வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திட்ட பாரத்தின் பண் பாடும் கவி. அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து - பாரதி என்று பட்டொளி வீசி நின்ற கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஓர் அதிர்வு உருவாகிறதல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிறதல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.
எதையெடுத்தாலும் பாரதிக்கு முன் - பாரதிக்குப் பின் என்று பார்ப்பதுதான் உகந்ததாய் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். சிந்தனை, செயற்பாடு, இலட்சியம் , கருத்துக்கள், கவிதை, எழுத்து நடை , என்னும் வகையில் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.பாரதிக்கு முன்னர் தமிழும் , இலக்கியமும், சமுதாயமும் , அமைந்த விதம் வேறாகவே இருந்தது. அதுதான் காலத்தின் நிலை. காலத்தின் தேவையினைக் கருதியே இலக்கியங்கள் எழுகின்றன. இதனால்த்தான் இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்று பார்க்கின்ற னர்.அந்தவகையில் பாரதிக்கு முன்னர் காணப்பட்ட இலக்கியப் போக்கிலிருந்து பாரதி மாறுபடுகிறாரா அல்லது வேறுபடுகிறாரா என்னும் வகையில் சிந்திப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா!
பாரதி பழமையை வெறுக்கவும் இல்லை. அதே வேளை ஒதுக்கவும் இல்லை. பழமை என்றால் என்ன என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுவது அவசியமாகும். பழமை என்றால் அது பழமைதான். எடுக்கும் விதத்திலும் , நோக்கும் விதத்திலுமே அது பழமையா அல்லது வேண்டப்படுவதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த வழியில்தான் பாரதி பழமையினைப் பார்க்கிறார். அதற்காக மூடத்தனங்களை ஏற்றிட அவர் விரும்பவில்லை. சமூகத்து ஒத்துவராத பழமையினையே அவர் சாடி நின்றார். ஒதுக்கியும் வைத்தார். இது தான் காலத்தின் கட்டாயம் என்று பாரதி கருதினார்.
வள்ளுவத்தை வள்ளுவரை , சிலம்பினை இளங்கோவை , கம்பரை இராமாயணத்தை , அவர் வியந்து நிற்கிறார். " யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்- இளங்கோவைப் போல் - வள்ளுவனைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை - உண்மை வெறும் புகழ்ச்சியில்லை " என்று தனக்கு முன்னர் இருந்த தமிழ் இல க்கிய ஆளுமைகளைப் பார்க்கிறார் பாரதி. இப்படிப் பாரதி பாரதி பார்ப்பது பழமையா ? புதுமையா ? பாரதி தன் னுடை ய காலத்தில் இந்த ஆளுமைகளின் தேவை சமூகத்துக்கு இன்றியமையாததது. அவர்களின் சிந்தனைகள் பல யாவருக்கும் பயனையும் அளிக்கும் என்று கருதியதால் அவர்களை வியந்து கவிபாடி நிற்கிறார். இங்கு பழமை என்பது பார்வையில்த்தான் என்பது புலனாகிறதல்லவா !
அதே வேளை தனக்கு முன்னர் இருந்த தமிழ் ஆளுமைகளை , சமய ஆளுமைகளை, தத்துவ ஆளுமைகளைக் கனமும் பண்னுகிறார். ஆனால் அவர்களின் கருத்துக்கள் அத்தனையையும் ஏற்றிடுபவராக இருப்பதில் மட்டும் அவர் மாறுபடுகிறார். தனக்கும் , தன் காலத்துக்கும் , எது உகந்ததாக இருக்குமென்று கருதினாரோ அவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தொடாமலே விட்டு விடுகிறார். இதனால் பாரதி பழ மையினைத் தொட்டு புதுமையிலும் கால் பதித்து ஒரு பாலமாகவே ஆகி நிற்கிறார் என்பதுதான் உண்மை யாகும். பழமைச் சிறப்புக்களைப் பாரதியார் பாடியது போல் வேறு எந்தத் தமிழ்ப் புலவரும் பாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழின் சிறப்பை , இந்தியாவின் சிறப்பை , பாரதி வியந்துமே பார்த்துப் பாடிப் பெருமைப்படுகிறார் என்பதைக் கருத்திருத்துவது முக்கியமாகும். காலங்கள் கடந்தாலும் சிறப்புகள் என்றுமே சிறப்புத்தான். அதனை நன்குணர்ந்தவராய் பாரதி இருந்தபடியால்த்தான் பழமைகளை வியந்து பாடுபவராகத் திகழ்ந்திருக்கிறார். அதேவேளை தன் காலத்துச் சிறப்பினை அவர் பார்க்கும் விதம் வேறாய் அமைகிறது. " நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் " என்று பாடி - தன் காலத் தில் தமிழ் நாட்டில் சிறப்புகள் என்பதையே காணமுடியவில்லையே என்று மனம் நொந்து நிற்பதையே காண முடிகிறது. " நெஞ்சு பொறுக்குதில்லையே " என்பதுதான் பாரதியாரின் சிந்தனையின் அடிநாதமாய் அமைகிறது என்பதுதான் உண்மையாகும். தன்காலத்துச் சமூகச் சிந்தனைகளை, நடை முறைகளைப் பொறுக்க முடியாமல் பாரதியாரின் புரட்சியும் வெடிக்கிறது. அதிலிருந்து புதுமையும் கிளர்ந்தெழுகிறது என்பதைக் கருத்திருத்துவது அவசியமாகும்.
