அறிமுகம்
சிவ ஆரூரன் சிறைக்குள்ளிருந்து இலக்கியம் படைத்தவர். தனது சிறைக்காலத்தை வாசிப்பு எழுத்து என மாற்றி நம்பிக்கையை விதைத்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என பல்துறைகளிலும் ஈடுபட்டு வருபவர். சமூக இயங்கியலை வெளிப்படுத்தும் பல நாவல்களைத் தந்தவர். சிறந்த நாவலுக்கான விருதுகளை மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பெற்றவர். ஜீவநதி வெளியீடாக 2022 இல் வெளிவந்த ‘ஊமை மோகம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
சிவ ஆரூரனின் வெளிவந்த ஏனைய நாவல்களில் இருந்து உள்ளடக்கத்தில் வேறுபட்டது ஊமை மோகம். பலரும் எழுதத் தயங்குகின்ற ஆண்பெண் உறவுநிலையில் ஏற்படுகின்ற சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. தமிழ்ச்சூழலில் இவ்வகை எழுத்துக்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்நாவலின் உருவாக்கம் பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது
“ஆண்பெண் உறவின் அதிருப்தி குறித்தும் புரிந்துணர்வு இன்மை குறித்தும் பலர் பேசியதை நான் செவிமடுத்த பிறகு அவற்றை என் மனவானில் உலவவிட்டவேளை என் மனம் உளைந்தது. என் நூலறிவின் துணை கொண்டு என் மனஉளைவிற்கு ஒரு கலைப்பெறுமதியைக் கொடுக்க முனைந்துள்ளேன். ஒழுக்க நெறியுடன் வாழநினைக்கும் யாழ் மண்ணின் கீழ்மத்தியதரக் குடும்பம் ஒன்றின் வாழ்வுக் கோலத்தையும் அதில் இழையோடிக் கிடக்கும் அபாக்கியமான ஊமை மோகத்தையும் இந்நாவல் பேசுகின்றது.” (தந்துரை, சிவ. ஆரூரன்) என்று குறிப்பிடுகின்றார்.
நாவலின் வளர்ச்சியும் வளமும்
திருமணமான சிவசங்கர் அனுசியாவின் குடும்ப வாழ்வில் ஏற்படும் தாம்பத்திய உறவுநிலை சார்ந்த பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய மனப்போராட்டங்களை இந்நாவலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சிவசங்கர் கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் எழுதுவினைஞராகத் தொழில் புரிகின்றான். நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பேர் பெற்றவன். அனுசியாவும் குடும்பத்தை மிகச் சிறப்பாக நடாத்தக்கூடியவள். சிவசங்கர், அனுசியாவின் அன்பிலும் அழகிலும் பூரித்துப் போகிறான். உறவினர் பொறாமைப்படும்படி அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை பெற்றததன் பின்னர் அனுசியாவுக்குத் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைந்து விடுகிறது. இது குறித்து சிவசங்கர் பலமுறை யோசிக்கிறான். நண்பர்களுடனான பொதுவான உரையாடலில் சில பல காரணங்களைக் கண்டு கொள்கிறான். அவளுக்கு இருக்கும் வீட்டு வேலைச்சுமையைக் குறைக்கிறான். உணவு மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தும் சின்னச் சின்ன விடயங்களில் கவனமெடுக்கிறான். இறுதியில் தானே தனியாக வைத்தியரை அணுகி இவை தொடர்பான ஆலோசனைகளைப் பெறுகிறான். இறுதியில் குடும்பத்தின் ஒழுக்கத்திற்குக் கேடு ஏற்படாவண்ணம் எல்லாவற்றையும் இயல்பாகக் கருதிக்கொண்டு வாழ்கின்றான். இதுவே இந்நாவலில் கதைச்சுருக்கம்.
இந்நாவல் வடமராட்சியின் அல்வாய், நவிண்டில் பிரதேசங்களைக் கதைக்களங்களாகக் கொண்டதாகும். யாழ்.குடாநாட்டைப் பொறுத்தவரையில் 1990கள் போர்ச்சூழலும் பொருளாதாரத் தடைகளும் நிரம்பிய காலம். கதை தொடங்கி சில வருடங்கள் நகர்கின்றது. இக்காலத்தில் இருந்த எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதாரத் தடை, போக்குவரத்து இடர்ப்பாடுகள், நிவாரணம் வழங்குதல் முதலானவை பதிவாகியுள்ளன. நாவலின் இறுதிப்பகுதி மட்டும் சிவசங்கர் அனுசியா தம்பதிகளின் மகன் வளர்ந்து திருமண வயது எய்தும் காலத்தில் நடைபெறும் சம்பவத்துடன் நிறைவு பெறுகிறது.
