பவளவிழாக்காணும் பல்துறை ஆற்றல் மிக்க இலக்கியப் பேராசிரியர் க. பஞ்சாங்கம்! திறனாய்வில் புதிய எல்லைகளை கண்டடைந்தவர் ! புதுச்சேரியில் இம்மாதம் 26 ஆம் திகதி நிகழ்ச்சி ! - முருகபூபதி -
கடந்துசென்ற ஐம்பது ஆண்டு காலத்தில் ( 1972 - 2022 ) இலக்கிய உலகில் நான் சந்தித்துப்பேசி உறவாடிய இலக்கியவாதிகள் எண்ணிலடங்காதவர்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த பலர் இந்தியாவிலிருந்தவர்கள். இருப்பவர்கள். அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது. அவர்கள் குறித்தெல்லாம் எனது அனுபவங்களை மனப்பதிவுகளை எழுதிவந்திருக்கின்றேன். அதன்மூலம் இலங்கை – இந்தியா – மற்றும் தமிழர் புகலிட சேத்து இலக்கியவாதிகளிடத்தில் ஆரோக்கியமான உறவுப்பாலமும் எனக்கு அமைந்தது. கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து, அந்தப்பாலம் மெய்நிகர் அரங்குகளின் ஊடாக மேலும் பலமடைந்திருப்பதாகக் கருதுகின்றேன். நேருக்கு நேர் சந்தித்துப் பேசிப்பழகியிராத பலரும் மெய்நிகர் அரங்கின் ஊடாக எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்திய இலக்கியப் பேராசிரியர் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள். சில தினங்களுக்கு முன்னர் பெங்களுரில் வதியும் படைப்பிலக்கியவாதி பாவண்ணனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கு இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பவளவிழாக்காலம் ஆரம்பமாகிறது என்ற தகவலைச் சொன்னதுடன், அவரைக்கொண்டாடுமுகமாக நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை எனக்குத் தெரிவித்தார்.