டொமினிக் ஜீவாவின் கதைக்களம்! - முனைவர் கி. ராம்கணேஷ், உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 -
இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் டொமினிக் ஜீவா. கொள்கைகளை மட்டும் கூறுபவர்களுக்கு மத்தியில் தாம் கொண்ட கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்து காட்டிய மார்க்சியவாதி. தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையைத் தமது கதைகளில் காட்சிப்படுத்தியவர். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் சென்றோ, குளுகுளு அறையில் சுகத்தை அனுபவித்துக் கொண்டோ சிறுகதை எழுதுபவர் என இவரை யாரும் நினைத்துவிடக் கூடாது. தொழிலாளர்களைப் பற்றிய கதை எழுதியவர் என்று மட்டுமே பலரும் கருதிக் கொண்டிருந்த வேளையில், அவரும் ஒரு தொழிலாளிதான் எனத் தெரிந்த போது, ஏனோதானோவென்று நினைத்தவர்களும் அண்ணாந்து பார்த்து அகலக்கண்களை விரித்து ஆச்சரியப்பட்டனர்.
இந்தியத்தாயின் உடலிலிருந்து அறுந்து விழுந்த இதயமாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் இலங்கை மண்ணின் யாழ்ப்பாணத்தில் 27.06.1927 அன்று ஒரு தொழிலாளி வீட்டின் பிள்ளையாய் டொமினிக் ஜீவா பிறந்தார். எழுதுவதைப் பொழுது போக்காகவோ, தொழிலாகவோ இவர் செய்யவில்லை. தொழிலாளிகளுடன் இணைந்து தொழிலாளியாகவே வாழ்ந்து எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சிறுகதைகள் படைத்தவர்.
டொமினிக் ஜீவாவின் கதைகளில் மிகப்பெரிய தேசத்தை ஆண்ட இராஜாக்களையோ, செல்வச் சீமான்களோ, புகழ்பெற்றுத் திரிந்தவர்களோ கதையின் நாயகராக இருப்பர் எனக் கருதினால் அது தவறு. தொழிலாளர்களின் இரணங்களையும் மனங்களையும் அனுபவித்து, உள்வாங்கி, தன்னுடைய கதைகளின் நாயகர்களாகக் காட்சிப்படுத்தியவர். கற்பனைச் சிறகுகளைக் கொண்டு இலக்கியவானில் பறக்காமல், நிஜ வாழ்க்கையில் பம்பரமாய்ச் சுழலும் உண்மை மாந்தர்களின் உணர்ச்சிகளைக் கருக்களாக்கிக் கதைகளாகப் பிரசவித்தவர்.