சிவசங்கர் அனுசியா தம்பதிகளைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு குடும்ப உறவில் ஏற்படும் மனப்போராட்டங்கள், விரிசல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளை சமூகம் நோக்கும் விதம் ஆகியன மூன்று குடும்பங்களை மையமாகக் கொண்டு கூறப்படுகிறது. ஒரு புறத்தில் பிரதான பாத்திரங்களாகிய சிவசங்கர் அனுசியா தம்பதிகளின் கதை சொல்லப்படுவதே நாவலின் பிரதான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. மறுபுறத்தில் நாவலை வளர்த்துச் செல்வதற்குத் துணையாக யோகநாதன் தையல்நாயகி, முத்துவேலு ஆனந்தராணி தம்பதிகளின் கதை சொல்லப்படுகிறது.
- எழுத்தாளர் சிவ ஆரூரன் -
இந்நாவலில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் திருப்தி - திருப்தியீனங்களை மூன்றாவது மனிதரிடம் பேசிப் பெரிதாக்கி குடும்ப உறவுநிலையில் சிக்கல்களை ஏற்படுத்தாமல் அவர்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு ஊடாக சில பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்பதும் சொல்லப்படுகிறது. இவற்றினூடாக சிவசங்கர் ஒழுக்கமும் நேர்மையும் உள்ள பாத்திரமாக ஆசிரியரால் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
“தனது மனைவியின் வேலைப்பளுவைக் குறைப்பதற்கு சிவசங்கர் சகல முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறான். பூமரங்களுக்கு நீர் வார்க்கும் பணியைத் தானே பொறுப்பேற்கிறான். காலையில் எழுந்து முற்றங்கூட்டிக் கொடுக்கிறான். விடுமுறை நாட்களில் ஆடைகளையும் தோய்த்துக் காயப்போட்டு எடுத்து வைக்கிறான். பெரும்பாலும் சமையல் வேலையே அவளுக்கானது. அவன் சமையலிலும் இடைசுகம் அவளுக்கு உதவிபுரிகிறான்.” (ப.65)
இவ்வாறு அனுசுயாவின் வேலைப்பளுவைக் குறைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறான். அனுசியாவின் பாத்திரத்தை குடும்பப் பாங்கானதாக ஆசிரியர் வடிவமைத்துள்ளார். அழகும் அன்பும் குடும்பத்தின் மீது பற்றும் கொண்ட பாத்திரமாக அனுசியாவைக் காணலாம். நாவலின் கதையோட்டத்தில் சிவசங்கர், அனுசியாவுக்கு லீவு நாள்களில் ஆடைகள் தோய்க்க உதவுகிறான். இதனை ஒருமுறை பாக்கியம் கண்டுவிடுகிறார். அனுசியாவிடம் வந்து “ஏய் என்னடி செய்யிறாய். வீட்டு ஆம்பிளையிட்ட உடுப்புத் தோய்க்கக் குடுத்திருக்கிறாய்” என்று சினப்படுகிறார்.
இவ்வாறெல்லாம் இருந்தாலும் பல சந்தர்ப்பங்களிலும் அனுசியா தாம்பத்திய உறவுநிலையைத் தவிர்ப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது.
