- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல் ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால் நடாத்தப்பட்டது. மொஹமெட் இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர். தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. - பதிவுகள்.காம் -
கேள்வி: சென்றமுறை 1815இன், கண்டிய ஒப்பந்தம் பற்றி கதைக்க நேரிட்டது. நீங்கள் உங்கள் பாடலில் போற்றியுள்ள, கெப்பட்டிபொல மொனரவிலவும், மேற்படி கண்டிய ஒப்பந்தத்துக்கு, ஒரு பங்குதாரியாகி கையொப்பமிட்டிருந்தாலும், ஆங்கிலேயர் அவ் ஒப்பந்தத்தை மதியாது, தங்கள் நலனை மாத்திரம் முன்னகர்த்தி, இந்நாட்டு மக்களின் நலனை காட்டிக் கொடுத்த போது, கெப்படிபொல இந்நாட்டின் முதலாவது சுதந்திர போராட்டத்தை தொடங்கினார் என்றும், அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 40,000 மக்களை கொன்று குவித்தே, அச்சுதந்திர போராட்டத்தை ஆங்கிலேயர் இந்நாட்டில் அடக்கினர் எனவும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆங்கிலேயர் இப்படி தாங்கள் செய்து கொண்ட கண்டிய ஒப்பந்தத்தை, தாங்களே மதிக்காததை இட்டு நீங்கள் என்ன கூறுவீர்கள்? ஏனெனில், முக்கியமாக, மேலோட்டமாக பார்க்குமிடத்து, ஆங்கிலேயர்கள்தாம் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் அல்லது நாகரிகத்தின் பிரதிநிதிகள் என்று பொதுவில் நம்பப்பட்டும் கூறப்பட்டும், ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது. கூறப்படுகின்றது?
பதில்: நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆதிக்க சக்திகள் என்றுமே, ஒப்பந்தங்களை ஒருதலை பட்சமாக கிழித்தெறிவதில் பின்நிற்பதில்லை. அன்றும் சரி இன்றும் சரி விடயம் இப்படித்தான் இருந்திருக்கின்றது. முக்கியமாக 1815இன் காலகட்டம் உலகெங்கும், நாடுகளை அடிமைகளாக்கி, காலனிகளை உருவாக்கி, வெறும் அடிமைகளை உருவாக்கிய காலகட்டம், அக்காலகட்டம். நாடுகளை வளைத்துப்போட்டுக் கொள்ளும் ஓர் ஆதிக்க சக்தியின் பார்வையில், ஒப்பந்தங்கள் என்பது வெறும் சில்லறை விவகாரங்கள் தான். இன்றும் கூட ரஷ்யா-ஜெர்மன்-பிரான்ஸ்-உக்ரைன் போன்ற நாடுகள், அமெரிக்க தூண்டுதலில் செய்து கொண்ட மின்ஸ்க் (Minsk) ஒப்பந்தத்தை நாம் பார்ப்போமானால், இது பற்றி கதைக்கும் முன்னால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா, இந்த பேச்சுவார்த்தையானது, உக்ரைன் என்கிற ஓர் நாட்டை, ரஷ்யாவுக்கு எதிராக, ராணுவ ரீதியாக கட்டமைக்க தேவைப்படும் கால அவகாசத்தை உக்ரைனுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இப்பேச்சுவார்த்தை அரங்கேற்றப்பட்டு, ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டதே இன்றி, ஒரு சமாதானத்தை நோக்காக கொண்டு உண்மையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தம் அல்ல என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ரஷ்யாவை, பேச்சுவார்த்தை என்று, இழுத்தடித்து ஏமாற்றி, போருக்கான சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் உக்ரைனுக்கு பெற்று தரும் முகமாக செய்யப்பட்டதே இவ் ஒப்பந்தம் என்பது முன்னால் ஜெர்மன் அதிபரின் கூற்றாகின்றது. இதனையேத்தான், இப்போது, உக்ரைனின் முன்னால் ஜனாதிபதியும் கூறி உள்ளார். இதில் பங்குபற்றிய புட்டின், சூதுவாது அறியாது, நம்பிக்கையுடன், அசட்டுத்தனமாக பங்கேற்றாரா அல்லது உள்ளுர தனக்குள் சிரித்துக்கொண்டே பங்குபற்றினாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாத விடயங்கள். ஆனால் விடயம் இதுதான். ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் ஆதிக்க சக்திகளால் அரங்கேற்றப்படும் போது, அவை பற்பல நோக்கங்களை கொண்டதாகவே இருக்கும். பின்னர் அவை ஒருதலைபட்சமாக கிழித்தெறியப்படுவதும், சகஜமானது பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது. எனவே 1815 ஒப்பந்தம், ஆங்கிலேயரால், ஈர மையால் தீட்டப்பட்ட போதே, அது இப்படித்தான் இனி நடந்தேறும் என்ற புரிதல் ஆங்கிலேயருக்கு இல்லாமல் இருந்திருக்க முடியாது. அந்த ஒப்பந்தத்தின் மை காயும் முன்னரே, ஒரு 40,000 பேரை கொல்வதற்கு ஆங்கிலேய ராணுவம் தன்னை தயார்படுத்தி கொண்டுதானிருக்கும் போன்ற விடயங்கள் கூட ஆச்சரியத்தை உண்டுபண்ணும் ஒரு விடயமல்ல. வரலாற்றில் பெரும்பாலான விடயங்கள் இப்படித்தான் இருக்கின்றன. அல்லது நீங்கள் ஓர் ஆதிக்க சக்தி என்பதை புரிந்து கொள்ளவே முடியாது.
