- அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் இளவேனில் சஞ்சிகைக்காக இந்த நேர்காணலைச் செய்தவர் ஜேகே .  -


எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு  தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை திரு லெ. முருகபூபதிக்கு வழங்குவதன்மூலம் பெருமைகொள்கிறது. இளவேனில் சஞ்சிகை இச்செய்தி கேட்டுப் பெரு மகிழ்வு அடைகிறது. ஏற்றவருக்கு விருது வழங்கி உயர்ந்து நிற்கும் இலக்கியத்தோட்டத்திற்கு  வாழ்த்துகளும் பாராட்டுகளும். தன்னயராத் தொண்டினால் தரணி நிமிர்ந்து நிற்கும் நம் முருகபூபதிக்கு எங்கள் அன்பான வணக்கங்கள்.  இச்செய்தியை ஒட்டி நமக்கொரு செவ்வி தரமுடியுமா என்று அவரைத் தொடர்புகொண்டபோது உடனடியாகவே ஒப்புக்கொண்டமைக்குப் பெரு நன்றி.

வணக்கம். கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இம்முறை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  உங்களின் தொடர்ந்த இலக்கிய, சமூகச் செயற்பாடுகள் எல்லாமே எந்த விருதுகளுக்கும் அப்பாற்பட்டவை. எனினும் இவ்விருது அறிவிப்பை நீங்கள்  எவ்வண்ணம் எதிர்கொள்கிறீர்கள்?

பதில்: கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக அறிகின்றேன். இம்முறை 2022 ஆம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, அவுஸ்திரேலியா -  மெல்பனில் வதியும் எனக்கும்,  இந்தியாவில் பெங்களூரில் வதியும்  எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.  எழுத்தாளர்களாகிய நாம், ஏதாவது ஒரு நோக்கத்திற்காகவே எழுதிக்கொண்டிருப்பவர்கள்.  இதன்  மூலம் அங்கீகாரங்கள் கிடைக்கலாம், அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால், இந்த அங்கீகாரங்களை எதிர்பார்த்து பெரும்பாலான எழுத்தாளர்கள் இயங்குவதில்லை.  விருதுகளும் ஒருவகையில் அங்கீகாரம்தான். அந்தவகையில் எனக்குக் கிடைக்கவிருக்கும் இயல் விருதையும் மற்றும் ஒரு அங்கீகாரமாகவே நான் பார்க்கின்றேன். எனது எழுத்தூழியத்தை மேலும் மேலும் பொறுப்புணர்வுடன் நான் மேற்கொள்வதற்கு இதுபோன்ற  விருதுகளும் ஊக்கம் தரலாம் எனக் கருதுகின்றேன். நான் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சார்ந்தவன். எனக்கு முன்னரும் ஆளுமை மிக்க இலக்கியத் தலைமுறைகள் வாழ்ந்திருக்கிறார்கள். எனக்குப்பின்னரும் புதிய தலைமுறையினர் வரத்தொடங்கிவிட்டார்கள்.  நான் இவர்களுக்கு  இடையில் வளர்ந்தவன். இன்னமும்  இலக்கிய உலகில்  என்னை ஒரு மாணவனாகவே கருதுகின்றேன்.  நான் கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் இன்னமும் அதிகம் இருக்கிறது. நான் எழுதத்தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இத்தருணத்தில்,   கனடா தமிழ்  இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கிடைக்கவிருக்கும் செய்தி மகிழ்ச்சியை -  மனநிறைவைத்தருகிறது.

வெளிப்படையான கேள்வி ஒன்று. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும்  கனடாவிலும் ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் உங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் அவுஸ்திரேலியாவில் கிடைக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு உண்டு. நீங்களும் அதனை உணர்ந்ததுண்டா? உங்களின் அயராத உழைப்பையும் நட்பையும் பயன்படுத்தி  உயர்ந்தோர் பின்னர் உங்களைக் கடந்து செல்வதாக உணர்வதில்லையா?

