ஆய்வு: கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கடவுள் என் சோரநாயகன்' கவிதை! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) அவர்களின் 'கடவுள் என் சோரநாயகன்' என்னும் கவிதையினை நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கவிதை இலங்கை சாகித்திய மண்டலக் கவியரங்கில் அ.ந.க ஓதிய கவிதை. அதனைப்பற்றி எழுத்தாளர் அ.ந.க பற்றி எழுதி தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய 'பாவோதல்' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய 'கடவுள் என் சோர நாயகன்' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கண்பதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். "
இந்தக் கவிதையினைச் சில வருடங்களின் முன் முனைவர் சேரனிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவரது தந்தையாரிடமிருந்த பழைய கோப்புகளிலிருந்து பெற்றதாகக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.
இந்தக் கவிதையில் அ.ந. க கடவுளைச் சோரநாயகனாக்கி உருவகித்திருப்பார். மிகவும் சிறப்பான கவித்துவக் கற்பனை. இதுவரையில் வேறு யாராவது கடவுளைச் சோர நாயகனாக்கியிருக்கிறார்களா என்பது ஆய்வுக்குரிய விடயம். கவிதை நாஸ்திகராக அறியப்பட்ட ஒருவரைப்பற்றிப் பேசுகிறது. நாஸ்திகராக அறியப்பட்டவர் உண்மையில் நாஸ்திகரா என்றால் அதுதான் இல்லை. அவரை அவ்விதம் அறிந்தவர்கள் அறியாமல் அவரது மனம் கடவுளை நாடுகின்றது. அவரது பகுத்தறிவாளர்களான் நண்பர்கள் அறியா வண்ணம் அவரது உள்ளம் கடவுளை மோகிக்கின்றது. நண்பர்கள் அருகில் இல்லையென்றதும் நாஸ்திகரான அவரின் உள்ளம் பக்திப்பரவசத்தில் குதித்தாடத் தொடங்கிவிடுகின்றது.