5
சென்ற அரசு அகன்ற பின், பொறுப்புகளை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசை “புதிய போத்தலில் பழைய கள்ளு” என்று எதிர்பாளர்களால் வர்ணணைக்கு உட்படுத்தப்பட்டாலும், “நகர்வுகளில்” அவர் இன்னமும் புதிய கள்ளாகவே தென்படுவதை விமர்சகர்கள் சுட்டிகாட்டாமல் இல்லை. இது காலம் வரை, இலங்கையின் நெருக்கடிக்கு, உண்மையான காரணம், இலங்கை தனது கடன் முறிகளை திறந்த சந்தையில் விற்றமையே என்பது குறித்து, அவர் இதுவரை வாய்திறவாமல் இருப்பதே அவரது சாமர்த்தியத்தை காட்டுவதாய் இருக்கிறது எனலாம். 51-57 கோடி பில்லியன் டாலரை வெளிநாட்டு கடனாய் (வெளிநாட்டு மொத்த கடன்களில் 47%) இருக்க தலையாய காரணமாய் அமைவது இக்கடன் முறிகளை விற்றதுவே - இதுவே, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளுக்கு மூலகாரணம் என்பது குறித்து இதுவரை அவர் ஒரு வார்த்தையும் கூறினார் இல்லை. இருந்தும், “சீன கடன்பொறி”, அல்லது “இந்திய கடன்பொறி” என்ற கதை மேலெழும்பும் போதெல்லாம் மௌனம் காப்பது, அல்லது அவற்றை கண்டும் காணாதது போல் இருப்பது இவரது உயரிய பண்புகளில் ஒன்றாகின்றது. பிராந்திய-உலக வல்லரசுகளை மோதவிட்டு, அதில் வர கூடிய லாப-நட்டங்களை வளைத்து போட்டுக்கொள்ளும் ஓர் அணுகுமுறையானது ஏற்கனவே இலங்கைக்கு அறிமுகமான, புளிப்புத்தட்டிப்போன ஓர் நடைமுறைதான். எனினும், ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அமெரிக்க சார்பும், பெருந்தேசிய உணர்வும் இந்நடைமுறைக்கு புது மெருகு சேர்ப்பவையே என்று கூறினால் அது மிகையாகாது.
உதாரணமாக, சில மாதங்களின் முன்னால் இடம்பெற்ற WION நேர்காணலின் போதுகூட, இத்தனை நூல்களில், உங்களின் இதயத்திற்கு நெருக்கமான நூல் எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, ஒரு நொடியும் தாமதிக்காமல் “அது மகாவம்சம் தான்” என கூறி நின்றார். இதுபோலவே, அவரது வீடு, எதிர்ப்பு போராட்டகாரர்களால் அண்மையில் எரியூட்டப்பட்டு விட்டபின்னர், அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. தனது வீட்டில் 25 புத்தர் சிலைகள் இருந்தன என்றும், அவை போராட்டகாரர்களால் தற்போது எரியூட்டப்பட்டுவிட்ட பின்னர், இப்போது எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் என்றும், இதுபோலவே தனது வீட்டில் இருந்த 200 பண்டை காலத்து ஓவியங்கள் எரியூட்டப்பட்டு விட்டன என்றும் அவர் தன் உரையின் போது கூறி நின்றார். இச்சூழலில் இருக்ககூடிய, எந்தவொரு தலைவரும், தான் பெற்ற நட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடமிருந்து பரிதாப அலைகளை பெறமுயற்சித்திருப்பார்களே அன்றி வேறு எதனையும் செய்திருக்க துணிந்திருக்க மாட்டார்கள். இந்த வேறுபாடு, அவரது மனோ திடத்தையும், திட்டம் வகுக்கும் அவரது அளப்பரிய ஆற்றலையுமே பறைசாற்றுவதாய் உள்ளது என ஆய்வாளர்கள் புகழ்ந்துள்ளனர். இக்கண்ணோட்டத்தில் பார்க்குமிடத்து, எதிர்ப்பலைகளை படைபலம் கொண்டு அழிப்பது அல்லது ஒடுக்குவது, மேலும் இருக்கும் எதிர்ப்பலை சூழலை தகுந்த மாற்றீடால் மாற்றியமைக்கப்படுவது, போன்ற தேவைகளை அவர் அறியாமல் இருக்க முடியாது என நம்பலாம்.