“இப்போது அவன் எழுந்து அறைக்குட் செல்கிறான். பிள்ளையை அணைத்தபடி அவள் உறக்கத்திலிருக்கிறாள். அவளைக் குழப்பாது அவன் மீண்டும் விறாந்தைக்கு வந்து அமர்கிறான். சிந்தனையை வேறு திசையில் செலுத்த முனைகிறான். தனது பால்ய கால நண்பன் யோகநாதனின் எண்ணம் வருகிறது. தனது நலனில் அக்கறை செலுத்தி வரும் நண்பனுக்கு தனது இடர்ப்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளாதிருப்பது அவனுள் குற்றவுணர்வை ஏற்படுத்துகின்றது. இது என்னுடைய தனிப்பட்ட விடயமல்ல. என் மனைவியும் இதில் சம்பந்தப்படுகிறாள். இதை நண்பனுக்குக் கூறுவது என் மனைவிக்குப் பெருமை தரக்கூடியதல்ல. அது மட்டுமல்ல நண்பன் எனக்கு மகிழ்வான வாழ்வு கிடைக்கவில்லையே என்று எண்ணி வேதனைப்படுவான். அது நிச்சயம் ஆகையால் இந்த விடயம் எப்போதும் என்னுடனேயே இருக்கவேண்டும். அதுவே எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. என் குற்றவுணர்வை என்னுள் ஜீரணஞ் செய்து கொள்வதே நல்லது.” (ப. 89-90)
“அவனுக்கு ஏமாற்றமாகவிருக்கிறது. மோகத்தீ அவனுள் கொழுந்துவிட்டு எரிகின்றது. அது தணிவதாக இல்லை. கொதிக்கும் சர்க்கரைப் பொங்கல் போல் சூடாற சிரமப்படுகின்றது. சமையலறைக்குட் சென்று அவளின் கையைப் பிடித்து இழுத்து வர வேண்டும் போலிருக்கிறது. ஒரு புருஷன் வாய்விட்டுப் கேட்ட பின்னரும் புரியாதவள்போல் நடந்து கொள்கிறாளே…இவள் என்ன பெண்.. அவன் கோபமடைகிறான். அவன் அறைக்குட் சென்று படுக்கையில் சாய்கிறான்.” (ப.54)
இச் சம்பவங்களைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொள்கின்றான். எனினும் முறையான வைத்திய ஆலோசனை பெறும் எண்ணமும் அவனுக்குத் தோன்றுகிறது. இவ்வாறான நிலையிலேயே சிவசங்கர் ஒருமுறை கோபப்பட்டு காலை உணவை எடுக்காமல் தேநீர்கூடக் குடிக்காமல் போய்விடுகிறான். அனுசியாவின் வேதனையை ஆசிரியர் காட்டும்போது “தனது சமையலை கணவன் நிராகரித்துவிட்ட முதல் நாள் இன்று.” என்று மிக அர்த்தபூர்வமான ஒரு தொடரை எடுத்தாள்வார்.
“அவள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு படலையடிக்கு விரைந்து வருகிறாள். அவனின் முதுகுப்புறம் தெரிகிறது. முடக்கில் மறைகிறான். இப்போது அவளின் உதடுகள் துடிக்கின்றன. முகஞ்சுருங்கி அழத் தொடங்குகிறாள். சமையலறைக்குத் திரும்பி வருகிறாள். அடுப்பில் அவிந்து கிடக்கும் பிட்டை இறக்கித் தட்டுப்பெட்டியில் கொட்டுகிறாள். கறிகளை அடுப்பேற்றும் மனநிலை அவளிடம் இல்லை. எரியும் அடுப்பை நூர்த்துவிட்டு வந்து கூடத்தில் சக்கப்பணிய அமர்கிறாள். பிள்ளை மடியில் கிடக்கிறது, தனது சமையலை கணவன் நிராகரித்துவிட்ட முதல் நாள் இன்று. வேதனை அடைகிறாள். துக்கம் தாழாது அழுகிறாள். பத்து நிமிடம் வரையில் தொடர்ந்து அழுகிறாள். தன் தாயார் எந்நேரமும் வீட்டினுள் வந்து விடக்கூடும். அழுவதைக் கண்டுவிட்டால் வேறு ஏதாவது நினைப்பார் என்றெண்ணியவள் கிணற்றடிக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டு வருகிறாள்.” (ப.56)
இவ்வாறான பண்புள்ள அனுசியா தனது கணவனுடன் விடயத்தை வெளிப்படையாகக் கதைக்கிறாள். தனது செயலுக்கு மனம் வருந்துகிறாள். தனக்கும் அந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்பது அவளுக்குப் புரியவில்லை.
