அண்மையில் Igla-s என்ற ஏவுகணையை வழங்கவும், அதனை இந்தியாவிலேயே தயாரிக்கும் உரிமத்தை வழங்கவும், இந்தியாஇ ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த செய்தியானது இந்தியா நகர்த்தும் வெளிநாட்டு அணுகுமுறையின் இன்றைய நிலைமை குறித்து எடுத்து இயம்புவதாகவுள்ளது (அதாவது ரஷ்யாவை ஒதுக்கி வைத்து, உலக வர்த்தகங்களில் இருந்து அதனை புறந்தள்ளி மேற்கின் பொருளியல் தடை அல்லது பொருளியல் சாசனம் அல்லது ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக விடுக்கப்பட்ட சர்வதேச நீதிமன்ற கைது ஆணைகள் யாவற்றையும், இச்செய்தி புறந்தள்ளுவதாய் உள்ளது.) போதாதற்கு இவ் ஒப்பந்தம் குறித்து இவ்விரு நாடுகளுக்கிடையேயும் பேச்சு வார்த்தை ஒன்று இது தொடர்பில் ஆரம்பமாகிவிட்டது என்ற செய்தியும் ஒரு வருடத்திற்கு முன்னரேயே 2022இல் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், இந்தியாவானது 2022இல் இவ் ஏவுகணையை தனது அவசர ஆயுத கொள்வனவுகளில் ஒன்றாக வாங்கி தன் ஆயுத படைகளுக்கு விநியோகித்திருந்ததென்ற உண்மை ஒருபுறம் இருக்க, அதே வேளை குறிப்பிட்ட ஏவுகணையை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தையினையும் அது அன்றே முடுக்கியிருந்தது. இந்த செய்தியும் இவ்விரு நாடுகளுக்கிடையேயும் நிலவும், (மேற்கின் தடைகளைத்தாண்டிய) இரகசிய அந்தரங்க உறவு முறையை காட்டுவதாய் உள்ளது. ஆனால் இதை விட முக்கிய செய்தியானது இதே காலப்பகுதியில், பாகிஸ்தானானது அமெரிக்காவின் இரு பிரத்தியேக கம்பனிகளுடன் (Northrop - Gruman & Global Military) 364 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது என்ற செய்தியாகும்.
இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் பாகிஸ்தானானது உக்ரைனுக்கு 364 மில்லியன் டாலர் பெறுமதியான 150 மி.மீ ஆட்லரி குண்டுகளை வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சாரமாகும். இச்செய்தியானது சற்றே அவதானத்தை கோரக்கூடியதுதான். ஏனெனில், நேட்டோ நாடுகள் போக, உக்ரைனுக்கு உதவி செய்யும், ஏனைய நாடுகள் தொடர்பில், உலகம் இன்னும் கைக்கொள்ளும் நடைமுறை சற்று சிக்கல் நிறைந்ததே.
இதனை, ஒருபுறம் சீனா-ரஷ்யா போன்ற மாபெறும் வல்லரசுகள் அல்லது உலகில் இன்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லரசுகள் எவ்வாறு அணுகக்கூடும் என்ற கேள்வி ஒருபக்கம் உருவாகும் அதேவேளை, இந்நாடுகளைப் பாவித்தப்பின் மேற்கு அவற்றை எங்கே கொண்டு போய் நிறுத்தபோகின்றது-அந்நாடுகளின், அகப்பொருளாதார நிலைமைகள், மனித உரிமை சாசனங்கள் அனைத்தும் என்னவாகப்போகின்றன- பாரதி கூறியவாறு யாரோ அரசு ஆட்சி செய்ய, பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற நிலைமை உருவாகப்போகின்றதா? போன்ற கேள்விகள் இன்று முக்கியத்துவம் கொண்டு எழுவதாய் இருக்கின்றன. (முக்கியமாக இம்ரான்கான் போன்ற மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் கேட்பார் கேள்வியற்று சிறையில் அடைப்படும் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது).