பதில்: நீங்கள் கேட்டிருந்த  முதற்கேள்வியிலேயே  ஓரளவு இக்கேள்விக்குரிய பதில் இருக்கிறது.  எனினும் சொல்கின்றேன். எனக்குத் தெரிந்த ஒரே தொழில் எழுத்துதான். இதனை அங்கீகாரங்களை எதிர்பார்த்துச் செய்வதற்கு நான் வரவில்லை.  படிக்கின்ற காலத்திலேயே எனக்கு மிகவும் பிரியத்திற்குரிய பாடம் சரித்திரம்தான்.  சரித்திரப் பாடத்தில் நூறுக்கு நூறு புள்ளிகளும் பெற்றிருக்கின்றேன்.  எனது பெற்றோர் என்னைக் கலைப்பீடத்தில் படிக்கவிட்டிருந்தால்,  சரித்திர பேராசிரியாராகியும் விட்டிருப்பேன்.  விதி எனது கல்வியிலும் கோரமாக விளையாடியது வேறு கதை!  1970 களில் நானாக விரும்பி ஏற்ற தொழில் ஊடகத்துறையில்தான் அமைந்தது.  அதே காலப்பகுதியில் படைப்பிலக்கியவாதியுமானேன். முதல் சிறுகதை 1972 இல் வெளியானது.  அன்று முதல் நான் வரித்துக்கொண்டதொழில்இது.  புலம்பெயர்ந்தபின்னர்,  குடும்பத்திற்காக நான் வேறு வேறு தொழில் செய்திருப்பேன்.  ஆனால், எனக்கும் எனது குடும்பத்திற்கும்  முதலில்  சோறுபோட்ட தொழில் எழுத்துதான். அவ்வாறிருக்கும்போது நான் ஏன் அங்கீகாரத்திற்காக வாழவேண்டும்? அலையவேண்டும்?  மருத்துவர், பொறியியலாளர், ஆசிரியர், சட்டத்தரணி,  தொழில் நுட்பவியலாளரிடம் இத்தகைய அங்கீகாரம் தொடர்பான கேள்வியைக் கேட்பீர்களா? புகழை எதிர்பார்ப்பவர்கள்தான் அங்கீகாரத்திற்கும் ஏங்குவார்கள்.  எனக்கு அத்தகைய ஏக்கம் ஏதும் இல்லை. அதனால், நீங்கள் குறிப்பிடும்  “கடந்து சென்றவர்கள்“ பற்றியும் அலட்டல்கள் இல்லை.

உங்கள் பதிலைக் கேட்கையில் “வெஞ்சினங்களொன்றும் விரும்பாளே” என்ற தனிப்பாடலின் வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது. அது உங்களது மேன்மை. எனினும் ஒரு கலைஞருக்கான அங்கீகாரம் என்பது வெறுமனே அந்தக் கலைஞருக்கல்லவே? அது சமூகத்துக்கானது. ஒரு சமூகம் தன்னினின்று முகிழ்ந்துவரும் திறன்களை ஏற்றிக் கௌரவிப்பதன்மூலம் தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்கிறது. அதன்மூலம் புதிய தலைமுறைக்கு வழிகாட்டிகளையும் உத்வேகத்தையும் அறிமுகம் செய்கிறது. அதனைச் சரியாகச் செய்யாத சமூகத்தின் மகனாகவே அங்கலாய்ப்புடன் அக்கேள்வியைக் கேட்க நேர்ந்தது. அக்கேள்விக்கான இன்னொரு காரணமும் உண்டு. நீங்கள் தனிமனிதராக இன்னொருவருக்கான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்தே வந்துள்ளீர்கள். உங்களுக்கு அடுத்த தலைமுறையோடு நண்பராகவே பழகுவீர்கள். உங்கள் தலைமுறையினரோ, உங்களுக்கு மூத்தவரோ நோயுற்றுத் தனிமையில் வாடும் பொழுதெல்லாம் அவர்களோடு உங்கள் நேரத்தையும் நிதியையும் நீங்கள் செலவிடுவதுண்டு. பெரும் ஆளுமைகள் என்றில்லாமல் சக மனிதர்களின் வரலாறுகளையும் எழுத்தில் ஆவணப்படுத்தவும் செய்வீர்கள். இந்தத் தளராத உந்துதல் எப்படிச் சாத்தியமாகிறது?

