காலமும் கணங்களும்: அக்னி வேள்வியில் வந்துதித்த கவிஞர் ஈழவாணன் நினைவுகள்! - முருகபூபதி -
- கவிஞர் மேமன்கவி மார்ச் 23 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட உரை -
" கண்ணகி கால் சிலம்பை கழற்றினாள். சிலப்பதிகாரம் படித்தோம்
என்மனைவி கை வளையல்களை கழற்றினாள்
நீங்கள் கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்."
இந்தக் கவிதையைப் படித்திருப்பீர்கள். அல்லது அறிந்திருப்பீர்கள். கவிஞர் மேத்தா, தனது கண்ணீர் ப்பூக்கள் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் சேர்த்துக் கொண்ட கவிதை இது. சிறிது காலத்தில் மேத்தா, ஆனந்தவிகடன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சோழநிலா நாவல் எழுதி, முப்பதாயிரம் ரூபா பரிசினைப் பெற்றபொழுது , ஈழத்தில் எழுத்தாளர் நந்தினி சேவியர், நண்பர் இளங்கோவன் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட வாகை இலக்கிய ஏட்டில் இவ்வாறு பதில் கவிதை எழுதினார்,
“ அவர் மனைவி வளையல்களைத்
திருப்பிக்கேட்டாள்,
நீங்கள் 'சோழநிலா' வைப்
படிக்கிறீர்கள்.."
இப்படி ஒரு சுவாரஸ்யம் எங்கள் இலக்கிய உலகில் நிகழ்ந்தது. மனைவிமாரிடம் ஏச்சும் திட்டும் மாத்திரம் நாம் வாங்க வில்லை. எமக்கு அவசியம் நேர்ந்த சமயங்களில் அவர்களிடமிருந்து நகைகளும் வாங்கியுள்ளோம். இது தமிழ் எழுத்தாளர் பரம்பரையின் இலட்சணம். அவ்வாறு தனது அருமை மனைவியின் தாலிக்கொடியை ஈடுவைத்து கவிதைப் புத்தகம் வெளியிட்டவர் கவிஞர் ஈழவாணன். " உமக்கேனய்யா … இந்த வேலை? " என்று நண்பர்கள் சினந்தாலும் முகம் சுழிக்காத இலக்கிய உணர்வுமிக்க அருமையான பெண்மணி திருமதி. தர்மபுவனா ஈழவாணன். எனினும் கணவர் கேட்டாரே என்பதற்காக தாலிக்கொடியை அவர் கழற்றியிருக்கக்கூடாது என்று பேசினார்கள் நண்பர்கள். ஏனென்றால் கவிஞர் மேத்தாவுக்கும் மற்றும் பல தமிழக எழுத்தாளர்களுக்கும் கிடைத்தது போன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் பரிசில்கள் ஈழத்து எழுத்தாளனுக்கு என்றைக்குமே கிடைத்ததும் இல்லை. கிடைக்கப் போவதுமில்லை. விற்ற நகையை மீட்பதற்கு.