இவை ஒருபுறம் இருக்க, இச்செய்தியானது வெளிவந்த கணங்களில்;, பாகிஸ்தானானது தனது கடன் கொடுப்பனவுகளுக்காக (இலங்கையை போன்று) சர்வதேச நாணய நிதியத்துடன் ( IMF) தனது இறுதி சுற்றுப்பேச்சு வார்த்தையை ஜுன் 30லேயே நடாத்தி முடித்து இருந்தது. இலங்கையை போன்று அதாவது கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில், இவ்பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்தரமாக, பாகிஸ்தானானது மேற்குறிப்பிட்ட தனது ஆயுத வியாபாரம் தொடர்பிலான பேச்சு வார்த்தையை இரகசியமாக உக்கிரமாய் முன்னெடுத்திருந்தது. அதாவது, ஒருபுறம் IMF கொடுப்பனவு – அது தொடர்பிலான பேச்சு வார்த்தைகள். மறுபுறம் உக்ரைனுக்கு இரகசியமாய் ஆயுதங்களை பட்டுவாடா செய்வது. அது தொடர்பிலான பேச்சு வார்த்தைகள்:
IMF சார்பில் டானால்ட்லூவும், பாகிஸ்தான் தூதுவரும் வாஷிங்டனில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக வாஷிங்டன் செய்திகள் கூறின. (வாஷிங்டனில் நடந்தேறிய இப்பேச்சு வார்த்தை எவரது அனுசரணையில் அல்லது எவரின் தூண்டுதலில் நடத்தப்பட்டன என்பது இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டது). மொத்தத்தில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் பாகிஸ்தானின் இவ்வாயுத வியாபாரம் தொடர்பிலான ஒப்பந்தம், IMF இன் பார்வையில், கடன் வழங்குகைக்கான ஒரு சாதகமான சமிஞ்ஞையாகவே கொள்ளப்படுகின்றது என்பதிலேயே, இச்செய்தியில் உள்ளோடும் முக்கியத்துவம் வெளிப்படுவதாய் உள்ளது.
அதாவது, IMF ஆனது எவ்வெவ் அடிப்படையில் தன் கடன் வழங்கும் உதவிகளை நாடுகளுக்கு வழங்கி வருகின்றது. அல்லது அது கைக்கொள்ளும் நடைமுறையானது ஒரு குறிப்பிட்ட நாட்டின் உள்-வெளி பொருளியல்- அரசியல் சீரமைப்புகளை அது எப்படியெப்படி மாற்றியமைக்க முனைகின்றது. – அல்லது அந்நாட்டின் வெளிநாட்டு கொள்கையை அது எவ்வாறு கட்டமைத்துக்கொள்கின்றது என்பதெல்லாம் இச்செய்தியில் உள்ளடங்கும் விடயங்களாகின்றன. அண்மையில் IMF உதவி வழங்களின் பின் பாகிஸ்தானின் ஆயத ஏற்றுமதி (2022 உடன் 2023 ஐ ஒப்பிடும் போது) 3000 வீதத்தால் எகிறி உள்ளது, என்ற உண்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (14.11.2023)
இது போலவே, அதாவது பாக்கிஸ்தானைப் போலவே, இலங்கையும் IMF இன் அரக்க பிடிக்குள் சிக்கிவிட்டது என்ற உண்மை இன்று வெளிப்படையாக கதைக்கப்படும் ஒன்றாகும். உதாரணமாக IMF இன் இரண்டாம் கொடுப்பனவானது குதிரைக்கு வைக்கோலை காட்டி அதனை இழுத்துச்செல்வது போன்ற வைக்கோல் தூண்டுகோலாகின்றது. அதாவது முக்கியமாக இலங்கையின் வெளியுறவு அல்லது இலங்கையின் பொருளாதார கொள்கையானது வாஷிங்டனுக்கு ஏற்றவாறு சீரமைக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வைக்கோலாக இந்த இரண்டாம் கொடுப்பனவானது இன்று தூக்கி பிடிக்கப்படுவதாய் உள்ளது.