கேள்வி: பல்கலைகழகத்தில், விக்டர்ஹாரா (1932-1973) இசைக்குழுவை நீங்கள் கொண்டிருந்தீர்கள் என்று கூறினீர்கள். விக்டர்ஹாரா பொறுத்து நீங்கள் யாது கூறுவீர்கள்?
பதில்: ஓர் வரலாற்று பாடகன். இசை வல்லுனன். தனது வீணையை (Guitar) அவன் மீட்டியதன் காரணமே, எண்ணற்ற, குரலற்ற, ஏழைகளின் குரலாய் ஒலிப்பதற்கே. அவனது பாடலில் அவர்கள் பலம் பெற்றார்கள். அவர்களுக்கு, அவர்களது வாழ்க்கைக்கு அவனது இசை ஒத்தடம் கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த ஒத்தடம் மதங்கள் தரக்கூடிய ஒத்தடம் போன்றவை அல்ல. அவர்களது இதயத்தின் ஏதோ ஒரு பகுதியை அவனது இசை கிளர்ந்தெழ செய்தது. துடிக்க செய்தது. அவர்களை போராட வைத்தது. அவனது இசை அவர்களுக்கு புதிய நீதிகளை, புதிய நியாயங்களை கற்று தந்தது. இந்த விடயங்கள் எனது இதயத்திலும் தாக்கங்களை செலுத்தியிருக்க கூடும்.
கேள்வி: கிட்டார் இசையை நீங்கள் முறைப்படி கற்றீர்களா? அதாவது, ஒரு ஆசிரியனிடம் சென்று?
பதில்: இல்லை எனக்கு வருத்தம் ஒன்று உண்டு என்றால் அது இதுவென்றே கூறுவேன். 1982இல், நான் என் உயர்தர பரீட்சையை எழுதினேன். அந் நேரத்திலேயே எனது செயற்பாடுகள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில், ஓர் இளைஞனாய், ஒரு மாணவனாய், சிறகு விரிக்க தொடங்கி விட்டன. அங்கே சில இசை வல்லுனர்களை நான் காண நேர்ந்தது. கஸ்தூரியாராய்ச்சி, பெனடிக், மனத்துங்க போன்ற இசை ஆர்வலர்கள் அங்கிருந்தார்கள். அவர்களும் இசை கருவிகளை இயக்க கூடியவர்களே. அவர்கள் மூலமாகவே, சரியாக சொன்னால், அந்நேரத்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மூலமாகவே, விக்டர்ஹாரா எனக்கு அறிமுகமானார். அன்றிலிருந்து இன்றுவரை விக்டர்ஹாராவுடன் நான் ஏதோ ஒரு வழியில் பயணித்து வந்திருக்கின்றேன்.
கேள்வி: நீங்கள் உயர்தர மாணவனாய் இருந்த போது என்று கூறினீர்கள். நீங்கள் அந்த பரீட்சையை எழுதினீர்களா? அதற்கூடு பல்கலைகழகத்தை அடைந்தீர்களா?
