சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்குப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தலைவர் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் அடிகளாரின் சிறப்புரை இடம் பெற்றது. கலாநிதி பால. சிவகடாட்சம், கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ், கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ், சட்டத்தரணி திரு. சண், ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. க. சண்முகலிங்கம், பாஸ்டர் எஸ். ஜெயானந்தசோதி, முனைவர் கரு முத்தய்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கலாநிதி பார்வதி கந்தசாமி, கலாநிதி மைதிலி தயாநிதி, வைத்திய கலாநிதி மேரி கியூரி போல் ஆகியோர் மொழிபெயர்புச் சிறப்பிதழின் உள்ளடக்கம் பற்றி உரையாற்றினார்கள். நூலில் இடம் பெற்ற கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய மூன்று பகுதிகள் பற்றித் தனித்தனியாக இவர்களின் உரை இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள் மலரை வெளியிட்டு வைத்து வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
மொழிபெயர்ப்புச் சிறுகதைகளைப் போன்ற பல வெளிநாட்டுச் சிறுகதைகளைக் கனடிய எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன் போன்றவர்கள் நேரடியாகவே தமிழில் எழுதி வருகின்றார்கள் என்பதும், சமீபத்தில் இனிய நந்தவனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற வெளிநாட்டுச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் போர்த்துக்கல், கிறீக், சோமாலியா, கெனியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, நேபாளம், அமெரிக்கா, கனடா போன்ற நாட்டுச் சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு தமிழில் நேரடியாக எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அதன் அங்கத்தவர்களால் இதழ் ஆசிரியர் அகில் சாம்பசிவம் அவர்கள் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக திரு அகில் சாம்பசிவம் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. வருகை தந்தோருக்குச் சிற்றுண்டி வழங்கப்பெற்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.