“என்னில உங்களுக்கு கோபம் வந்தால் அதை வெளிப்படையாகக் காட்டுங்கோ. கோபத்துக்கான காரணத்தைச் சொல்லி ஏசுங்கோ. அப்பிடியெண்டால்தான் என்ர பிழை எனக்கு விளங்கும். என்னால திருத்திக் கொள்ளவும் ஏலும். நீங்கள் ஏதோவொண்டை மனசில வைச்சு இடையிடையே சாதிக்கிறீங்கள் அதுதான் கஷ்ரமாயிருக்கு” (ப.88)
என்பதெல்லாம் இருக்கும் இடைவெளியைப் பெரிதாக்காமல் பேசித் தீர்க்கும் வழியாகக் காட்டுவார். பாலியற் சிக்கல்கள் பற்றி தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாகப் பேசுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பாலியல் திருப்தியீனங்களால் பல பிரச்சினைகள் குடும்பங்களில் ஏற்படுகின்றன. ஆண்கள் தமது மனைவியை விட்டு வேறு மார்க்கங்களைத் தேடுதல், அதனால் சமூகத்தில் நடத்தைப் பிறழ்வானவர்களாக நோக்கப்படுதல், குடும்பங்கள் பிரிதல், பிள்ளைகள் தனித்துப்போதல் முதலான பல பிரச்சினைகள் இவற்றால் ஏற்படுகின்றன. எனவே எதையும் உரையாடுவதன் ஊடாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதை சிவசங்கரின் நண்பர்களாக யோகநாதன், தேவகுரு பாத்திரங்கள் ஊடாக ஆசிரியர் முன்வைத்துள்ளார்.
சமூகத்தில் குடும்ப உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டபோதெல்லாம் வீட்டுக்கு வெளியே வேறு மார்க்கத்தைத் தேடிச் செல்பவர்களின் கதைகளையும் ஆசிரியர் காட்டுவார். முத்துவேலு ஆனந்தராணி தம்பதிகளில் முத்துவேலுவின் ஒழுக்கமற்ற செயற்பாடு சமூகத்திற்குத் தெரிந்த நிலையில் சமூகம் அவரை ஏளனமாக நோக்குகின்றது.
“வாழ்க்கையை நியமமா வாழுறவன் அப்பிடிச் செய்ய மாட்டான். சேறும் தண்ணியும் கிடக்கு எண்டதால சேத்தில மிதிக்க வேண்டிய தேவையில்லை…. தானும் அவமானப்பட்டு, மனிசிக்கும் அவமானத்தைத் தேடிக் குடுத்திட்டார். இனி அதோட நிக்கப்போகுதே, பிள்ளையளுக்கும் அவமானம்தான். ஏன் பரம்பரைக்கும் தொடரலாம்.” (ப.102)
என்று முத்துவேலரின் செய்கை குறிப்பிடப்படுகிறது. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் ஒழுக்கம் தவறினால் சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிரும் என்பதை ஆசிரியர் சமூகத்திற்குரிய செய்தியாக நாவலில் வைத்துள்ளார்.
சிவசங்கருடன் பணியாற்றுபவர்களில் ஒத்த வயதுடைய பரமகுரு நெருங்கிய நண்பராக இருக்கிறார். யோகநாதனுடன் பல விடயங்களையும் பேசுவதுபோல பரமகுருவிடமும் சிவசங்கர் பேசுகிறான். திருமணத்திற்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் சிலவற்றை உரையாடுகிறான். குழந்தை பிறந்தபின் மீளவும் பெண் உறவுக்குத் தயாராகும் நிலை பற்றி உரையாடும் சூழல் காட்டப்படுகிறது.
“சங்கர் ஒண்டு சொல்லுறன் என்ன பிரச்சினை எண்டாலும் மனிசியோட மனம் விட்டுப் பேச வேணும். பேசினால்தான் தீர்வு வரும். பேசாமல் இருந்தால் வெறுப்புத்தான் வரும்” (ப.45)
“இப்பவும் நாங்கள் சில விடயங்களை குறிப்பாக ஆண்பெண் குறித்த விடயங்களை பேசத் தயங்குறதால நிறையப் பிரச்சினையள் வருகுது. நீ என்ர நண்பன் எண்டதால உன்னோட பேசுறன். மற்றாக்களோட பேச என்னால முடியேல்லை. ஆனா, நீ என்னோட பேசவே வெக்கப்படுறாய். ஆண் பெண் உறவு பற்றி எவ்வளவோ புத்தகங்கள் எவ்வித வெக்கமுமின்றி எங்களோட பேசும். நாங்களும் புத்தகத்திலயிருந்து அறிய வெக்கப்படமாட்டம்.” (ப.49)
தன்னுடைய பிரச்சினையை மனைவியின் பிரச்சினையை நண்பனுடன் பேசுவது உசிதமல்ல என எண்ணுகிறான். இதன்பின்னரே வைத்தியரைச் சந்தித்து தகுந்த ஆலோசனை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறான். வைத்தியரைச் சந்தித்து நடந்த விடயங்களை வரிசைக் கிரமமாகக் கூறுகிறான்.