பதில்: எனது குடும்பம் அன்று பொருளாதார ரீதியில் சிரமப்பட்ட குடும்பம். நான்கு பேர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். எனது மூத்த சகோதரனும் சகோதரியும் மருத்துவ கலாநிதிகள். அவர்களும் படித்துக் கொண்டே இருந்தார்கள். எனது தந்தையார் மட்டுமே ஒரு சிறு நகரத்தின் தபாலதிபர். எனவே நான் தீர்மானித்தேன். பல்கலைகழகம் செல்லாமல், நான் தொழில் செய்வது, என் தந்தைக்கு பக்கபலமாய் இருப்பது என்று. குறைந்தபட்சம் என்னளவிலேனும் அவருக்கு செலவீனங்களை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வது சால சிறந்தது என்று கருதினேன். எனவே நான் ஒரு தொழிலை தேடிக் கொண்டேன். ஆனால் அதன் போதே நான் எனது கிட்டாரையும் சந்திக்க நேர்ந்தது. நான் தொழில் செய்த இடத்தில் ஒருவர் ஒரு கிட்டாரை வைத்துக் கொண்டு இசைத்து மகிழ்வார். அவரது உதவியுடன் எனது விரல்களும் கிட்டாரின் தந்திகளை இசைக்க தொடங்கின. அதிர வைத்தன எனவும் கூறலாம். அத் தந்திகளில் இருந்து எழுந்த அதிர்வு என் இதயத்தின் நரம்புகளுடன் உறவாடியது. அவற்றை அதிர செய்தது எனலாம்.
கேள்வி: அப்படி எனில் எந்த காலத்தில் நீங்கள் பல்கலைகழகத்தினுள் நுழைந்தீர்கள்?
பதில்: இரண்டு வருடங்கள் இப்படியாக கழிந்தன. அந்நேரத்தில் எனது மூத்த சகோதரன் தன் மருத்துவ கல்வியை முடிக்கும் தருவாயில் இருந்தான். நான் மீண்டும் உயர்தர பரீட்சையை எழுதினேன். எனக்கு கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் நான் பேராதனை பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்தில் இணைந்து கொண்டேன்.
கேள்வி: பேராதனை பல்கலைகழகத்தின் எந்தெந்த எந்த விடுதிகளில் நீங்கள் தங்கியிருக்கின்றீர்கள்?
பதில்:இரண்டு மூன்று என்று கூறலாம். அக்பர், ஜெயதிலக்க, ஒபேசேகர போன்ற விடுதி மண்டபங்களில் நான் இருந்திருக்கின்றேன். அதிகமாக நான் வாசம் புரிந்தது, ஜெயதிலக்க ஹாலில் என்று கூறலாம்.
கேள்வி: அந்த காலங்களில் உங்களது விக்டஹாரா இசைக்குழு எப்படி செயற்பட்டது?
பதில்: என் கிட்டார் என் முதுகில் எப்பொழுதுமே சயனித்தவாறே இருக்கும் -நான் அதனை மீட்டாத வேளை. பல மாணவ மாணவிகளின், இதயங்களை என் கிட்டார் இசை தீண்டும். நான் இசைக்கும் பாடல்களில் உள்ள சத்தியத்தை அவர்கள் உள்வாங்கவே செய்வார்கள். அவர்கள் எந்த மொழி சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். இசையின் மொழி, அவரவர் தாய் மொழிகளை கடந்து, அவர்களின் இதயத்துள் நுழையும்.
கேள்வி:இசைத்தான் உங்கள் முழு வாழ்வும் என்றால், உங்கள் அரசியல் வாழ்வுக்கு என்ன நடந்தது?
பதில்: அரசியல் வேறு, இசை வேறு என்று ஒன்றில்லை. என்னை பொறுத்தவரை இசையே அரசியல். அரசியலே இசை.
கேள்வி: அப்படியென்றால் உங்கள் அரசியலை எடுத்து செல்ல இதனை- அதாவது, இசையை ஒரு ஊடகமாக பயன்படுத்தியுள்ளீர்கள்.
