கம்பராமாயணத்தில் தேர்ப்பாகன் - முனைவர் க.மங்கையர்க்கரசி,,உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,
முன்னுரை
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் ஊர்தியே தேர்.அந்தத் தேரை ஓட்டுபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். நால்வகை படைகளில் ஒன்று தேர்ப் படையாகும். தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதைத் தேர்ப்பாகன் செலுத்தினான். தேரை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். .சங்க இலக்கியத்தில் தேர்ப்பாகன் குறித்து நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கம்பரும் தன் இராமாயணத்தில் தேர்ப்பாகன் குறித்து கூறியுள்ள செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கைகேயி ஒரு தேரோட்டி
போரில் வெற்றிபெற தேரோட்டி மிகவும் வல்லவனாக இருக்கவேண்டும். சம்பராசுரனுடன், தசரதன் போர் புரியும்போது கைகேயி அவனுக்கு உதவினாள். பாடலில் ’கோல்கொள’ என்ற பகுதிக்குத் தேர் சக்கரத்தின் அச்சாணி கழன்று விழுந்துவிட்டபோது, அந்தத் தேர் சாய்ந்து விழுந்து விடாதவாறு தன் விரலையே கோலாகக் கொண்டு தேரை ஓட்டினாள். என்றும், தேர்ப்பாகன் இல்லாத நிலையில் தசரதனுக்காக குதிரைகளை ஒட்டுகையில் கோல் கொண்டு தேரை ஓட்டினாள் என்றும் கொள்ளலாம். தேர்மீது அமர்ந்து போர் செய்யும் போது தேரைச் செலுத்தும் பாகன் தேர்ப்பாகனாவான்.
“பஞ்சி மென் தளிர் அடிப்பாவை கோல்கொள
வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ”
(மந்திரப்படலம் 18)
தேர்ப்பாகனின் கடமை
` தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் கடமை ஆகும். தேரில் ஏறிப் போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும் ,பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும்.போர் செய்பவர் தடுமாறும்போது,உண்மை நிலையை உணந்து எடுத்துக் கூறவேண்டும். தேரில் ஏறிப் போர் செய்பவர் தளர்ச்சியுற்றால்,தொடர்ந்து போர் செய்ய இயலாதநிலையில் அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.பாகன் ஓட்டும் தேரில் ஏறிப் போர் செய்பவர் மனதில் தவறான எண்ணம் தோன்றினாலும் உண்மைத் தன்மையை எடுத்துக் கூறவேண்டும்.எதிரிகள் தேர்ப்பாகனையே முதலில் வீழ்த்துவர். ஏனெனில் அப்போதுதான் பகைவர் தேர் ஓடாது என்பதால் முதலில் தன் உயிர்க்கே ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் தன் தேரில் ஏறுபவரைக் காக்கவேண்டும்.