“எனக்குத் தொண்ணூறில கலியாணம் நடந்தது. தொடக்க மாதங்களில நல்ல சந்தோசமா இருந்தம். ஒரு குழந்தை பிறந்தது. பிறகு மனைவி என்னை நாடுறதை படிப்படியாக் குறைக்கத் தொடங்கியிட்டா. நான் அவவை நாடும்போது மட்டும் ஒத்துழைச்சா. பிறகு ஒரு வருசத்தால நான் அவவை நாடுறபோது கூட அதை அலட்சியப்படுத்திறது போல தெரிஞ்சுது. நான் கொஞ்சம் கோபப்பட்டன். பிறகு அதைச் புரிஞ்சு கொண்டு அவவின்ர வேலைப் பளுவைக் குறைக்க முயற்சி செய்தன். குறைச்சும் விட்டன். அவவில பெரிசா மாற்றம் வந்ததாத் தெரியேல்லை.” (ப.82)
என்று தங்களது பிரச்சினையை வெளிப்படையாக் கூறி வைத்தியரின் ஆலோசனை பெறுகிறான்.
“ஆண்களுக்கு வாற ஆண்மைக் குறைபாடு ( male impotence ) போலதான் இது பெண்களுக்கும் வாறது. பெண்மைக் குறைபாடு (Frigidity) எண்டு சொல்லலாம். இது ஒரு நோயல்ல. ஒரு குறைபாடு. இது மனரீதியான பாதிப்பினால் வரும். அல்லது ஓமோன் சுரப்பிகளின் குறைபாட்டினால வரும். உங்கட வைஃப்பில மனோரீதியான சிக்கல் இல்லை எண்டு நீங்கள் சொன்னதிலயிருந்து விளங்குது. நரம்பு மண்டலப் பாதிப்பும் இல்லைப்போல தெரியுது. அதனால இது ஓமோன் குறைபாடுதான். அதற்கான சிகிச்சை (Therapy) இங்க இல்லை. சும்மா விற்றமின் குளிசையள் குடுக்கலாம். ஆனால் பயன் கிடைக்கும் எண்டு நான் நம்பேல்லை…. இப்ப பார்வைக் குறைபாடு வந்தால் என்ன செய்யிறம்? அதை ஏற்றுக்கொண்டு வாழுறம். அதுபோல இந்தக் குறைபாட்டையும் ஏற்றுக்கொண்டு வாழத்தான் வேணும்.” (ப.83)
டாக்டர் நடேசன் எழுதிய ‘உன்னையே மயல் கொண்டு’ என்ற நாவலிலும் இதுபோன்ற ஒரு பிரச்சினை சொல்லப்படுகிறது. அது முற்று முழுதாக உளவியல் சார்ந்து பயணிக்கும் நாவலாக அமைந்துள்ளது. இங்கு இறுதியாக வைத்தியர் கூறுகிறார்.
“நீங்கள் நெறியோட வாழுவீங்கள் எண்டு நான் நம்புறன். உங்கள் இரண்டு பேருக்குமிடையில பிரச்சனை வந்தவுடன் டொக்ரரைப் பாக்க முடிவு செய்திருக்கிறீங்கள். குறையைத் திருத்திக் கொள்ளவே நீங்கள் விரும்புறீங்கள். அதனால போற போக்கில போற ஆள் இல்லை நீங்கள். உங்கட நியமத்திலதான் வாழுவீங்கள்” (ப.85)
இதற்குப் பின்னர் திருஞானம் அண்ணருடன் கொண்ட தொடர்பு மனத்தை ஒருமுகப்படுத்தும் யோகாசனம் செய்தலில் ஈடுபாடு வருகிறது. அத்துடன் புத்தகங்கள் வாசித்தல் என்று தனது கவனத்தைத் திசை திருப்புகிறான். வைத்தியர் கூறியதுபோல் எதையும் ஏற்றுக்கொண்டு வாழப் பழகுகிறான். இதனால் சமூகத்தின் பார்வையில் இவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். சமூக நிகழ்வுகளில் முதலிடம் கொடுக்கிறார்கள். ஒரு வகையில் குடும்ப வாழ்வை முறையாக நேர்த்தியாக கிடைத்ததைக் கொண்டு திருப்திப்படும் வாழ்க்கையை வாழ்வதற்கு இந்நாவலில் ஆசிரியர் வழிகாட்டுகிறார்.