பாரதியார் காலம் வேற்று நாட்டார் வேரூன்றி நின்ற காலம். அவர்களின் மொழியும் , சமயமும், கலாச்சாரமும் , காலூன்றிட முனைப்புற்ற காலமாகும். சொந்த மண்ணிலே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருந்த காலம். இந்தக் காலத்தில் பாரதியார் வாழும் சூழ்நிலை ஏற்பட்டதால் - அவரின் சிந்தனை அக்காலத்துக்கு எது ஏற்றதோ அதனையே புலப்படுத்தி நின்றது எனலாம். சுதந்திரத்தை மனமிருத்தி , துணிவதனைத் துணையாக்கி , வேற்று நாட்டார் ஆட்சியினை வேரோடு பிடுங்கி எறிய யாவரையும் ஆக்கிவிட வேண்டும் என்று பாரதியார் செயற்பட வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாகியது.அதனால் மறந்து போயிருந்த பழமையை , பண்பாட்டைக் கருவாக்கிப் பாடும் தேவை பாரதியாரின் கட்டாயம் ஆனது.அதனால் பழமையினை எடுத்தார். அந்தப் பழமையும் , பெருமையும் கொண்டவர்கள் - கோழைகளாய் , கையாலாகதவராய் , இருப்பது பொருந்துமா ? என்று உணர்ச்சி பீறிட எழுச்சி பாடினார்.அதே வளை புதுமையையும் புகுத்தினார். வீட்டுக்குள் பெண்களைப் பூட்டி வைப்பதை உடைத்தார். தன் காலத்துப் பெண்களை " நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை எதற்கும் அஞ்சாத ஞானச் செருக்குடையவராய் " கண்டிடப் பாடினார். கண்டிடவும் ஆசைப்பட்டார். பெண்மையினைப் பெரிதும் கொண்டாடினார். பெண்களுக்குப் பழமைச் சாயம் பூசுவதைத் தகர்த்து அவர்களைப் புதுமைப் பெண்களாகப் பார்த்திட புது நிறத்தையும் பூசினார்.
வேற்று நாட்டார் வருகையை அவர்களின் அடிமைப்படுத்தும் எண்ணத்தைப் பாரதியார் அடியோடு வெறுத்தார். ஆனால் அவர்களிடம் காணப்பட்ட சமத்துவக் கருத்துக்களை உள்வாங்கி நின்றார். அவர்களின் புதுமை நோக்குகளை மனத்திற் பதித்தும் கொண்டார்.இதுதான் பாரதியாரின் தூர நோக்கு என்று எடுத்துக் கொள்ளலாம். காலத்துக்கு ஏற்பக் கருத்துகள் பல மாற வேண்டியது மிகவும் அவசியமானது என்பதை மிகவும் திடமாகவே நம்பினார் பாரதியார் எனலாம்.அதனால் அவர் - தன் பேச்சிலும் , எழுத்திலும் தனக்கும் தன் காலத்துக்கும் எது பயனானதோ அவற்றையே துணிந்து வெளிப்படுத்தியும் நின்றார்.இதனால்த்தான் " அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே " என்று உரத்து நின்று குரலெழுப்ப முடிந்தது.
" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் " , " தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிடச் செய்வோம்" என்று தமிழைப் பெருமைப்படுத்தும் வகையில் துணிவுடன் செப்பி நிற் பவராய் பாரதியார் திகழுகின்றார்.தமிழை, தமிழ்ச் சமுதாயத்தை, தமிழர் பண்பாட்டை எல்லாம் பாரதியார் என்றுமே உயர்த்தியே பார்க்கிறார்.அதனால்த்தான் அவரால் இப்படியெல்லாம் பாடமுடிந்தது எனலாம்.
" வேதம் நிறைந்த தமிழ்நாடு " , " கல்வி சிறந்த தமிழ்நாடு கம்பன் பிறந்த தமிழ்நாடு " , " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு " , " நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு " என்று தமிழையும் தமிழ் நாட்டையும் - தன் காலத்துவர் மனத்தில் பதித்திடச் செய்ய வேண்டும் என்னும் தேவை பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தின் கட்டாயமாகி நிற்கிறது.இங்கே பழமை என்பது புதுமைக்கு இட்டுச் செல்லும் ஊக்க மருத்து என்றுதான் பாரதி கருதுகிறார் எனலாம்.