பதில்: அப்படியும் கூறலாம். ஓர் சக மனிதனை பற்றி சிந்திக்க, இந்நாட்டின் உழைக்கும் மக்களின் தாபங்களை உயர்த்தி பிடிக்க, இந்நாட்டின் உண்மை வரலாற்றை எடுத்து கூற இந்த இசைத்தான், ஓர் வழி என்றால் அது அப்படியே இருக்கட்டும். அந்த நாகரீகத்தை இந்த இசையில் இருந்து பிரித்து கதைப்பது என்பது என்னால் முடியாததாகின்றது. எனது கிட்டாரின் முதலாவது தந்தி அதிரும் போதே அந்த நாகரீகமும் சேர்ந்தே அதிரும். அந்த அரசியலும் - அதை அரசியல் என்று கூறுவீர்களானால் - அது உங்களை தீண்டவே செய்யும். கெப்படிபொலவுடன் ஓர் 40,000 பேரை பற்றி நான் கதைப்பது அரசியலா அல்லது இசையா அல்லது இரண்டும் கலந்த ஒன்றா? நான் அறியாத விடயங்கள் இவை. ஆனால் ஒன்றை மாத்திரம் நான் கூறக்கூடும். விக்டர்ஹாராவின் இசை என் இதயத்தில் என்ன உறவுகளை என்ன அர்த்தங்களை கொண்டு உறவாடுகின்றதோ அதே அர்த்தங்களுடுதான் உங்கள் இதயங்களுடனும் நான் சங்கமிக்க முயல்வேன்.
கேள்வி:இசையை உங்கள் அளவில் பழகிய பின் அதன் பாரம்பரிய பக்கத்தை தீண்ட முனைந்தீர்களா?
பதில்: நிச்சயமாக. எனது மருத்துவ சகோதரன் எனக்கென ஓர் கிட்டாரை 1982இல் பரிசளித்த பின் நான் ஸ்பானிய கிட்டார் இசையை ஆழமாக கற்க முனைந்தேன். இதேவேளை பல்கலைக்கழகத்தில் எனது விரிவுரையாளர்களில் ஒருவர் என்னை ஊக்குவித்த கதையையும் நான் சொல்லியே ஆக வேண்டும்.
கேள்வி: சற்று விவரமாய் கூறுவீர்களா?
பதில்: எனது பல்கலைகழகத்தில் கனகராஜ் கணகரட்ணம் என்ற பேராசியரியர் ஒருவர் விஞ்ஞான பீடத்தில் கற்பித்து வந்தார். எனது முதுகில் எப்பொழுதும், ஒரு கிட்டார் தொங்குவதை அவதானித்த அவர், ஒரு நாள் என்னை அழைத்து இரு நூல்களை கொடுத்தார். ஒன்று Guide to Folk Songs Technics. மற்றது Classical Guitar Player. . இவ்விரு நூல்களையும் அவர் தந்து, “ஆம்… அப்படியென்றால் கிட்டார் உனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது என எடுத்து கொள்ளலாமா?” என்றார். நான் ஆம் என்றேன். 1983இன் வன்செயலின் பிறகு அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார் - இந்நாட்டை விட்டு நிரந்தரமாக நீங்கி. இந்நூல்கள் என்னை செழுமைபடுத்தின. பலதையும் இவை எனக்கு உணர்த்தின. எனது பாடல்கள் இன்று இங்கே மக்களுக்காய் ஒலிக்கின்றன. அவர் எங்கிருக்கின்றார் - இருக்கின்றாரா என்பதுகூட, எனக்கு தெரியாது. ஆனால் அவரது நினைவுகள், அந்த நாட்கள் அனைத்துமே என் நெஞ்சில் ஆழ பதிந்து கிடக்கின்றன.
கேள்வி: உங்கள் பல்கலைகழக நாட்களில் மாணவர்களிடையே உங்களின் செயற்பாடுகள் எப்படி இருந்தன?
பதில்: நான் விஞ்ஞான பீடத்தின் மாணவ சங்கத்தின் தலைவராக இருந்தேன். இது 1984-1988 காலப்பகுதி எனலாம். எனது இரண்டாம் வருடத்தில் நான் மாணவ தலைவனாக நியமிக்கப்பட்டேன். அக்காலங்களில் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் கிளர்ந்து, எங்கள் கல்வியை இழுத்தடிக்கும் காரணிகளாகின. பல்கலைக்கழகமும் சில வருடங்கள் இழுத்து மூடப்பட்டன. IPKF நாட்டிற்குள் வந்தது. அதே வருடத்தில் அரசு என்னை கைது செய்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அடைத்தது. ஏனென்றால் மாணவர்களாகிய நாங்கள் IPKFஇன் வரவை எதிர்த்து போராடினோம். பல்கலைக்கழகத்தில், இருந்த JVP சார்ந்த மாணவ இயக்கத்துடன் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாவிட்டாலும் நானும் கைது செய்யப்பட்டேன்.