பதில்: என்னைக் கூர்ந்து அவதானித்துக் கேட்கப்படும் கேள்வி போலத்தோன்றுகிறது.  இதற்கு ஒரு சொல்லில் “இயல்பு” என்று கூறிவிட்டுக் கடந்து சென்றுவிடலாம். யார் ஆளுமைகள்? சமூகம்தான் அவர்களை  உருவாக்குகிறது. ஒருவர் தன்னை ஆளுமையாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக வாழ்வதில்லை.  சமூகத்திற்கு ஏதேனும் வழியில் தன்னாலியன்ற பணியைச் செய்யும் சகமனிதர்களும் எனது கவனத்திற்குள் வந்துவிடுவார்கள்.  அவர்கள் குடும்பத்தலைவன் – தலைவியாகவும் இருக்கலாம். அவர்கள்  தமது குடும்பத்திற்கு அப்பால், வெளியுலகில் எத்தனையோ அரும்பணிகளைச் செய்கிறார்கள். ஆனால், அவை வெளியே தெரிவதில்லை. அவர்களை இனம் கண்டு, அவர்களின் பண்புகளைச் சமூகத்திற்குச்  சொல்லவேண்டும். அவர்களின் முன்மாதிரிகளை  யாராவது ஒருவர் சொல்லவேண்டும்.  அது நானாகவே  இருந்துவிட்டுப்போகின்றேனே. இதில் என்ன வருத்தம் மற்றவர்களுக்கு?

அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறீர்கள். அவுஸ்திரேலியா வாழ்க்கையை நிதம் வாழ்ந்தாலும் உங்களுடைய தாயகத் தொடர்புகளும் ஏனைய நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களுடனான தொடர்புகளும் இன்னமும் தொடர்கிறது.  ஒரு கலைஞர் என்பவர் தான் வாழும் சூழலையே அவதானித்து, அதனோடு நெருங்கி உறவாடி, அதனையே தன் படைப்பில் தருகிறார் என்று ஒரு பொது அபிப்பிராயம் உண்டு. உங்களால் இந்த அவுஸ்திரேலிய வாழ்வை உள்வாங்கி வாழமுடிகிறதா? இங்குள்ள அரசியலை, சமூகச் சிக்கல்களை, இலக்கியத்தைக் கூர்ந்து பின் தொடருகிறீர்களா? அல்லது புலம்பெயர் தமிழராக இன்னமும் ஈழத்தின் முற்றத்து மாமரத்தையே மனம் நாடுகிறதா?

பதில்: ஏர்ணஸ்ட் சேகுவேரா சொன்னதுபோன்று, நான் கால்பதிக்கும் நிலங்கள் அனைத்தும் எனக்குச்  சொந்தமே.  அதன் அர்த்தம் நில ஆக்கிரமிப்பு அல்ல.  கணியன் பூங்குன்றனார் சொன்னது போன்று  “யாதும் ஊரே யாவரும் கேளிர் “  என்பதே எனது கட்சி. தாயகத்தின் மீதான பாசம் பற்றுதல் தொடருவதனால்தான் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அங்குள்ள போரினால் பாதிக்கப்பட்ட மாணவர் சமுதாயத்துடன் தொடர்பிலிருக்கின்றேன். நெருக்கடியான கால கட்டத்தில் அவுஸ்திரேலியா எனக்குப் புகலிடம் தந்தது.  என்னை உயிர் வாழ வைத்தது. அதனால், புகலிட நாட்டிற்கும் நான் என்றைக்கும் விசுவாசமாகவே இருப்பேன். தொடர்பாடலற்ற சமூகம் உருப்படாது என்பது எனது அவதானம்.  நான் தொடர்பாடலை விரும்புபவன். பேணுபவன். அதன் மூலம் நிறையச் சாதிக்கலாம் எனவும் நம்புபவன்.  அது எனது இயல்பு. எழுபதுகளைத் தாண்டியும் இன்னமும் மிக உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இளையோர் முதியோர் வேறுபாடின்றி எல்லோருடனும் நட்புப் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எவரையும் குறை பேசிப் பார்த்ததில்லை. இந்த சமூக ஊடக யுகத்தில் எதிர்மறையும் எரிச்சலும் பொறாமையும்தான் எங்கள் தலைமுறையை நிறைத்து நிற்கிறது. எங்களைப் பார்க்க உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ஒருவரது இயல்புதான் அவரின் அடிப்படை அழகு. அதனை எவராலும் மாற்றவும் முடியாது. வயது எழுபதைத்தாண்டியும் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்றால், அதுதான் எனது தொடர்ச்சியான வேலை. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. தலைமுறை வேறுபாடின்றி நட்பு பாராட்டுவதற்கு நான் சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டுகளும் முக்கிய காரணம்.

