நாலடியார் கூறும் நிலையாமை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, (சுழற்சி 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
முன்னுரை
உலக இலக்கியங்களின் தொன்மையும், சிறப்பும் வாய்ந்த நூல்கள் என போற்றப்படுபவை கடைச்சங்க நூல்களே ஆகும். அவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்பனவாகும். இப்பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று நாலடியார் எனும் நூலாகும்.
பதினெண்கீழ்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் நீதிநூல் நாலடியார். உலகப்பொதுமறையான திருக்குறளில் நிலையாமை பற்றி ஒரு அதிகாரம் மட்டும் காணப்பட, நாலடியாரில் மூன்று அதிகாரங்களில் நிலையாமை அமைந்துள்ளதால் நாலடியாரை நிலையாமையை வலியுறுத்தும் நூல் என்று அழைக்கலாம். நிலையாமையை முதலில் வைத்து வற்புறுத்தும் பாட்டுக்களும் சொல்லோவியங்களாய் இலக்கியச் சுவையோடு அமைந்துள்ளமை இந்நூலின் சிறப்பியல்பாகும். இந்த புவியில் கண்ணில் காணும் அனைத்தும் நிலையில்லாதவை என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நிலையற்ற தன்மையை நாலடியார் வழி எடுத்துகூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலையாமை – விளக்கம்
நிலையாமை என்பதற்கு உறுதியற்றதன்மை என்று கோனார் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது.
வாழ்கின்ற காலத்தில் நாம் வாங்கிய மாடுகளும். கட்டிய வீடுகளும், மனைவி, மக்கள், உறவினர்களும், வாங்கிய தங்கம், வெள்ளி போன்ற அனைத்தும் அழிந்துவிடும் தன்மை கொண்டதால் அழியாத சிவகதி என்ற பரகதியைச் சேர வேண்டும்.