இந்த நாவலில் காலம் பதிவு பெறுவதை கதையோட்டத்தின் ஊடாக அறியலாம். கதை நிகழும் காலம் 1990 இல் இருந்து சில வருடங்கள். அக்காலத்தில் மின்சாரம் இல்லை. ஜெனறேற்றர் கொண்டு வாடகைக்கு ரீவி டெக் பிடித்து விடிய விடிய படம் பார்;க்கும் காலம் இருந்தது. திருமண மற்றும் விசேஷ வீட்டுக் கொண்டாட்டங்களில் பலகாரம் சுடுதல் முதலானவை இடம்பெறுவதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவம் கதையில் சொல்லப்படுகிறது. எரிபொருள் இன்மையால் போக்குவரத்துப் பிரச்சினைகளும் இருந்தன. சிவசங்கர் நவிண்டிலில் இருந்து கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு சைக்கிளில் சென்று வருவது சொல்லப்படுகிறது.
நிவாரணம் வழங்கும் திட்டங்களில் அ அட்டை, இ அட்டை, உ அட்டை என்ற குடும்பப் பதிவு அட்டைகள் நடைமுறையில் இருந்துள்ளமை சொல்லப்படுகிறது. அ - அட்டை என்பது சாதாரணருக்கானது. இ - அட்டை என்பது உள்ளுரில் இடம்பெயர்ந்தோருக்கானது. உ - அட்டை என்பது உத்தியோகத்தருக்கானது. இவ்வாறான பதிவுகளை கதைநகர்வில் இணைத்துள்ளமை நாவலை வாசிப்போருக்கு தாங்கள் அக்காலங்களில் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்துகின்றது.
நாவலின் தொடக்கத்தில் கதைக் களத்திற்கு ஏற்ற வருணனை வருகிறது. நிலமும் கடலும் காட்டும் அழகில் சிவசங்கர் லயித்துப் போகிறான். அதனை பின்வருமாறு வருணிக்கிறார்.
“நிலம் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. வசந்தகாலப் புள்ளினங்களின் கீச்சொலிகள் கேட்கின்றன. மதிலோரம் நித்தியகல்யாணியும் செவ்வரத்தையும் பல நிறக் குறோட்டன்களும் வரிசையாகக் கிடக்கின்றன. கறுத்தப் பூக்கொடிகள் மதில்மேல் படர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. வெளிவிறாந்தையையும் படலையையும் இணைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் மல்லிகைக் கொடிகள் படர்ந்து கிடக்கின்றன.” (ப.1)
மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்ட இந்நாவலின் தொடக்கத்தில் பருத்தித்துறை முனையில் அமைந்திருக்கும் வெளிச்சவீட்டில் ஏறி கடலையும் நிலத்தையும் பருந்துப் பார்வையில் நோக்குகின்ற முறைமை பதிவாகியுள்ளது. அங்கு கடலும் நிலமும் சிவ ஆரூரனின் பார்வையில் அழகாகப் பதிவாகியுள்ளன.
“இப்போது நீலக்கடல் அமைதியாக நீல நீர்த்தேக்கம்போல் தெரிகிறது. சோழகக் காற்றுக் காலம் என்பதனால் கடல் அலைகளற்று இறந்து கிடக்கின்றது. முருகைக் கற்பாறை வரிசை பிரதான வீதிக்குச் சமாந்தரமாகச் செல்கிறது. முன்னைநாளில் கடலரிப்பைத் தடுப்பதற்கு இட்ட அணையே இம்முருகைக் கற்பாறை வரிசை. இப்போது வற்றுக்கடல் என்பதனால் அம்முருகைக் கற்பாறை வரிசை ஓணான் முதுகுபோல நீர்ப்பரப்பிற்கு மேலாகத் துருத்திக் கொண்டு தெரிகிறது. செப்ரம்பரின் பின் சோழகம் தணிந்து வாடைக்காற்று வீசத் தொடங்கும்போது இக்கடல் குரைகடலாக மாறி கரை சாடும். பெருகி ஆர்ப்பரிக்கும். இக்காலத்தில் இம்முருகைக் கற்பாறை வரிசை பெரும்பாலும் நீரில் அமிழ்ந்துவிடும். ஓரிரு கற்களின் முனைகள் மாத்திரமே சுறா மீனின் துடுப்புபோல் வெளித்தெரியும்.” (ப.10)
