திருப்பூர் சக்தி விருது விழா 2025 - தகவல்: சுப்ரபாரதிமணியன் -
“ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும் “ “ பெண்கள் தங்கள் தலையிலிருந்து வீட்டை இறக்கி வைக்க வேண்டும். சம்பளம் இல்லாத வேலை செய்பவர்களாக அவர்கள் தொடர்ந்து இருக்கக் கூடாது. இயந்திரப் பயன்பாடு பெண்களுடைய உணர்வுகளை மழுங்கடித்து விடக் கூடாது “ என்று அமெரிக்க வாழ் எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் பெண்கள் படைப்புகள் பற்றிய கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில் குறிப்பிட்டார் ( இவரின் டைரி, அமெரிக்காவில் சாதி ஆகிய நூல்கள் முக்கியமானவை. இரண்டும் பாரதி புத்தகாலயம் வெளியீடு )
இந்த ஆண்டில் திருப்பூர் சக்தி விருது விழா ஞாயிறன்று நடைபெற்றது. 25 எழுத்தாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் அமெரிகாவிலிருந்து இரண்டு பேரும் இந்த விருதுகளை பெற்றார்கள்
சுமார் 400 எழுத்தாளர்களுக்கு இந்த விருது கடந்த 21 ஆண்டுகளாக வழங்கப்பட்டது பற்றி தூரிகை சின்னராஜ் அவர்கள் குறிப்பிட்டு பேசினார்
மூத்த எழுத்தாளர் ராஜேஸ்வரி கோதண்டம் பேசுகிறபோது ” சாகித்ய அகடமி முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையானவர்களை ஜீரிகளாகப் போடுகிறார்கள். ஜீரிகள் தங்களுக்கு தேவையானவர்களை விருதுக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் தான் 35 மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதி எழுதி இருக்கிறேன். ஆனால் சாகித்ய அகாடமி என்னைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் தருவதில்லை. மூத்த படைப்பாளர்களை நிராகரிக்கிறார்கள் “ என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்