்க (Functional) கலைகளிலொன்றே. திரைப்படமொன்றின் ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு நிச்சயமான நோக்கமுண்டு.
2. திரைப்படமொன்றின் மொழி (Language), அமைப்பு (Structure) மற்றும் அது கூறும் பொருள் (Meaning) பற்றிய அவரது கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: ஒரு திரைப்படமொன்றின் பண்புகள் படம் (Picture) , ஒலி (Sound) மற்றும் இவ்விரண்டையும் ஒளி (Lighting) , நடிப்பு (Acting) ஆகியவற்றுடன் தொகுப்பது ஆகும். திரைப்படமொன்றின் அமைப்பைப் (Structure) பொறுத்தவரையில் அது திரைப்படமொழிக் (Language ) கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும். அதாவது படம் மற்றும் ஒலித்துண்டுகள் குறிப்பிட்டதொரு ஒழுங்கில் உருவாக்கப்படுவதே திரைப்படமொன்றின் அமைப்பாகும். திரைப்படமொன்று கூறும் பொருள் என்பது அது எதனை வெளிப்படுத்துகின்றது என்பதேயாகும். அதுவே திரைப்படமொன்றின் செயற்பயன் (function) ஆகும்.
அடுத்த கட்டுரையான 'சினிமாவின் மொழி'க் கட்டுரை சினிமாவின் மொழியினை உருவாக்கும் கூறுகளான படம், ஒலி மற்றும் தொகுப்பு ஆகியவை பற்றி மேலும் விரிவாகக் கூறுவார். பார்வைக் காட்சித்துண்டுகள் (Visual Shots), ஒலிக் காட்சித்துண்டுகள் (Sound Shots) மற்றும் தொகுப்பாக்கல் (Editing) ஆகியவையே திரைப்பட மொழியினை உருவாக்கும் முக்கிய கூறுகள். தொகுப்பாக்கலே துண்டுகளாகக் கிடக்கின்ற பார்வைக்காட்சிகள் மற்றும் ஒலிக்காட்சிகளை ஒன்றிணைத்து அவற்றுக்கொரு தொடர்ச்சியினையும், அர்த்தத்தினையும் தந்து பார்வையாளருக்குப் புரிதலை ஏற்படுத்துகின்றது. சினிமாவின் இத்தொடர்ச்சியே (Continuity) 'ஸ்கிரிப்ட்'டின் அடிப்படையுமாகும். மேலும் பார்வைக்காட்சி (Visual Shot)) ஒன்றினை பொருளிலிருந்து 'கமரா'வின் தூரம், தரையிலிருந்த் 'கமரா'வின் உயரம், 'கமரா'வின் இயக்கம் மற்றுமதன் வேகம், ஒளி, வில்லைகள், வர்ணங்கள், காட்சியின் நேர அளவு போன்ற பல விடயங்கள் நிர்ணயிப்பவையாகவுள்ளதாகச் சினிமாப் பண்டிதர்கள் கூறுவர்.
இம்முதலாம் அத்தியாயத்திலுள்ள இன்னுமொரு கட்டுரையான 'திரைப்படப்பார்வையாளர் ஒருவரின் பங்கு' என்னும் கட்டுரையும் முக்கியமானது. திரைப்படத்தைப் பார்வையிடும் பார்வையாளர் ஒருவரது கண்களாலும், செவிகளாலுமே அத்திரைப்படத்தை உள்வாங்குகின்றார். ஆக திரைப்படமானது தொகுக்கப்படும்போது பார்வையாளரின் உளவியற் செயற்பாடுகளையும் கணக்கிலெடுத்து, அதற்கிசைவாகவே தொகுக்கப்படுகின்றதென்று குறிப்பிடும் கே.எஸ்.எஸ் திரைப்பட மொழியானது எவ்விதம் பார்வையாளரின் கேட்டல், பார்த்தல் மூலம் அவருக்கு எளிதாக அத்திரைப்படத்தைப் (அவருக்குத் திரைப்பட மொழி பற்றி எவ்விதமான புரிதலும் இல்லாத நிலையிலும் கூட) புரிந்துகொள்ளக்கூடியதொரு மொழியாகவிருக்கின்றது என்றும் கூறுவார். அதன் காரணமாகவே அதுவோர் இயற்கை மொழி (Natural language) என்றும் கூறுவார்.