உதாரணத்திற்கு மிக அண்மையில், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட இலங்கையைச் சேர்ந்த விசேட அதிரடி படையின் தளபதி ரணிஷ்ஹெவகே மூன்று இலங்கை போர் வீரர்களுடன் ரஷ்ய தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் என்று வெளியான செய்தியை உதாரணமாய்க் குறிப்பிடலாம் (06.12.2023). கிட்டதட்ட 70 இராணுவத்தினர் உக்ரைன் படைகளுடன் இணைவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார்கள் எனவும், கிட்டதட்ட 20க்கும் அதிகமானோர் ஏற்கனவே உக்ரைனில், போராடி வருகின்றார்கள் என்பதும் இன்று வெளியாகியுள்ள செய்திகளில் ஒன்றாக காணப்படுகின்றது. (உக்ரைன் படையோடு இணைந்து கொண்ட ஒவ்வொரு இராணுவத்தினருக்கும் மாதாந்தம் 10-12 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது). இது போலவே 30,000 இராணுவத்தினர் இன்று படைகளில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர் என்று வெளியாகும் செய்தியும் இதனுடன் சேர்ந்து வாசிக்கத்தக்கதுதான். கூடவே, மேற்படி மரணச்செய்தி வெளிவந்த அடுத்த தினங்களில் இலங்கையானது ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை ஒன்றை ஆரம்பித்துவிட்டது என்ற செய்தியும் இந்தப் பின்னணியில் வாசிக்கத்தக்கதுதான்.
விடயங்கள் இவ்வாறு இருக்கும் போது ஒரு சீன-இந்திய முரண்பாட்டில் தனது சொந்த அகவிருப்பின்றி தான் இழுப்பட்டு சிக்குண்டு அல்லலுரும் நிலைமைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளதாக எமது ஜனாதிபதி இன்று ஆற்றும் கூற்றுக்கள் எந்தளவில் உலகளவில் நம்பப்படும் என்பது கேள்வி குறியாகின்றது. காரணம் மேற்படி சூழலில் இந்திய–சீன இழுப்பறிக்குள் தான் விருப்பப்படாமலேயே தள்ளப்பட்டிருப்பது உண்மையா அல்லது ஓர் இந்திய– சீன முரண்பாட்டை இந்து சமுத்திரத்தின் அல்லது இலங்கையின் கரையோரத்தில் தானே முயன்று இழுத்துவிட்டுவிட்டு பின் அதில் நடக்கும் போட்டா போட்டிகளில் அல்லது இழுபறிகளில் குளிர்காய எத்தனிப்பது உண்மையா என்பதனை, இலங்கையின் ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் கவனமாக ஆய்ந்து கணித்தப்பின்னரே உலகம் இது தொடர்பில் ஒரு முடிவிற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை (உதாரணமாக, சீன உளவு கப்பல்களை இழுத்து வளைத்து போடும் திறமையும் காங்கேசன்துறை அல்லது பலாலி விமானநிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு அல்லது புலம்பெயர்தமிழர்களுக்கு வழங்க முன்வருவதாய் நகர்த்த முற்படுவதும் தற்செயலாய் நடக்கும் விடயங்களாக கூற முடியாது).