“அவள் கம்பிவேலியைப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறாள். வடதிசையில் நீலக்கடல். தென்திசையில் பசுமை என அழகாக இருக்கின்றது. தெங்கு பனை மரங்களும் ஏனைய தாவரங்களும் புல்வெளிகள்போல் கீழே தெரிகின்றன. வீட்டின் சிவப்பு - வெள்ளைக் கூரைகள் இடையிடையே புலப்படுகின்றன. இத்தனை உயரத்திலிருந்து அவள் உலகை என்றும் பார்த்ததில்லை. அவளுக்குச் சிரிப்பு வருகிறது. மகிழ்வு பொங்குகிறது. குழந்தையாக மாறி ஆனந்திப்பவளைப் பார்த்து அவனின் மனம் பூரித்துப் போகிறது. தான் அவளுக்கு ஒரு புதிய உலகைக் காட்டிவிட்ட திருப்தி அவனுள் ஏற்படுகிறது. உச்சிமுதல் உள்ளங்கால்வரை பக்கவாட்டில் அவளைக் கண்களால் அளக்கிறான். அவளின் தேசி மஞ்சள் நிறத்திற்கு நீலப்புடைவை அம்சமாக இருக்கிறது. பெரிய கண்கள், கூரான மூக்கு, எடுப்பான உபயதனம், அளவிடையில் அமைந்த இடை, அருமை. இடையில் அள்ளிச் செருகியிருக்கும் சேலையால் அவளின் கெண்டைக் காலும் பாதங்களும் வெளிப்பாகத் தெரிகின்றன.” (ப.15)
இவ்வாறு அவள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க தன்னை மறந்த நிலையில் தன் மனைவியின் அழகை இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் சிவசங்கர்.
வடமராட்சிப் பிரதேசத்திற்குரிய தனித்துவமான மொழிவழக்கினை உரையாடலில் சில இடங்களில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இற்றைக்கு அருகிச் செல்கின்ற சொல்வழக்குகளாக அவை அமைந்திருக்கின்றன.
“நராங்கிப்போன பூவரச மரங்களின்கீழ்” (ப.13)
“நல்ல சாங்கமான பிள்ளை” (ப.13)
“உள்ளே கோபுரம் பொள்ளலாக இருக்கிறது.” (ப.14)
“அவனுக்கு இப்போது அனுசியாவைக் காணவேண்டும் என்ற தவனம் ஏற்படுகிறது.” (ப.30)
“பொஞ்சாதிக்கு சகாயம் செய்யிறது நல்ல விசயம்தான். ஆனா பிறத்தி ஆக்களுக்குத் தெரியாமல் பாத்துக் கொள்ளு.” (ப.65)
“அந்தக் காலத்தில கோடிப் பச்சைச் சீலை கட்டின பொம்பிளையள் எப்பிடிப் புருசன்மாரை முந்தானையில் முடிஞ்சு வைச்சிருந்தாளுகள் எண்டு இப்போதைய பெண்டுகளுக்குத் தெரியாது.” (ப.100)
இங்கு நராங்கிப்போன, சாங்கமான, பொள்ளலாக, தவனம், சகாயம், கோடிப் பச்சைச் சீலை முதலான சொற்கள் இடம்பெற்றுள்ளன.
முடிவுரை
தம்பதியினரிடையே ஏற்படக்கூடிய தாம்பத்திய உறவுநிலைச் சிக்கல்களை புரிந்துணர்வின் ஊடாக தீர்க்க முயலவேண்டும் என்பதையும் ஒழுக்க நெறி தவறிச் செல்வதால் குடும்பத்திற்கும் சந்ததிக்கும் அது தீராத வடுவைத் தேடித்தரும் என்பதையும் எளிமையான மொழிநடையில் விரசமில்லாமல் ஆசிரியர் படைத்துள்ளார். இந்நாவலில் வெளிப்படும் பாத்திரங்களின் உணர்வுநிலைகள் படிப்போருக்கு சிந்தனைத் தூண்டலையும் ஏற்படுத்தவல்லதாக அமையப் பெற்றிருக்கிறது.
* ஜீவநதி ( இதழ் 214, சிவ.ஆரூரன் சிறப்பிதழ்,2023) இதழில் வெளியான இக்கட்டுரையைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தவர் கட்டுரையாசிரியர் கலாநிதி சு.குணேஸ்வரன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.