இயக்குனர் சீனு ராமசாமியின் 'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' கவிதைத்தொகுப்பு குறித்து.. - லதா ராமகிருஷ்ணன் -
- கவிதைத்தொகுப்பு: 'புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை' - சீனு ராமசாமி | பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் -
ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.
திரைத்துறையின் வீச்சும், வருமானமும் அதிகரித்துக்கொண்டேபோகும் நிலையில் வாழ்க்கைத் தொழிலாக திரைப்படங்களில் பாடல்களெழுதும் தரமான கவிஞர்கள் உண்டு. எழுதப்படும் சாதாரணப் பாடல்கள் இசையின் மூலம் அசாதாரணத்தன்மை பெற, அதில் குளிர்காயும் கவிஞர்களும், திரைப்படப் பிரபலங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலமே தங்கள் கவிதைகளின் தரம் குறித்த பிரமையைப் பரவலாக்கிக்கொண்டிருக்கும் கவிஞர்களும் இங்கே உண்டு. தனித்துவமான கவித்துவம் வாய்க்கப் பெற்ற கவிஞர்கள் திரையுலகத்தினரால் கைவிடப்பட்ட அவலநிலைக்கு இங்கே கணிசமான எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும்.
தரமான சில திரைப்படங்களின் மூலம் திரையுலகில் தம்மை நிலைநிறுத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான புகார்ப்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (டிஸ்கவர் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு)யைப் படிக்கக் கிடைத்தபோது மேற்கண்ட எண்ணவோட்டங்கள் மனதில் எழுந்தன.
கவிதைத்தொகுப்பை ஒருவித முரண்பட்ட மனநிலையில் தான் வாசிக்கத் தொடங்கினேன். கவிஞரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் (இது இன்னும் கொஞ்சம் விரிவாக அமைந்திருக்கலாம்), கவிஞரின் சுருக்கமான என்னுரை, அருமையான திரைப்படப் பாடலாசிரியர் என்பதோடு காத்திரமான தமிழ்க் கவிஞராகவும் தன் கவிதைகளின் மூலம் தன்னை அடையாளங்காட்டிச் சென்ற நா.முத்துக்குமாருக்கு தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது, பிரபலங்களிடமிருந்து பல்வேறு முன்னுரை, அணிந்துரை களை வாங்காத பாங்கு ஆகியவை திரு. சீனு ராமசாமி கவிதைகளால் மட்டுமே தன்னைக் கவிஞராக அடையாளங்காட்டிக்கொள்ள விழைபவர் என்பதை உணர்த்தின. தனது திரைப்படப் பிராபல்யத்தினா லன்றி தனது கவிதைகளின் அடர்செறிவின் உதவியால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள அவர் தகுதி யானவர் என்பதை அவருடைய கவிதைகள் உண்ர்த்திநிற்கின்றன.