1988 ஆம் ஆண்டில் இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னர் இலங்கை மாணவர் கல்வி நிதியம் (Ceylon Student Educational Fund – Inc) என்ற அமைப்பினை உருவாக்கினேன். அப்போது பிறக்காத குழந்தைகள்தான் தற்போது இந்த அமைப்பின் சமகாலச் செயலாளர் (Secretary) – நிதிச்செயலாளர் (Treasurer) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற மூதுரையை நான் மறக்கவில்லை. படைப்பிலக்கியத்துறையும் அத்தகையதே. அத்துடன் இது அஞ்சலோட்டம் போன்றது. எமக்குப்பின்னர் வரும் – பின்தொடரும் தலைமுறையை இனம் கண்டு நாம் ஊக்குவிக்கவேண்டும். எதுவும் எம்மோடு தரித்து நின்றுவிடலாகாது. இச்சந்தர்ப்பத்தில் 37 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பாடசாலை மாணவி எழுதி வீரகேசரிக்கு அனுப்பிய கவிதையை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.
கவிதை இதுதான்:

எங்கள் தாத்தா மாட்டு வண்டிலில் போனார்.
எங்கள் அப்பா, கோச்சி வண்டியில் போனார்.
நாங்கள் விமானத்தில் பறக்கிறோம்.
எங்கள் தம்பிப் பாப்பா எதில் செல்வான்…?

எங்கள் தாத்தா, மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டார்.
எங்கள் அப்பா தோசை – புட்டு சாப்பிட்டார்.
நாங்கள் பாண் – ரொட்டி சாப்பிடுகிறோம்.
எங்கள் தம்பிப் பாப்பா என்ன சாப்பிடுவான்…?

எங்கள் தாத்தா கடவுளுக்குப் பயந்தார்.
எங்கள் அப்பா, தாத்தாவுக்குப் பயந்தார்.
நாங்கள் ஆர்மி – நேவிக்குப் பயப்படுகிறோம்.
எங்கள் தம்பிப் பாப்பா எவருக்கும் பயப்படமாட்டான்.

இளந்தலைமுறையை அரவணைப்போம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது.

நான் கவனித்தவரையில் எதிரிகள் உங்களுக்கில்லை. உங்களுக்குக் கீழ்மை புரிந்தவர்களையும் நட்புப் பாராட்டும் குணம் உங்களுக்கு உண்டு. உங்கள் தொடர்பு வட்டாரம் பெரிது. அதற்காகச் சில சமரசங்களையும் நீங்கள் செய்வதுண்டா? ஒரு இலக்கியவாதியாக நீங்கள் வரையறுத்த அறத்தின்கண் மாறு ஏற்படும்போது அதனை ஓங்கி ஒலிக்காமல் நட்புக்காகக் கடந்துபோனதுண்டா?

