கவிதை பற்றிச் சில சிந்தனைகள்.... - வ.ந.கிரிதரன் -
கவிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றொரு கூற்றின் அடிப்படையில் ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இது புதிய சர்ச்சை அல்ல. மாற்றங்கள் நிகழ்கையில் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுவதும் இயல்புதான். ஒரு காலத்தில் கவிதையென்றால் அது மரபுக் கவிதைதான். மரபுக்கவிதை எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அதன் காரணமாகக் கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது.
மரபை மீறிப் புதுக்கவிதை பிறந்தபோது புற்றீசல்களாகப் புதுக்கவிஞர்கள் பிறந்தனர். இன்றுள்ள முன்னணிக் கவிஞர்கள் பலரும் அவ்விதம் படையெடுத்த கவிஞர்களிலிருந்து உருவானவர்கள்தாம். அப்பொழுதும் மரபில் கோலோச்சிக்கொண்டிருந்த மரபுக்கவிஞர்கள் புதுக்கவிஞர்களை ஏளனத்துடன் பார்த்தனர். யாப்பு தெரியாதவரெல்லாம் கவிதை எழுத வந்து விட்டார்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகின் எப்பாகங்களிலிருந்தும் வெளியாகும் பத்திரிகை, சஞ்சிகையின் கவிதைப் பக்கங்களைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ்க் கவிதைகளை, கவிஞர்களைக் காணலாம். இவர்களில் பலரைத் தமிழ் இலக்கிய உலகு அறிந்திருக்காது. ஆனால் இவர்களில் பலர் முகங்களை நாம் அறிந்திருக்காதபோதும் இவர்களின் படைப்புகள் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி நாம் எதுவும் கூற முடியாது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பம் காரணமாக இவர்களது படைப்புகள் பலவும் வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆவணப்படுத்தல் மூலமாக வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றது. இன்னும் பல நூறு ஆண்டுகளின் பின்னர் இவர்களின் பலரின் கவிதைகள் ஒரு காலகட்டக் கவிதைகளாக இனங்காணப்படும் சாத்தியங்களும் உண்டு.
இணையத்தின் வருகை அதுவரை சிலரின் உரிமையாகவிருந்த ஊடகங்களை மக்கள் மயப்படுத்தியது. வலைப்பதிவுகள் மக்களை எழுத வைத்தது. எழுத்தாளர்கள் பல்கிப் பெருகினர். இன்று இணைத்தை மேய்ந்தால், தேடினால் மில்லியன் கணக்கில் வலைப்பூக்களைக் காணலாம். சுவையான பல பதிவுகளை அங்கு காணலாம். அவற்றில் எழுதும் பலரை வாசிப்பதற்கு இலட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் பெரும்பாலும் இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் கவனிப்பதில்லை. எண்ணிக்கையில் பெருகினாலும் மக்கள் பலரை எழுத்தாளர்களாக்கி வைத்த விடயத்தை நான் ஆரோக்கியமானதாகவே பார்க்கின்றேன்.