சுதந்திரத்தை ஊட்டிடவே பாரதியாரின் அத்தனை செயற்பாடுகளும் அமைந்தன. தொடங்கவும் பட்டன. ஆனால் வெறுமனவே நாட்டுச் சுதந்திரத்துடன் மட்டுமே நின்று விடாமல், வீட்டுச் சுதந்திரத்தை, மொழிச் சுதந்திரத்தை, சமயச் சுதந்திரத்தை, பண்பாட்டுச் சுதந்திரத்தை, தனிமனித சுதந்திரத்தை,அரசியற் சுதந்திரத்தை, ஆன்மீகச் சுதந்திரத்தை , எழுத்துச் சுதந்திரத்தை, கருத்துச் சுதந்திரத்தை , என்றெல்லாம் எடுத்துச் சொல்லு வது காலத்தின் கட்டாயம் ஆகியே நின்றது என்பதைக் கருத்துவது அவசியமாகும்.விடுதலை என்பதை வெறும் வார்த்தையாக எண்ணாமல் அதனை ஒரு வேள்வியாகவே பாரதியார் கருதினார். எங்கெல்லாம் அடிமைத்தனம் ஒட்டிக் கொண்டு போகமறுத்து நின்றதோ அங்கெல்லாம் பாரதியார் துணிவுடன் சாட்டையடி கொடுத்து நின் றார். இது காலத்தின் முக்கிய தேவை என்பதுதான் பாரதியாரின் சிந்தனையாக இருந்தது.
பாரதியாரின் காலத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் பாரதியாரை ஒரு கவிஞராக ஏற்றுக் கொள்ளவே இல்லை. பாரதியின் எழுத்தினை ஒரு பொருட்டாகவும் எடுக்கவே இல்லை. பாரதியின் காலத்தில் பாரதியின் கருத்துக் கள் எள்ளி நகையாடப்பட்டன.கஞ்சாக் கவிஞன் என்றே பழிக்கப்பட்டார். ஆனால் பாரதியாரே தன்பாதையில் தளர்வின்றி வீரநடை போட்டார்." தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ? " என்று உரத்துடன் கேள்வி கேட்டு வீறாப்புடன் நின்றவர்தான் பாரதியார். " நெஞ்சில் உரம் நேர்மைத்திறன் , வஞ்சனையில்லா மனம் " பாரதியாரிடம் நிறைந்தே இருந்த படியால் எதிர்தவர்கள் வீழ்ந்தார்களேயன்றி பரதி யார் வீழ்ந்து விடாதிருந்தார் என்பதுதான் யதார்த்தமாகும்.
பாரதியார் தெய்வத்தை நம்பினார். தேயத்தை நேசித்தார். உண்மையை விரும்பினார். பொய்மையை எதிர் த்திட்டார்.தீங்கினைக் கண்டால் சீறியே எதிர்த்திட்டார். நல்லது என்று மனதிற் பட்டதை அஞ்சாமல் வெளி ப்படுத்தியும் அரங்கேற்றினார்.சோம்பலைத் தூக்கி எறிந்திடச் சொன்னார். சுறு சுறுப்பினைச் சொந்தமாக்கிட விரும்பினார்.யாவரையும் இணைந்திடச் சொன்னார். வேற்றுமையை விரட்டு என்றும் சொன்னார். இவைய னைத்தையும் அவர் சொல்லும் விதந்தான் மிகவும் அருமை. பாப்பாக்களுக்கு என்று பாட்டெழுதி அதன் வாயிலாக சமூதாயத்தில் இருக்கும் அனைவருக்கும் வாழ்வியல் தத்துவங்களை வண்ணமுற எண்ணங்களில் பதியச் செய்து விடுகிறார்." ஓடி விளையாடு பாப்பா _ நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா - கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையையும் வையாதே பாப்பா - பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும் புறஞ்சொல்லலாகாது பாப்பா- சோம்பல் மிகக் கெடுதி பாப்பா - பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங் கொள்ளலாகது பாப்பா - மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா - தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு தீங்கும் வரமாட்டாது பாப்பா " என்று சொல்லும் பாரதியாரை எப்படித்தான் ஒதுக்கினார்களோ தெரியவில்லை. ஒதுக்கியவர்கள் அத்தனைபேருமே கால ஓட்டத்தில் காணாமலே போய்விட்டார்கள். ஆனால் ஒதுக்கப்பட்ட பார தியார் உச்சியில் வைத்து போற்றப்படுகிறார். இதுவும் காலத்தின் கருத்தாகும்.
பாரதிக்கு முன் பாரதிக்கு பின் என்று பார்க்கும் பொழுது - பாரதி என்பது ஒரு சகாப்தமாகவே ஆகிவிடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஈடிணை இல்லாக் கவிஞராய் பாரதியார் ஆகிவிட்டார் என்பதில் எள்ளளவும் எது வித ஐயமுமில்லை என்பதுதான் பாரதியார் பற்றி ஆய்வறிஞர்களின் கருத்தாய் அமைகிறது. சேற்றின் மத்தியில் செந்தாமரை மலர்ந்ததுபோல் , முட்களின் நடுவே மோகன ரோஜா உதித்தது போல் பாழும் வறுமைத் தடாகமதில் பாரதியார் என்னும் தமிழ்ச் சொத்து மாமலராய் மலர்ந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.