மொத்தத்தில் இவை அனைத்தையும் செய்தால்தான் IMF இன் இரண்டாம் தவணைக்கான பணம் கையில் கிட்டக்கூடும் என்கிறது. இருந்தும் IMF இன் உதவி பணங்களில் தமது தலைவிதியை ஒப்படைக்க முடிவு செய்துவிட்ட நாடுகளான உக்ரைன், பாகிஸ்தான் வரிசையில் இலங்கையும் இணைவது இன்று தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மறுபுறம் கடந்த மூன்று மாதகாலத்தில் மாத்திரம் இலங்கை விற்றுத்தீர்த்த திறைசேரி முறிகளின் மொத்ததொகை 145 கோடி மில்லியன் ரூபாயாக இருக்குமென ஒரு பதிவு மதிப்பிடுகின்றது. (22.11.2023) இரண்டொரு தினங்களின் முன்னர் மாத்திரம் ஏலம்விடப்பட்ட திறைசேரி முறிகளின் மொத்த பெறுமானம் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்படுகின்றது. (11.12.2023). (இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் பார்க்கவும்)
இவற்றைக் கணக்கில்லெடுத்தால் நீர்வடிகால்சபை சம்பாதித்த இலாப வரவு (வெறும் 5.6 கோடி ரூபாய்) அல்லது உல்லாச பயணிகளின் வருகையால் ஏற்பட்ட இலாப விகிதாசாரம்-அனைத்தும் வெறும் கொசுறுகளின் தொகையாகின்றது. (105 மில்லியன் டாலர்) இதே வேளை, IMF இன் இரண்டாம் கொடுப்பனவு மதிப்பீட்டுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கையானது ஒரு நிபந்தனையை தவிர ஏனைய அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த நிபந்தனைகள் யாவை என்பது குறித்தோ அல்லது நிறைவேற்றப்படாமல் மிச்சமிருக்கும் அந்த ஒரு நிபந்தனையென்பது என்னவென்பது தொடர்பில் இரகசியமே தலைவிரிப்பதாய் உள்ளது. மேலும், மதிப்பீட்டுக்குழு அறிக்கையின் பிரகாரம், இலங்கையானது, தனது திறைசேரி முறிகளை வாங்கிய தனியார் வெளிநாட்டு கடனாளிகளுடன், தனது கடன் தொடர்பில், ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தாக வேண்டுமென்று ஒரு போடு போட்டிருக்கின்றது.
இலங்கையின் திறைசேரி முறிகளை வாங்கிப்போட்டிருக்கும் அமெரிக்க - ஐரோப்பிய வியாபாரிகளின் கூட்டம், இலங்கைக்கான கடன்களில், கிட்டத்தட்ட 50சதவீதத்தை உள்ளடக்குகின்றது என்பது, இன்றும், பெரிதும் கூறப்படாத அல்லது அடக்கி வாசிக்கப்படும் ஒரு செய்தியாகவே இருக்கின்றது. போதாதற்குக் கடந்த மூன்று மாதமாய் கிட்டத்தட்ட நாளாந்தம் விற்கப்படும் இன்றைய திறைசேரி முறிகளின் பெறுமானங்களையும் கூட்டுவோமானால் நாம் விழுந்துள்ள கடன் சுழலின் அடியாழம் என்னவென்பது புரிந்துவிடும். இவற்றுடன் ஒப்பிடும் போது சீன கடனுதவி அல்லது இந்திய கடனுதவி என்பதெல்லாம் வெறும் கொசுறு வகை சார்ந்தது என்பதில் ஐயமில்லை.
அமெரிக்காவின் காசடிக்கும் இயந்திரமும் அமெரிக்க திறைசேரி முறிகளை விற்றுத்தள்ளும் தந்திரமும் கையில் இருக்கும் வரை IMF இன் நிதி வழங்கும் கொள்கையுடன் போட்டிப்போடுதல் சற்றே கடினமான செய்கையாகவே இருக்கும். உதாரணமாக ஆபிரிக்க நாடுகள் பத்தில் IMF இனது நிதி வழங்கும் கொள்கையானது தனது உச்சத்தை எட்டியுள்ளது, என கூறப்படுகின்றது. இதே நேரத்தில் சீனத்தின் கடனுதவி வழங்கும் திட்டமும் ஆபிரிக்காவின் பத்து நாடுகளில் உச்சத்தை தொட்டுள்ளது.
