[ ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு (வரதலிங்கம் இரத்தினதுரை) தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோரிடமுண்டு. கவிதை, திறனாய்வு என அவரது இலக்கியப் பங்களிப்பு இருந்துள்ளது. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வரதபாக்கியான் என்னும் பெயரில் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் இவருமொருவர். முக்கியமான எழுத்தாளர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். இந்நிலையில் அவரைப்பற்றி 2012இல் திவயின சிங்களப் பத்திரிகை புதுவை இரத்தினதுரை இலங்கை இராணுவத்தின் காவலிலுள்ளதாகச் செய்தி வெளியிட்டதாக விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது. இது தவிர இதுவரை அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் எவையுமில்லை - பதிவுகள்.காம் -]
அள்ளிடும் வாஞ்சை; அன்பை
ஆள்வதில் அரசு; நெஞ்சைத்
துள்ளவே வைக்கும் பாக்கள்
தூவிய நாக்கு; சின்னக்
கள்ளியில் கூட நேசம்;
கண்களில் கனவுத் தேசம்;
புள்ளி நீ எங்கே? எங்கள்
புதுவையே எழுபத்தைந்தா..!?
நிலமெலாம் திரிந்து பாட்டின்
நீளமாய் விரிந்தாய்; வீரர்
பலமெனப் படர்ந்து மண்ணின்
பாஷையாய் மலர்ந்தாய்; என்றும்
வலம்வரு காற்றில் குந்தி
வரிகளில் வாதை சொன்னாய்;
கலமெனப் பேனா ஏந்தி
களப்பணி வரித்து நின்றாய்!
விடுதலைப் பானை பொங்க...
வீறுகொள் அடுப்பை மூட்டும்
சுடுதணல் கவிகள் தந்தாய்!
சூழுமோர் பகையை உந்தன்
விடுகவி கொல்லும் என்றாய்!
விரிகதிர்ப் பொலிவை மண்ணில்
நடுமொளி வெல்லும் என்றாய்!
நாவிலே நாடு கொண்டாய்!
சாவுகள் தழுவும் மேனிச்
சந்தனப் பேழை பாடி;
நோவுகள் தாங்கும் மக்கள்
நொடிகளை நொந்து பாடி;
நாவுகள் நயக்கும் நஞ்சின்
நன்மையை நயந்து பாடி;
வேவுகள் துளைத்துத் தேடி
வேர்த்திடப் பொடியை வைத்தாய்!
மேதைகள் வியந்து போற்ற
மேடையில் கவிதை சொல்வாய்!
பேதையும் தலையை ஆட்டும்
பேச்சிலே சபையை வெல்வாய்!
வாதையின் போதும் எம்மை
வாவெனத் தழுவி நிற்பாய்!
'பாதையில் சென்றாய்' செய்தி...
பயணமா இன்னும்... இன்னும்...?
புலினியும் புல்லும் பூவும்
பூத்திடும் மலரும் யாவும்
கலியினி இல்லை என்றே
கமழ்ந்திடு வாசம் எல்லாம்
பொலியினி இங்கு என்றே
பொங்கி நீ கவிதை சொல்லி,
பலியினில் வீரர் பாயப்
பரணியுன் கவியென்றாயே!
போர்தனில் எழுத்தைத் தோய்த்து
போட்டதால் 'வெளிச்சம்', எங்கள்
ஊர்களின் உலைவு எல்லாம்
உண்மைசேர் படைப்பில் ஊர்ந்து
பார்தனில் பரவச் செய்தாய்!
பரவியே தமிழை உந்தன்
வேரென வரித்து நின்றே
'வேங்கையாம் கவிஞன்' என்றாய்!
பத்தியால் பாடும் போதும்
பரமனைச் சிரிக்க வைத்து
முத்தியைக் கேட்காய்; உந்தன்
முறுவலை காட்டி நின்றே
சத்திய வேள்வி வெல்லும்
சங்கதி கேட்டு நிற்பாய்!
நித்தமும் கவிதை பூக்கும்
நிலவென உலவி வந்தாய்!
கழுத்திலே நஞ்சு தொங்க;
கண்ணிலே கவிதை தங்க;
அழுத்திய போரை வெல்லும்
ஆசையே நெஞ்சில் பொங்க;
எழுத்தினை ஏந்தி நின்றே
எரிகவிச் சமர்கள் கண்ட
பழுத்ததோர் கவிஞன் உன்னைப்
பைந்தமிழ் என்று காணும்!?
மதுவையே சொல்லில் ஊற்றி;
மயங்கவே வைத்து; நல்ல
எதுகையும் மோனையோடு
எத்தனை கவிகள் தந்தாய்!
எது கையும் கொடுக்காக் காலம்
எழுந்துமே தின்றபோது
புதுவையே புறப்பட்டாய் நீ...
புகுந்ததாய்ச் செய்தி மிச்சம்!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.