செப்டெம்பர் 11 பாரதியார் நினைவு தினம். மகாகவி பாரதி மறைந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் ! - முருகபூபதி -
மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.
அவ்வாறு அவரது வாழ்வில் மாற்றங்களையும் சிந்தனைப்போக்கில் புதிய திசைகளையும் தந்தவர்களின் வரிசையில்தான் எங்கள் யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம் அவர்களும் வருகிறார்.
பாரதி தனது வாழ்நாளில் சந்தித்த சித்தர்களில் மாங்கொட்டைச்சாமி என அழைக்கப்பட்ட குள்ளச்சாமி புதுச்சேரியில் அறிமுகமாகிறார். நாளரை அடி உயரமுள்ள அவருடைய ரிஷி மூலம் எவருக்கும் தெரியாது.
வீதியோரத்தில் படுத்துறங்குவார். மண்ணில் புரள்வார். நாய்களுடனும் அவருக்கு சண்டை வரும். கள்ளும் அருந்துவார். கஞ்சா புகைப்பார். பிச்சையும் எடுப்பார். இருந்தும் அவர் துணி வெளுக்கும் தொழிலாளி. ஒரு சமயம் பாரதியிடத்தில் " நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேல் சுமக்கிறேன்" என்றார்.
மற்றும் ஒருநாள் பாரதி, அந்தக்குள்ளச்சாமியிடம், " ஞானநெறியில் செல்லவிரும்புபவன் எந்தத்தொழிலைத் தேர்ந்தெடுக்கவேண்டும்...? " என்று கேட்கிறார்.
அதற்கு அந்தச்சாமியார், " முதலில் நாக்கை வெளுக்கவேண்டும், பொய், கோள், கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி என்பன கூடாது. உண்மையைத்தவிர வேறொன்றும் இந்த நாக்கு பேசலாகாது. அச்சத்தை அகற்றவேண்டும். அதற்கு மனதினுள் இருக்கும் இருளைப்போக்கவேண்டும்" எனச்சொல்லியிருக்கிறார். அதன் பிறகு,
உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்.....
அச்சமில்லை... அச்சமில்லை....
மனதிலுறுதி வேண்டும்... முதலான சாகாவரம் பெற்ற வரிகள் பாரதியிடத்தில் பிறக்கின்றன.