வேறு வார்த்தையில் கூறுவதானால் சீனத்திற்கும் IMFக்கும் நடக்கும் கடனுதவி வழங்கும் திட்டத்திற்குள் உலகம் இழுபறிபடுகின்றது. (சீனம், அமெரிக்காவின் இந்த காசடிக்கும் இயந்திரத்துக்கு சமதையாக எதைத்தான் கொணரக் கூடும் என்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. போதாததாக, தன் கடனுதவிகள் மூலம், நாடுகளை உறிஞ்செடுக்கும் தந்திரமும் முழு வேகத்தில் செயல்ப்பட இருக்கின்றது).
இது நவகாலனித்துவத்தின் தற்போதைய புதிய முகமா என்பது ஒரு கேள்வி. ஆனால் இது ஸெலன்ஸ்கியை, பிச்சைப்பாத்திரம் ஒன்றை ஏந்தி வாடிய முகத்துடன், உலகம் முழுவதையும் வலம்வர வைத்துவிட்டது என்பது ஒரு யதார்த்தமாகின்றது. காசடிக்கும் இயந்திரங்களை அல்லது டாலரின் ஆதிக்கத்தை கணக்கிலெடுத்து பார்க்கும்போது இம்முரண் செல்லும் திசையை நாம் ஓரளவில் கணிக்கக்கூடியதாகவே உள்ளது.
ஆனால் இவ்விழுபறிகளின்போது, பாக்கிஸ்தானானது, தனது ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதும் அல்லது இலங்கை போர் வீரர்கள் உக்ரைனில் மரணித்து வீழ்வதும் அல்லது இம்ரான்கான் போன்றவர்கள் சிறையில் அடைப்படுவதும், சட்டங்கள் அந்நாட்டில் பிரயோசனமற்று, பலமிழந்து, கைகட்டி பிணம் தின்ன முற்படுவதும் நடைமுறையாகின்றது. சுருக்கமாக கூறினால் IMFஇன் கடனுதவி என்பது ஒரு நாட்டின் பொருளியல் கொள்கையை மாத்திரமல்ல, கூடவே அதனது வெளியுறவு கொள்கையையும் மாற்றியமைக்கக்கூடியதுதான், என ஆய்வாளர்கள் தெரிவிக்கும் இன்றைய கருத்து கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது.
இதற்கிணங்க இலங்கையில் இன்று இனவாதம் ஊக்குவிக்கப்படுதலும், உச்சம் தருவதும், இன உரிமைகள் மறுக்கப்படுவதும், மனித உரிமைகள் தரை மட்டமாக்கப்படுவதும், வரிகள் புதிதாய் இடப்படுவதும் வட்டிகள் குறைபடுவதும், திறைசேரி முறிகள்; தொடர்ந்தும் கேட்பார் கேள்வியற்று விற்கப்படுவதும், காசடிப்படுவதும், இந்தியாவையும் சீனாவையும் பகைமைக்குள் மூட்டி விடுவதும் காலந்தோறும் நடப்பதாய் உள்ளன. IMF இன் இரண்டாம் கொடுப்பனவை எதிர்பார்த்து! முட்டையின் விலை 65 ருபாய் என்பதும், வெங்காயத்தின் விலை 520 ரூபாய் என்பதும், இவ் விலை உயர்வுகள் 18 வீத வட்டி உயர்வால் நிகழ்வது என்பதும், ஆயிரத்துக்கு மேற்பட்ட, சிறு தொழில் அதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக அறிவிப்பதும், கொசுறு செய்திகள் - இதன் பின்னால் IMF தொடமுடியாத தொலைவில் இருக்கின்றது- 13வது திருத்தத்தை அகற்றி, ஹிமாலயப் பிரகடனத்தைக் கொண்டு வந்த மகிழ்வோடு!!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.