மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.
88 களில் முருகபூபதி கேட்தற்கிணங்க நான் எழுதிய முதல் ஆங்கில கட்டுரை இந்திய தேசியம் பற்றியது. தற்போதைய இந்தியாவை இணைப்பது மதமோ கலாச்சாரமோ அல்ல தேசிய முதலாளித்துமே என்ற கருத்தில் எழுதியிருந்தேன். அதன்பின் உதயத்திற்கக்காக நான் எழுதிய முதல்க் கட்டுரை “நடுகாட்டில் ஒரு பிரேத பரிசோதனை”. அந்தக் கட்டுரையை நண்பர் மாவை நித்தியானந்தனிடம் காட்டியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுதும்படி சொன்னார். அப்படியே திருத்தப்பட்ட கட்டுரை இரண்டாவது உதயத்தில்( 1987 வைகாசியில்) வந்தது . அதன்பின்பு எனது பல கட்டுரைகள் , சிறுகதைகள், நாவல்கள் அவரே சீர் பாத்திருப்பார். கடைசியாக வந்த தாத்தாவின் வீடு நாவலைத் தவிர, நான் எழுத்தாளராக இப்பொழுது அடைந்த இடத்திற்கு நண்பர் முருகபூபதியே காரணம் .
எழுத்துக்கப்பால் பல விடயங்களில் ஒன்று சேர்ந்தியங்கியுள்ளோம். 80களில் தொடங்கிய அகதிகள் சங்கத்தில் இருவரும் பல வருடங்கள் இருந்தோம். அதன் பின்பாக அவரால் உருவாக்கிய இலங்கை மாணவர் நிதியம் அவரது தனிபட்ட பிரச்சனையின்போது என்னை பார்த்துக் கொள்ளும் படி ஓதுங்கியிருந்தார். அதை மீண்டும் கால்நூற்றாண்கள் மேலாக அவர் நடத்துவது எல்லோருக்கும் தெரியும்.
97ம் ஆண்டில் உருவாக்கி நடத்திய உதயம் பத்திரிகையில் பங்கு வகித்தபோது பலர் வந்து போனார்கள். ஆனால் கடைசி வரையும் என்னுடன் இருந்தவர் முருகபூபதி. அதனாலே எனக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த 13 வருடங்கள் சாதாரணமானவை அல்ல. ஏராளமான சவால்கள், , பயமுறுத்தல்கள் அத்துடன் வெற்றிகள்பல ஏற்பட்டன. அக்காலம் எவ்வளவு கடினமானது என பலருக்கு தெரியாது. அது இங்கு தேவையில்லை, ஆனால் ஒவ்வொரு மாதமும் 60 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து உதயத்தை ஒப்பு நோக்க எனது வைத்தியசாலைக்கு வருவார்.
300 மேற்ப்பட்ட விடுதலைப்புலிகளில் இருந்தவர்கள் மாணவர்களாகப் பரீட்சை எழுத விரும்பியதால் தனிப்பட்ட கல்விக்கு ஒழுங்கு பண்ணுவதற்கு புனர்வாழ்வுக் கமிசனராக இருந்தவர் இலங்கையில் என்னிடம் கேட்டார். அதை ஏற்படுத்குவதற்கு நான்,அங்கிருந்து இருந்து முருகபூபதியைத் தொடர்பு கொண்டபோது, அவரே ஒழுங்குகள் செய்தவர். அந்த கல்வி முடிந்தவுடன் அம்மாணவர்கள் பெற்றோருடன் சேர்க்கப்பட்டனர்.
நல்லவைக்கப்பால் என்னால் அவருக்கு பல இழப்புகள் உண்டு. அதையும் சொல்லவேண்டும். போர் முடிந்தபின்பு 2011ல் இலங்கையில் முருகபூபதியின் முயற்சியால் கொழும்பில் நடந்த இலக்கிய மகாநாட்டில் என்னை சம்பந்தப்படுத்திய போதிலும் ஆத்மரீதியான ஆதரவைத் தவிர எனது முயற்சி எதுவம் இருக்கவில்லை. ஆனால் எஸ். பொன்னுத்துரை என்னுடனும் இலண்டன் எழுத்தாளர் இராஜேஸ்வரியுடனும் இணைத்து சேறடிக்க முயற்சித்தார். அதில் பல பிரபலமான இலக்கியவாதிகள் இணைந்தார்கள். சமீபத்தில் கூட ஒரு நண்பர், மகிந்த இராஜபக்சவுடன் இலக்கிய மகாநாட்டை சம்பந்தப்படுத்திக் கேட்டபோது, சிரிப்பதைத் தவிர எதுவும் சொல்ல முடியவில்லை. அவரிடம் என்னிடமிருந்து விலத்தியிருக்கும்படி தொலைபேசியிலும் நேரடியும் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
நான், கனடா, கியூபா, இலங்கை என அவருடன் சுற்றுப்பிரயாணமும் செய்திருக்கிறேன். அதிகத் திட்டமிடல் இன்றி ஒரு வித அலட்சியத்தோடு செல்லும் என் போன்றவர்களுக்கு முருகபூபதியோடு செல்வது இரண்டாவது பாஸ்போட்டுடன் செல்வது போன்றது. வழக்கமாகப் பயணம் செய்யும்போது பொதிகள், பாஸ்போட் என்பவற்றில் எனது மனைவி கவனம் செலுத்துவார். முருகபூபதி அந்த பொறுப்பைத்தானே எடுத்து விடுவதுமல்ல, இப்பொழுதும் ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும்போது கவனம் சொல்லி அனுப்பும் ஒரு மனிதன்.