கேள்வி: எத்தனை மாதங்கள் நீங்கள் தடுப்பு காவலில் இருந்தீர்கள்?
பதில்: கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்.
கேள்வி:இந்த சிறை வாழ்க்கையில் நீங்கள் பலரையும் சந்தித்திருக்க கூடும். உங்கள் நினைவுக்கு யார் வரக்கூடும்?
பதில்: P.தங்கராஜ் எனும் ஒரு தோட்ட தொழிலாளி என் நினைவில் இருந்து அகல முடியாதவர். அவர் புசல்லாவவை ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தின் தொழிலாளி ஒருவர். நாங்கள் அனைவரும் மாணவர்கள். ஓர் இருபது இருபத்தைந்து வயதிற்கு உட்பட்டவர்கள் - இவர் மாத்திரமே ஒரு 36 வயதுடையவர். ஆனால் 40, 50 வயது சென்றவர் போல காட்சி தருவார். உண்மையில் பொலிசாருக்கு ஓர் செய்தி கிடைத்துள்ளது. சு.தங்கராஜை உடனடியாக கைது செய்யுமாறு. குறிப்பிட்ட இந்நபர் சு.தங்கராஜ் அல்ல. சு.தங்கராஜ் பதுளையை சேர்ந்தவர். JVP இன் தொழிற்சங்கத்தில் பணி புரிந்தவர். பொலிஸ் இவர் தான் அவரென நினைத்து இவரை பிடித்து அடைத்து விட்டார்கள். விடயம் முடிந்து விட்டது. அதாவது பொலிசாரை பொறுத்தவரை, விடயம் முடிந்துவிட்டது. இவரை, அதாவது, இந்த P.தங்கராஜை காண, இவரது மனைவி மாத்திரம் மூன்று மாதத்திற்கொரு முறை வருவாள். இருவரும் ஒரு வார்த்தைகள் கூட பேசியதை நான் கண்டதில்லை. அப்படியே பேசி இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசியிருக்க கூடும். ஏனெனில் வந்த நேரம் தொட்டு, புறப்படும் நேரம் வரை இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்கும். என்னால் மறக்க முடியாத காட்சிகளில் இதுவும் ஒன்று.
கேள்வி: அப்படியென்றால் நீங்கள் உங்கள் பட்டதாரி வாழ்க்கையை எந்த ஆண்டில், ஈற்றில் முடித்தீர்கள்?
பதில்: என்னால் எனது பல்கலைகழக கல்வியை முடிக்க முடியாமலேயே போனது. காரணம் நாங்கள் ஒரு 40 பேர். விஞ்ஞான பீடத்தில் சிறப்பு துறை சார்ந்த மாணவர்கள். பல்கலைகழகத்தினர் இறுதியாக தீர்மானித்தார்கள். இவர்களுக்கு இறுதி பரீட்சை வைத்து முடித்து விடுவோம் என்று. இதே நேரம், மாணவரிடையே இருந்த துஏP, மாணவர்களை பரீட்சைக்கு அமர வேண்டாமென்று வலியுறுத்தியது. ஆனால் என்னை பொறுத்தவரை இறுதி ஆண்டு மாணவர்கள் தங்கள் பரீட்சையை எழுதிவிட்டு பல்கலைகழகத்தை விட்டு விலகுவது சால சிறந்தது என முடிவு செய்தேன். அதாவது, வடக்கில் ஐPமுகுவும் புலிகளுடன் யுத்தம் புரிகையில் தெற்கே துஏPயும் அரசும் யுத்தத்தில் முனைப்பு காட்டினார்கள்.இந்த சூழ்நிலையில் எனக்கு பட்டம் பெறுவதே மனதுக்கு ஒவ்வாத ஒரு விடயமாகியது. நல்லது. உங்களது பட்டம் உங்களுடனேயே இருக்கட்டும். எனது கிட்டார் என்னுடனேயே இருக்கட்டும். இந்த முடிவோடு நான் பேராதனை பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறினேன் - இன்று வரை எந்த ஒரு பட்டமும் பெறாத ஒரு மனிதனாய்.
தொடரும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.