எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.
அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் " நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது " என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.
இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:
1. இயக்கத்தில் சேர்ந்தபொழுது எடுத்த பயிற்சிகள்.
2. தமக்குப் பொறுப்பான பகுதிகளில் ஊர்ப்பிரச்சினைகளைத்தீர்த்து வைத்தல் பற்றிய விபரங்கள்..
3. அக்காலகட்டத்தில் இயங்கிய பல்வேறு அமைப்புகளுடனான தொடர்புகள், முரண்பாடுகள்; அவற்றைக் கையாண்ட விபரங்கள்..
4. பிற இயக்க ஆளுமைகளுடனான சந்திப்புகள், நினைவுகள்.
5. யாழ் கோட்டை முற்றுகையினை இயக்கங்கள் ஒன்றிணைந்து செய்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள்.
இவர் கூறிய விடயங்களில் பின்னர் இயக்கத்தின் இராணுவப்பொறுபாளராக விளங்கிய 'மாணிக்கதாசனை'ப்பற்றிக் கூறியதும் என் கவனத்தைக் கவர்ந்தது. அக்காலப்பகுதியில் (84-87) மாணிக்கதாசன் இயக்கப்போராளிகளைக் கவர்ந்த ஒருவராக விளங்கினாரென்று குறிப்பிட்டார். போராளிகளுடன் நன்கு வேடிகையாகக் கலகலப்பாகச் சிரித்து, உற்சாகத்துடன் கதைப்பவர் என்றும் , வேகமாக வாகனத்தை ஓட்டி வருபவர் என்றும் குறிப்பிட்ட அவர் ஒருமுறை அவரைத்தான் சந்தித்த விபரத்தையும் குறிப்பிட்டார். தான் அப்பகுதிப் பொறுப்பாளர் என்பதால் தன்னைச்சந்திக்க வந்த மாணிக்கதாசன் தன்னை ஏற்றிக்கொண்டு வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றார் என்றும், தன்னுடன் உரையாடிவிட்டுச் சென்றார் என்றும் ,அச்சமயம் அப்பகுதியில் இயக்கத்தை விஸ்தரிப்பது பற்றிக் கதைத்தார் என்றும் குறிப்பிட்டார். முதற் சந்திப்பிலேயே போராளிகளைக் கவர்ந்து விடும் ஆளுமை மிக்கவராக அவர் விளங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
அக்காலகட்டத்தில் எப்பொழுதும் கையில் கிரனைட்டுடன் திரிந்தது பற்றியும் , படையினரை எதிர்கொண்டு தப்பிய அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார்.
இவை போன்ற பல விடயங்களை ஆவணப்படுத்தும் வகையில் இவரைப்போன்றவர்களின் நனவிடை தோய்தல் நிச்சயம் இருக்குமென்று நினைக்கின்றேன்.
இவர் ஏற்கனவே 84-87 காலப்பகுதியிலான அராலி வடக்கு அனுபவங்களைத் தனது புனைகதைகளில் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாக 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலில் அக்காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற அராலித்துறை பற்றியும், பல்வேறு இயக்கங்களும் மீனவர்களிடமிருந்து படகோட்டுதலைக் கையெடுத்ததையும், எவ்விதம் மாறுபட்ட கருத்துள்ள இயக்கங்கள் அக்காலகட்டத்தில் புரிந்துணர்வுடன் இயங்கின என்பது பற்றியும் அந்நாவலில் பதிவு செய்திருக்கின்றார்.
'வெகுண்ட உள்ளங்கள்' நாவலைப்பற்றி விமர்சனமொன்று எழுதியிருக்கின்றேன். அதனைக்கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்: http://www.geotamil.com/pathivukalnew/index.php…
'வெகுண்ட உள்ளங்கள்' 'தாயகம் (கனடா)' சஞ்சிகையில் தொடராக வெளியான நாவல். தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்த 'வேலிகள்' நூலிலும் இடம்பெற்றுள்ளது. 'வேலிகள்' தொகுப்பினை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/23/2290/2290.pdf
இவரைப்போன்ற பல்வேறு அமைப்புகளின் போராளிகளும் தமது அனுபவங்களைப் பதிவு செய்து ஆவணப்படுத்தல் அவசியமானதென நினைக்கின்றேன்.