இக்கட்டுரையில் கே.எஸ்.எஸ் கூறும் இன்னுமொரு விடயமும் என்னைக் கவர்ந்தது. அது திரைப்படப்பார்வையாளர் ஒருவர் ஏற்கும் மூன்று வேடங்கள் (Roles) பற்றியது. திரைப்படக் கதாபாத்திரங்களை , அவற்றின் மேல் பல்வகை ஆர்வங்கள் மிக அவதானிக்கும் அவதானிப்பாளராக ( Observer), கதாபாத்திரங்கள் தமக்குள் தொடர்புகொள்வதற்குரியதோர் ஊடகமாக (Medium) மற்றும் கதாபாத்திரங்களுக்காக அவற்றின் செயற்பாடுகளைச் செய்பவராக என மூவகையான வேடங்களைப் பார்வையாளர் ஒருவர் ஏற்கின்றார். இதனால் பார்வையாளர் ஒருவர் உளவியல்ரீதியாக அத்திரைப்படத்தினுள் உள்வாங்கப்பட்டு அதனுடன் ஈடுபாடுடையவராகின்றார். இதன் விளைவாக அவரால் அத்திரைப்பட அனுபவத்திலிருந்து தன்னை வேறுபடுத்திட முடிவதில்லை. பலருக்குத் திரைப்படமானது மிகவும் தெளிவான அனுபவத்தைத் தருகின்றது. அவர்களுக்கே நடந்தது போன்ற உணர்வினையேற்படுத்துகின்றது. இதுவே திரைப்பட ஊடகமொன்றின் பலமாகும்.
நாடகவியலாளர் 'பிரெக்ற்'டைத்தொடர்ந்து, நவீனத்திரைப்படத்தயாரிப்பாளர்களில் சிலர் உதாரணமாக ஃபிரெஞ்சுத் தயாரிப்பாளரான ஜீன்-லக் கொடார்டு (Jean-Luc Goddard) போன்றவர்கள் பார்வையாளர்களைத் திரைக்கதையின் உளவியல் மையத்திலிருந்து பிரித்தெடுப்பதற்காகப் படமொன்றினை உருவாக்கும்போது சில வகை உபகரணங்களைப் பயன்படுத்துவர் என்பதையும் மேற்படி கட்டுரையின் வாயிலாக அறிந்துகொள்கின்றோம்.
மேற்படி முதலாம் அத்தியாயத்திலுள்ள இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவுடனான நேர்காணல்களும் முககியமானவை. திரைப்பட இரசிகர்களூக்குத் திரைப்படம் பற்றிய பல அரிய தகவல்களைத் தரும் நேர்காணல்கள் இவை. 'ஒரு திரைப்படத்தயாரிப்பாளர் பேசுகின்றார்' என்னும் கட்டுரையில் பாலு மகேந்திரா அவர்கள் கட்டுரையாளரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றார். ஒரு திரைப்படக் காட்சியை அல்லது அதன் தொடர்ச்சியை எவ்வாறு படமாக்குகின்றீர்கள்? என்னும் கேள்விக்குப் பாலு மகேந்திரா அவர்கள் ஒரு படைப்புத் தீர்மானமானது ஒரு காட்சியின் அல்லது 'ஸ்கிரிப்'டின் தேவைகளுக்கேற்ப எடுக்கப்படுகின்றதென்றும், உதாரணமாகப் படுக்கையறைக் காட்சியானால் பொதுவாக அக்காட்சியானது இரவுச் சூழலில் அமைந்திருப்பதாகவே எடுக்கப்படுமென்றும், ஆனால் வேண்டுமானால் தனக்கு அவ்விரவுக்காட்சிக்கு எவ்வகையான ஒளியளவினையும் கொடுக்க முடியுமென்றும் கூறுவார். மேலும் அக்காட்சிக்குரிய இரவுச் சூழலானது அக்காட்சி வெளிப்படுத்தும் உணர்விலேயே தங்கியுள்ளதென்றும் கூறுவார்.
மேற்படி நேர்காணலில் இன்னுமொரு கேள்வியில் கட்டுரையாளர் 'சினிமா என்பது விரையும் படம் (Moving Image) என்றால் , ஏன் சில திரைப்படங்களில் வேகமான செயல் (fast Action) ஏதுமில்லை?' என்று கேட்பார். அதற்கு பாலு மகேந்திரா ' ஒரு திரைப்படத்தில் உளவியல் ரீதியாக, கதைரீதியாக, புவியியல்ரீதியாக போன்ற இயக்கங்களுள்ளன. பார்வையாளர்கள் செயற்கைத்தனமான வேகத்தில் இயங்கும் திரைப்படங்களுக்கேற்ப பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களுக்கு ஏனைய திரைப்படங்கள் மெதுவாக இயங்குவது போலிருக்கும். அதே சமயம் சில கலைத்துவம் மிக்க படைப்புகளை உருவாக்குவோர் வேண்டுமென்றே காட்சிகளின் தொடர்ச்சி எவ்விதக் காரணங்களுமில்லாமல் இழுபட வைக்கின்றார்கள்.' என்பார்.
