25.11.2023 - இன்று காலை போக்கும் வரத்துமாக, மருதமுனை, எருவில், பழுகாமம், அம்பிளாந்துறை, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, தாண்டியடி, பாவற்கொடிச்சேனை ஊடாக பயணம் செய்து சுமார் 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை அடைந்தோம்.
ஆண்டு 01 தொடக்கம் 05 வரை சுமார் 22 மாணவர்களே கல்வி கற்கின்ற, 02 ஆசிரியர்களும், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கொண்ட, போக்குவரத்துப் பாதைகள் அற்ற, மிகவும் வசதிகள் குறைந்த யானைகள் வழித்தடத்திற்கு அருகே இருக்கின்ற, யானைகளினால் அடிக்கடி சேதமாக்கப்படுகின்ற பாடசாலை அது. இன்றைய திருவிழாவில் 07 வயது தொடக்கம் 11 வயதுள்ள 20 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மரங்களையும், விதைகளையும் தெரிந்துகொண்டனர். விதைகளை சேகரித்தனர். புற்றுமண் அரைத்து, அரித்து வைத்திருந்தனர். பசுஞ்சாணம் சேகரித்து வந்திருந்தனர். அவர்களுடன் மரங்கள், பசுமை, உயிரியல்பலவகைமை பற்றியெல்லாம் உரையாடினோம். விதைப்பந்துகள் பற்றி கதைத்தோம். விதைப்பந்துகள் செய்து காட்டினோம். செய்து காட்டியபடியே செய்தனர். சற்று நேரத்தில் நுாற்றுக்கணக்கான விதைப்பந்துகளை செய்து முடித்தனர். விரைவில் அவைகளை தேவையான இடங்களில் எறிய இருப்பதுடன், நுாற்றுக் கணக்கான அழிந்துபோன, சுதேசிய மரங்களையும் அந்த மாணவர்கள் தேவையான இடங்களில் நடுகை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
பகல் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் அவர்களின் பெற்றோர்களில் ஒரு சாரார் அவர்களுக்கான மதிய உணவை பெரிய அடுப்புகள் மூட்டி பாடசாலையின் உயர்ந்த மரங்களின் பச்சை நிழலின் கீழ் சமைத்துக் கொண்டிருந்தனர். உண்மையில் அது திருவிழாவாகத்தான் தெரிந்தது. இந்த விழாவைச் சாத்தியப்படுத்திய ஓராயம் பொறியியலாளர் குருபரன், பாடசாலை அதிபர் பிரபாகரன், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மற்றும் பயணத்தில் உறுதுணையாகவும், துணையாகவும் இருந்த சைக்கிளின் கிறீன் கழக நண்பர் றிபான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இன்று இருநுாறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுடன் விதைப்பந்துகள் எறிய உன்னிச்சை காடுகளுக்குள் சென்றோம். இந்நிகழ்வில் மாணவர்களும், பெற்றோர்களும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பணிப்பாளர் யோகேந்திரா ஜெயச்சந்திரன் அவர்களும், பாடசாலை அதிபர், ஆசிரியர்களும், சைக்கிளிங் கிறீன் நண்பர் றிபான் அவர்களும் பங்குகொண்டனர். வாகனங்கள் செல்ல முடியாத சேறும் சகதியுமான பாதைகளில் ட்ரெக்டர் வண்டியில் மாணவர்கள் பயணம் செய்தனர். விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் விதைப்பந்துகளை எறிந்து மீள்வனவுருவாக்கத்திற்கு உதவியதுடன், காடு படித்தலையும் மேற்கொண்டு, அதன் பின்னர் நடைபெற்ற வனவாக்கம், உயிரியல் பல்வகைமை, தாவரங்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சம்பந்தமான கேள்வி, பதில் கலந்துரையாடலிலும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பின்னர் உன்னிச்சை நீர்த்தேக்கத்திற்கும் விஜயத்தை மேற்கொண்டனர். இதற்கு அனுசரணையாக இருந்த ஓராயம் அமையத்திற்கும், இணைப்பை சிறப்பாக மேற்கொண்ட ஓராயம் அமைய பொறியியலாளர் திரு. குருபரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்வோம்.
தகவல்: குருபரன், கனகசபை