பதில்: நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். அவ்வாறுதான் எதிரிகளும். ஒரு கால கட்டத்தில் நட்பாக இருந்தவர்கள், பிறிதொரு காலகட்டத்தில் ஏதேனும் காரணங்களினால் எதிரியாகலாம். அவ்வாறே எதிரிகளும் பிறிதொரு காலகட்டத்தில் நட்பாகலாம். பொதுவாழ்வில் இது சகஜம். எதிரிக்கும் துரோகிக்கும் அர்த்தம் வேறு வேறு. எதிரிக்கு எதிரி நண்பனாகவும் மாறும் சமூகம்தான் இது.
எதிரியிடத்திலும் சில மேன்மையான குணவியல்புகள் இருக்கும். நான் எப்போதும் மேன்மையான பக்கங்களைத்தான் பார்க்கின்றேன். என்னிடத்திலும் அறச்சீற்றங்கள், தார்மீகக்கோபங்கள் இருக்கின்றன. அவை பொது நோக்கு என வரும்போது மாறலாம். தனிப்பட்ட எனது தேவைக்காக - நலன்களுக்காக எவருடனும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை. ஆனால், பொதுப்பணிகளில் சில விட்டுக்கொடுப்புகளை பொது நோக்கத்துடன் செய்திருக்கலாம்.

அவுஸ்திரேலியாவில் இன்றைய தமிழ்ச்செயற்பாடுகள் ஆழமாக அர்த்தப்பூர்வமாக இருக்கிறதா? இங்கே நமக்கான ஒரு இலக்கியம், சமூக அடையாளம் உருவாகி விட்டது என்று கருதுகிறீர்களா? அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவ அடையாளங்கள் எவை என்று கருதுகிறீர்கள்?

பதில்: முதல் இரண்டுக்கும் எனது பதில் “இல்லை“ என்பதுதான். அதற்கு எம்மவர்கள்தான் காரணம். இதுபற்றி நிறையப் பேசமுடியும். அவை அனைத்தும் கசப்பான உண்மைகள்தான். முற்றிலும் தமிழர்கள் இருக்கும் சபையில் தமிழில் பேசாத எம்மவர்கள் குறித்து ஏமாற்றம்தான் வருகிறது. தமிழராகப்பிறந்த பலர் தமிழில் எழுதவும் முடியாமல் சிரமப்படுகிறார்கள். தமிழின் தேவை, தாங்கள் தமிழர் என்ற அடையாளத்திற்கு மாத்திரம் போதும் என நினைக்கிறார்கள். இங்கு வாழும் எத்தனை தமிழர்கள், இங்குள்ள எழுத்தாளர்கள் எழுதும் படைப்புகளை வாசிக்கிறார்கள். இங்கு நடக்கும் நூல்வெளியீடுகளில் தோன்றி நூல்களைப் பெறும் எத்தனைபேர் அவற்றைப் படிக்கிறார்கள்? பெரும்பாலானவர்கள் கைத்தொலைபேசியின் தொடுதிரையுடன் காலத்தை கடத்துகிறார்கள். பொது நிகழ்ச்சிக்கு வந்தாலும் தொடுதிரையைத் தடவிக்கொண்டிருப்பவர்களைத்தான் பார்க்கிறீர்கள். இதுதான் தற்போது அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தின் தனித்துவ அடையாளங்கள்.

இந்தப் பண்பு எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் அல்லவா? தொடுதிரை மோகம் இன்றைக்கு உலகளாவிய பிரச்சனை அல்லவா? புத்தக வாசிப்பும் ஒப்பீட்டளவில் எல்லா சமூகங்களிலும் குறைந்தே இருக்கிறது. மெல்பேர்ன் எழுத்தாளர் விழாவில் இவ்வருடம் உலக இலக்கியவாதிகள் பலரும் பங்கெடுத்திருந்தார்கள். ஆனால் அங்குமே வாசகர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆக ஆங்கிலச்சூழலும் அப்படியேதான் இருக்கிறது.

