“காதல் என்கிற மனமெய் உணர்வு எங்கேயும் எப்போதும் அழகானது. சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே. ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ, தத்துவ ரீதிகளில் அணுகப்படும் நாவல்களினால் பிழிந்தெடுத்து முன்வைக்கப்படுகிறபோது, மனம் வாசகப் பரவசம் கொண்டுவிடுகிறது.” பக். 15
‘காற்று மரங்களை அசைக்கின்றது’ பிரதி 17 நாவல் பிரதிகளை தன் விமர்சனப் சுழற்சிக்குள் அசைத்துக்காட்டியிருக்கிறது. தேவகாந்தன் பத்து நாவல்களை வெளிக்கொணர்ந்திருப்பவர். 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'கனவுச்சிறை', 'கலிங்கு' முதலான நாவல்கள் அவரது நாவல் ஆக்கும் ஆற்றலை பறைசாற்றுகின்றன. அவரது தேடல் அவரது புனைவுத்திறனை ஆழ அகலப்படுத்தியிருக்கிறது. எனவே தான் அவரே நேர்காணலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “பேச்செல்லாம் நச்சுப் பாவை தொடர் துப்பறியும் நவீனமாக இருந்த நிலையில் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரது வாசிப்புடன் எழுத வந்தவன் நான். எனது எழுத்தும் போக்கும், நோக்கமும் அப்போது அப்படித்தான் இருந்திருக்கும். இருந்திருக்க முடியும். ஆனால் நான் மாறினேன். நீண்டதும் தீவிர மானதுமான வாசிப்புகளின் மூலம் மாறினேன். புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும், கு.அழகிரிசாமியும், ஜானகிராமனும் அறிமுகமாகிறபோது அந்த மாற்றம் தன்னை என்னில் ஊன்றத் தொடங்குகிறது. இதன் அர்த்தம் வாசிப்பை என் தேர்விலிருந்தல்ல, எனக்குள்ள வாய்ப்பிலிருந்தே நான் அடைந்து கொண்டிருந்தேன் என்பதே. பின்னர்தான் தெரிந்தது வாசக உலகம் பல தளங்களை தனித்தனிக் கோளங்களாய்க் கொண்டிருக்கிறதென்பது. அப்போது என் குறி வெகுஜன வாசகப் பரப்பிலிருந்து தீவிர வாசகப் பரப்பாக மாறுகிறது. அதுவே எனது படைப்புகளின் இலக்காகவும் பின்னர் பரிமாணம் பெறுகிறது. அப்போதும் விமர்சன உலக அக்கறை என்னில் இருக்கவே செய்தது. ஏனெனில் அந்த விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். என் வளர்ச்சியின் படிகள் இவை. இவையே எப்படைப்பாளியின் படிகளாகவும் இருக்கமுடியும். இல்லை, எனக்கு 'தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி' என்பதுபோல் எடுத்த எடுப்பிலேயே தீவிரமாய் எழுத வந்ததென யாராவது கூறின் அவரை நாம் புரிந்துகொள்ளலாம்”.
“1986இல் வெளிவந்த எனது முதல் நாவலான 'உயிர்ப் பயணம்', அது வெளிவந்த காலத்தில் என்னைப்போலவே எனது வாசக நண்பர்களையும் திருப்திப்படுத்தியிருந்ததை இப்போது என்னால் நினைவுகொள்ள முடிகிறது. ஆனால் இன்றைக்கு அந்த நாவலின் பலஹீனமும் குறைகளும் எனது அவதானத்துக்கும் வருகின்றன. அன்றைக்கு எண்ணியிருந்ததுபோல அதை ஒரு நாவலாக இன்று என்னால் கொண்டுவிட முடியாதிருக்கிறது. முக்கியமான சில நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறேனென்கிற வகையில், எனது சொந்த நாவலான 'உயிர்ப் பயணம்' பற்றிய மதிப்பீட்டில் நான் தயக்கம் காட்டிவிடக் கூடாது. அதை ஒரு நெடுங்கதையாகவோ குறுநாவலாகவோதான் இன்றைக்கு என்னால் கருத முடிகிறது. அதீத உணர்வுச் செறிவுள்ள பாத்திரங்களைக் கொண்டதாகி, இலட்சியவாத உரையாடல்கள் உள்ளதாகவும் ஆகியிருந்தது. நாவலுக்கு அந்தத் தன்மை பேரிடர் விளைப்பது. மேலும் அது நாவலுக்கிருக்கவேண்டிய பல்பரிமாண உள்ளடுக்குகள் அற்று ஒற்றைப் பரிமாணத்தில் கட்டுமானமும் ஆகியிருந்தது. உரையாடற் சிக்கனத்திலும் போதிய கவனத்தை நான் காட்டியிருக்கவில்லை.” (பார்க்க, வ.ந.கிரிதரனின் பதிவுகள்' இணைய இதழ்: “தேவகாந்தன்”) தேவகாந்தன் தன்னுடைய படைப்புகள் பற்றி (மனம் திறந்த) இவ்வாறான விமர்சன மதிப்பீடுகளைக் கொண்டிருப்பவர். எனவே ‘காற்று மரங்களை அசைக்கின்றது’ நூலிலுள்ள நாவல்களைப் பற்றிய பத்திகளில் அவரே குறிப்பிடுவது போல, ‘நாவல்கள்பற்றி தீர்க்கமான விமர்சனங்களையும், வியாசங்களையும் மிகவும் பிரக்ஞையோடு’ எழுதியிருக்கிறார்.