இன்னுமொரு கேள்வியில் ' ஒரு காட்சியின் (Shot) செயற்பயன் என்ன?' என்று கேட்கப்பட்டதற்குப் பாலு மகேந்திரா 'ஒரு காட்சியானது ஒரு விடயத்தைக் கூறுகையில், மிகவும் பயன்மிக்க விளைவினைத் தரத்தக்கதாகக் கூறப்பட வேண்டும். அவ்விதம் பயன்மிக்க விளைவினைத்தரும் வகையில் கூறிய பின்னர் , அக்காட்சிக்குத் திரையில் தொடர்ந்துமிருப்பதற்கு எவ்வித முகாந்திரமுமில்லை. மேலுமொரு அது பற்றிய சட்டம் (Frame) கூட இருக்கக் கூடாது.... தம் கலைத்துவப்படைப்புகளுக்காக்ப் பாராட்டப்பட்ட கலைப்படப்படைப்பாளர்களிடம் கூட இவ்விதமான தவறினைப் பார்த்திருக்கின்றேன். எனக்கு உண்மையில் இதற்கான காரணம் அவர்களது நடத்தையுடன் சம்பந்தப்பட்ட ஒன்றா என்பது சரியாகத்தெரியாது. இயக்குநர் ஒருவரின் நடத்தை அல்லது ஆளுமை அவரது திரைப்படத்தில் பிரதிபலிக்கும். அடிப்படை விடயமென்னவென்றால் ஒரு காட்சிக்கு நிச்சயமான செயற்பயன் (Function) இருக்க வேண்டும். அது ஏதோவொன்றினைக் கூற முயற்சி செய்ய வேண்டும். அது கூறப்பட்டவுடன் அது போய்விட வேண்டும். இல்லாவிட்டால் இருப்பதற்கு ஏதாவது முக்கியமான காரணமிருக்க வேண்டும்.' என்பார்.
இவை போல் நடிப்பு, இயக்குநர், சினிமா வகைகள் (வர்த்தக, வெகுசன, இடைப்பட்ட் மற்றும் சிறுபான்மைச்சினிமா போன்ற) , பல சினிமா சம்பந்தப்பட்ட விடயங்களைப்பற்றியெல்லாம் பாலு மகேந்திரா கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்திருப்பார்.
'இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா திரைப்படங்கள் பற்றிப் பேசுகின்றார்' என்னுமின்னுமொரு கட்டுரையில் பாலுமகேந்திரா அவர்கள் 'தீவிர தமிழ்ச்சினிமா', 'நடிப்புப் பற்றி..',' பின்னணி இசை', 'அரசியல் திரைப்படங்கள் பற்றி..', 'வர்ணங்களைப் பாவிப்பது பற்றி..', 'கமராவினூடு பார்த்தல் பற்றி..' மற்றும் 'பாலுணர்வு'பற்றியெல்லாம் பதிலளித்திருப்பார். அரசியல் படங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் 'தனக்கு ஒருபோதுமே அரசியல் படங்கள் உருவாக்குவதில் ஆர்வமிருந்ததில்லை. எனக்கு மானுட உறவுகள் மீதுதான் நாட்டமிருக்கிறது' என்பார். பின்னணி இசை பற்றிக் குறிப்பிடுகையில் 'சத்யஜித் ரே குறிப்பிட்டதுபோல் திரைப்படமொன்றின் பின்னணி இசையானது கேட்கப்படாத இசையாகவிருக்க வேண்டும். வர்ணங்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் ' இந்தியத் திரைப்படங்களில் மிகவும் அதிகமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது வர்ணமாகும். ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் வர்ணத்தை வர்ணத்துக்காகவே பாவிக்கின்றார்கள். அவர்களுக்கு வர்ணத்துக்குப் படைப்புத்திறன் மற்றும் உளவியல்ரீதியிலான செயற்பயன் (Function ) உள்ளதென்பது தெரியாது. வர்ணமானது திரைப்படத்தின் 'உள்ளடக்கப்பொருள்'தனை (Theme) வெளிப்படுத்துவதற்கு மிகவும் திறமையாகப் பாவிக்கப்பட முடியும்.'
இவை போன்ற பல்வேறு திரைப்பட உருவாக்கம் பற்றிய கே.எஸ்.எஸ்ஸின் கருத்துகள் இவை பற்றிய எவ்வித அறிவுமில்லாமல் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே திரைப்படம் பார்க்கும் ஒருவருக்குத் திரைப்படம் பற்றிய பல விடயங்களைப் புரியவைக்கின்றன. அவ்வகையில் நூலிலுள்ள அத்தியாயங்களில் முக்கிய அத்தியாயமாக இதன் முதல் அத்தியாயத்தினைக் கூற முடியும்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.