அடையாளம் பற்றிய கரிசனைக்கு ஒரு காரணம் உண்டு. நம்மில் பலர் புலம்பெயர்ந்து ஆண்டுக்கணக்காகிறது. நம் தாய் நிலத்தில் நாங்கள் வெறும் சுற்றுலாப்பயணிகள் என்ற நிலையை அடைய ஆரம்பித்துவிட்டோம். அம்மக்களும் நம்மைப் புலம்பெயர் தமிழர் என்று பிரித்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவுஸ்திரேலியாவில் இடதுசாரி, வலதுசாரி அரசியல் இருக்கிறது. இங்குள்ள பொருளாதாரப் பிரச்சனை தனி. தஞ்சக் கோரிக்கைகளை இவ்வரசு கையாளும் விதம் ஒரு பிரச்சனை. காலநிலை மாற்றம். LGBTQIA+ பற்றிய தெளிவான பார்வையும் பக்குவமும் நம் சமூகத்தில் இன்னமும் இல்லையல்லவா? நாசூக்கான இனவாதம். நிறவாதம். நம் அடையாளச் சிக்கல்கள். நம் பிள்ளைகளின் அடையாளச் சிக்கல்கள். இப்படிப் பல விசயங்கள் நமக்குப் பேசவேண்டி இருக்கிறதல்லவா? இவற்றை முன்னின்று பேசுவது நம் கடமையல்லவா? நாம் ஏன் இன்னமும் இந்திய - ஈழத்து அரசியல்களையும் அங்குள்ள சச்சரவுகளையும் பின் தொடருகிறோம்? அவை சந்தைச் சரக்கு என்பதாலா? நமக்கான பிரச்சனைகளைக் கவனத்தில் எடுக்கவேண்டுமா இல்லையா?

இன்னமும் எமது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம், தென்னிந்தியத் தொலைக்காட்சி நாடகங்களிலும், சில கணங்கள் சிரித்து மகிழும் பட்டிமன்றங்களிலும் தமது நேரத்தைச் செலவிடுகிறது. வாழும் நாட்டின் அரசியல் எவ்வாறிருக்கிறது என்ற பிரக்ஞையும் பலரிடம் இல்லை. தேர்தல் வரும்போது யாருக்காவது வாக்களித்துவிட்டு, வந்தால் சரி. இல்லையேல் தண்டப்பணம் கட்ட வேண்டி வரும் என்ற கவலை மாத்திரம்தான். இந்த நடைமுறையில்லையென்றால் பலர் வாக்குச்சாவடி பக்கமே செல்ல மாட்டார்கள்.

இந்தப்பின்னணியில், நீங்கள் குறிப்பிடும் LGBTQIA+ விடயத்தை அசூசையாகவே பார்ப்பார்கள். ஆனால், மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சமகாலத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் (தமிழ் அல்ல) பிறமொழிப்படங்கள் இதுபற்றி பேசத்தொடங்கிவிட்டன. எனினும், கணவன் இல்லாமல் பிள்ளை பெறும் கலாச்சாரத்திற்குள் சிலர் வந்துவிட்டனர். நேரம் கிடைத்தால், எனது கதைத் தொகுப்பிலிருக்கும் அவள் அப்படித்தான் என்ற சிறுகதையைப் படிக்கவும். நமக்கான பிரச்சனைகளைக் கவனத்தில் எடுக்கத்தவறிவிடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்திற்குள் தொடர்பாடல் அருகிவருகிறது. அன்றாடப் பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது. தமது சக்திக்கு மீறிய விடயங்களில் ஈடுபடுவதனால், திணறிக்கொண்டிருப்பவர்களிடம், நீங்கள் குறிப்பிடும் சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது.

முருகபூபதி என்பவர் எதிர்காலத்தில் எப்படி நினைவுகூரப்படவேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களுடைய செயற்பாடுகளின் “legacy” என்னவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: சமூகத்தை முக்காலத்தின் ஊடாக முன்னோக்கி நகர்த்த முயன்ற எழுத்தூழியன். அதற்காக விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தொடர்பாடலைப் பேணிய சாதாரண மனிதன்.

* நன்றி -  அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் இளவேனில் சஞ்சிகைக்காக இந்த நேர்காணலைச் செய்தவர் ஜேகே . 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி. -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com