அக்காலத்தில் ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சீனர்களும் தங்களது அரசவையில் நடந்தவைகளை எழுதி வைக்க ஒருவரை நியமிப்பாரகள் அப்படியான வழக்கம் நமது தமிழரிடம் இல்லை. 2500 வருட வரலாறு என பீற்றிக்கொண்டாலும் , அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல. இலங்கை சம்பந்தமான விடயத்தில் கூட , நண்பர் முருகபூபதி இலக்கிய வாதிகப்பால் ஒரு சமூகபதிவாளராக ( Social Recorder) இயங்குவது மிகவும் முக்கியமானதாக நினைக்கிறேன். (அதற்காக கன்பராவிலிருந்து ஒரு PHD படித்த நபர் இறந்த தந்தைக்கு கல்வெட்டெழுத முருகபூபதியை அழைப்பது கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன்.)
அவரது பழைய நாவல்கள் சிறுகதைகளை படித்த எனக்கு அக்காலத்தில் இருந்த மொழியின் வீரியம் தற்போதய இலக்கிய படைப்புகளில் இல்லை என்பது நான் அவதானித்து சொல்லியும் உள்ளேன். அப்போது அவர் பதில் சீவியத்திற்காக செய்த வீரகேசரி எழுத்து வேலையின் விளைவு என்றார்.
அவரது ‘’ இலங்கையில் பாரதி” என்ற புத்தகம் மிகவும் சிறந்த ஒரு படைப்பு அதை பற்றி நான் எழுதிய குறிப்பில் ‘ கொள்ளைக்காரன் ஒரு வங்கியின் இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்தால் , அவனது மனதில் ஏற்படும் நினைவுகளுக்கு குறைவிருக்காது-அது போன்றதுதான் முருகபூபதி எழுதியிருக்கும் இலங்கையில் பாரதி புத்தகத்திலுள்ள தகவல்கள். ஒரு விதத்தில் பல்கலைக்கழக டாக்டர் பட்டத்துக்கான ஆய்வு போன்றது . நிச்சயமாக இந்தப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்து பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கமுடியும். ஆனால் என்ன, நமது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் இவற்றைக் கண்டு கொள்ளாது.
இந்தப் புத்தகம் ஆய்வாளரது மொழியில் எழுதப்படாது செய்தியாளரது மொழியில் எழுதப்பட்டதால் வாசிக்க இலகுவாக இருக்கிறது. ஆனால், முக்கியமான தகவல்களை உள்ளே வைத்துள்ளது , அக்காலத்தில் நடமாடும் புடவை வியாபாரிகளது மூட்டைபோல் இறுக்கமாக உள்ளது. அவிழ்த்தெடுத்தால் காஞ்சிபுரம், பெனாரிஸ், மணிப்புரியனெ வகை வகையாக வெளிவரும்.
இந்தப் புத்தகம், பாரதியை இலங்கைத் தமிழர் எப்படி ஆராதிக்கிறார்கள் என்பதைத் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு புரிய வைக்கும்.’
அதற்கேற்படி எனது வலையில் இந்த கட்டுரையை பார்த்த நண்பர் மாலன் தற்பொழுது இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட நடவடிக்கைகள் எடுத்துள்ளார் என்பது நண்பர் முருபூபதி தந்த தகவல்
பல நிறைகளுள்ள மனிதனாக இருக்கும் நண்பர் முருகபூபதி மற்றவர்களையும் அதேபோல் எதிர்பார்ப்பார். மற்றவரால் அவை முடியாது போனதும், ஏமாற்றமடைவதும், துரோகங்களைக் கண்டு கொதிப்பதும் அவரது இயல்பு.இவைகளே அவரது நெஞ்செரிவு மற்றும் இதய பிரச்சனைகளுக்கு காரணம் எனது கருத்து.
மனிதர்கள் வாழும்போது நடப்பவற்றுக்கு அவர்களே பொறுப்பு என்பதுடன் அவர்கள் வாழும் காலத்தில் அவர்களது உணர்வுகளுக்கு ஏற்ப வாழ்தலே இருத்தல் எனப்படும். எக்ஸிஸ்ரன்ஸலிசம் (Existentialism) எனப்படும். அரிஸ்ரேட்டல் இருந்து நீட்சே எனப் பலர் கூறிய விடயங்கள் அடிப்படையில் இவையே . இதை ஏற்று வாழும்போது சமூகத்தில் இருந்து அன்னியமாக வாழ்வது, முடியாத காரியம். அப்படி வாழ்ந்தால் அது இந்து மத, அல்லது புத்த மத துறவறமாக(Disconnected from the society) அல்லது தாங்களும் தங்கள் குடும்பமும் என வாழ முடியும். என்னைப் பொறுத்தவரை சமுகத்தோடு சேர்ந்து அத்துடன் அந்த சமூக தேவைகளோடு ஒரு தனிமனிதன் இணைந்து வாழலாம், வாழமுடியும் என்பதற்கு நண்பர் முருகபூபதி உதாரணம்.
அரிஸ்ரோடல், தனது சீவனத்திற்கு அப்பால் ஓய்வு நேரத்தில் மனிதன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம் என்கிறார். அதை முருகபூபதியில் பார்கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.